தமிழக அரசுக்கு வரியில்லாத வருவாயை பெருமளவில் ஈட்டித் தரும் துறைகளில் மிக முக்கியமானது கனிம வளத்துறை. இதனை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையை 80 சதவீதம் குறைக்க முடியும் என்கிறார்கள் புவியியலாளர்கள். தமிழகத்தில் பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல், கார்னெட் மணல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, கிராஃபைட், மேக்னசைட், பாக்ஸைட், இரும்புத் தாது, மாலிப்டினம், ப்ளாட்டினம், ரூட்டைல் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான பெருங்கனிமங் களும், பெல்ஸ்பார், குவார்ட்ஸ், சாதாரண கற்கள், செங்கற் களிமண், கிராவல், சவுடு மணல், கிரானைட்ஸ், கால்சைட், சிலிக்கா மணல், ஜிப்சம், டியூனைட் உள்ளிட்ட 80-க்கும் மேற் பட்ட சிறு கனிமங்களும் நிறைந்து கிடக்கின்றன.
கனிமவளத்தை நிர்வகிக்கும் பொறுப்பு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரிடம் இருக்கிறது. கனிம வளங்களை சுரங்கப்பணிகளின் மூலமாக பிரித்தெடுத்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை கடந்த 40 ஆண்டுகளாகச் செய்து வருகிறது டாமின் என்கிற தமிழ்நாடு கனிமவள நிறுவனம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கனிம வளத்துக் கென்று தனி அமைச்சகம் உருவாக்குவோம் என்ற தி.மு.க., அதற்குப் பதில், தொழில்துறையோடு இணைந்திருந்த சுரங்கம் மற்றும் கனிமங்களை மட்டும் பிரித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைத்தது.
தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் இந்த துறை எப்படி இருக்கிறது என்பது குறித்து கனிமவள நிறுவன வட்டாரங்களில் புலனாய்வு செய்தோம். நம்மிடம் மனம் திறந்த டாமின் அதிகாரிகள், ‘’"உலகத்திலேயே தரமான கனிமங்களில் தனி இடம் பெற்ற தமிழக கனிமங்களுக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட் இருக்கிறது. இதனை சந்தைப்படுத்திட சரியான சில முடிவுகளை தி.மு.க. அரசு இந்த ஓராண்டில் எடுத்திருந்தால் அரசின் வருவாய் பல்கிப் பெருகியிருக்கும்.
தமிழக அரசிடம் தற்போது 10 சுரங்கங்களும், 76 குத்தகை சுரங்கங்களும் இருக்கின்றன. 76 குத்தகை சுரங்கங்களில் கருப்பு கிரானைட் 36, பலவண்ண கிரானைட் 31, சிறுகனிமங்களில் 3, பெருங்கனிமங்களில் 6 இருக்கிறது. இவைகளில், எரிபொருள் கனிமங்களில் குருடாயில் மற்றும் இயற்கை எரிவாயுவில் 25 குவாரிகளும், லிக்னைட்டில் 1 குவாரியும் (நெய்வேலி) கொடுக்கப்பட்டி ருக்கிறது.
அதேபோல, அணு கனிமங்களில் (ஹெவி மினரல்ஸ்) குத்தகைக்கு கொடுக்கப்பட்ட 81 குவாரிகளில் 2 மட்டுமே இயங்குகிறது. பெருங்கனி மங்களுக்கு கொடுக்கப்பட்ட 421 குத்தகைகளில் 64 மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. அதேபோல, சிறுகனிமங்கள் 2 வகையாகப் பிரிக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டது. முதல் வகையில் கொடுக்கப்பட்ட 239 குத்தகைகளில் 16 குவாரிகளும், இரண்டாவது வகையில் கொடுக்கப்பட்ட 3022 குத்தகைகளில் 2020 குவாரிகளும் மடடுமே செயல்பாட்டில் உள்ளன. ஆக மொத்தம் 3,789 குத்தகை குவாரிகளில் 2,128 மட்டுமே இயங்குகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் கணக்கிட்டால், 2011-12 ஆண்டில் 835.84 கோடி ரூபாய், 2012-13 களில் 944 கோடி ரூபாய், 2013-14-ல் 969.70 கோடி ரூபாய், 2014-15-ல் 993.65 கோடி ரூபாய், 2015-16-ல் 1007.74 கோடி ரூபாய், 2016-17-ல் 1044.58 கோடி ரூபாய், 2017-18-ல் 1106.28 கோடி ரூபாய், 2018-19-ல் 1186.13 கோடி ரூபாய், 2019-20-ல் 1302.60 கோடி ரூபாய், 2020-21-ல் 969 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் ஈட்டித்தந்துள்ளது கனிம வளத்துறை. கொரோனா தாக்குதலால் கடந்த 2 ஆண்டுகளாக வருவாய் குறைந்துள்ளது. ஆக, கடந்த 40 ஆண்டுகளில் 2019-2020களில்தான் சுமார் 1,300 கோடியை தொட்டிருக்கிறது இந்த துறை.
இந்த 1,300 கோடியில், ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் 400 கோடி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மூலம் 350 கோடி, சுண்ணாம்புக் கற்களை பயன்படுத்தும் சிமெண்ட் நிறுவனங் கள் மூலம் 150 கோடி, இந்த நிறுவனங் களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட நிறு வனங்கள் தரும் 100 கோடி என மொத்தம் 1000 கோடி ரூபாய் இதிலேயே வந்துவிடு கிறது. மீதமுள்ள 300 கோடிதான் தனியாருக்கு சட்டப்பூர்வமாக விடப் படும் குவாரிகளிலிருந்து கிடைப்பவை. சட்டப் பூர்வ குவாரிகளுக்கு பல்வேறு விதிகள் மூலம் தடை போட்டுவிடுகிறது அரசு. அதேநேரம், சட்டவிரோத கனிம கொள்ளைகளைத் தொடர்ந்து அனுமதிப்பதால் வருசத்துக்கு பல லட்சம் கோடிகள் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது.
பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் இருக்கும் பகுதிகளில் 300 மீட்டரில் குவாரிகள் நடத்தக் கூடாது என்ற விதியை தற்போது 500 மீட்டராக அதிகரித்துள்ளது தி.மு.க. அரசு. இதனால் சுமார் 1000 குவாரிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த குவாரிகள் சட்டவிரோதமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அதேபோல, வனவிலங்குகள் உள்ள வனப் பகுதியில் குவாரிகள் நடத்தக்கூடாது என்கிற ஒன் றிய அரசின் சட்டம். இந்த சட்டத்தை வன விலங்குகள் இல்லாத வனப்பகுதிகளிலும் தி.மு.க. அரசு அமல்படுத்துகிறது. அந்த பகுதிகளில் சட்டவிரோத குவாரிகள் ஜாம் ஜாம்மென்று நடக்கிறது. இந்த சட்ட விரோத குவாரிகள் மூலம் பல ஆயிரம் கோடிகள் புழங்கு கின்றன. ஹெவி மினரல்ஸ், மேஜர் மினரல்ஸ், மைனர் மினரல்ஸ்களில் சட்டத்துக்குட்பட்டு அதிகமான குவாரிகளை அனுமதிப்பதன் மூலம் வருசத்துக்கு 3 லட்சம் கோடி ரூபாயை அரசுக்கு வருவாயாக கனிமவளத்துறை ஈட்டித் தர முடியும். இதில் ஹெவி மினரல்ஸ்களை மட்டும் முறையாக அரசு ஏற்றுமதி செய்தாலே சுமார் 1 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும். தி.மு.க. அரசு இத்தகைய முடிவுகளை எடுக்க மறுப்பதால் அரசுக்கு வரவேண்டிய வருவாய் ஆட்சியாளர்கள், உயரதிகாரிகள், தனிநபர்களுக்குப் போகிறது''’ என்கிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 4 மாதங்களுக்கு முன்பு அதிரடி வாகனச் சோதனையில் குதித்தார் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ். ஓவர்லோடு மற்றும் நடைச்சீட்டு மோசடி என 17 லாரிகளை மடக்கிப்பிடித்தார். லாரிகளை பறிமுதல் செய்ததுடன் சம்மந்தப்பட்ட குவாரிகளை சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு நிர்மல்ராஜ் உத்தரவிட, அதன்படி சீல் வைக்கப்பட்டது. இழுத்து மூடப்பட்ட குவாரிகளில் பெரிய மனிதர்களின் குவாரிகளும் அடக்கம். இதனால் உற்பத்தி முடங்கியதுடன், மற்ற குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு இயங்கின. ஓவர்லோடு அடிப்பதை லாரி உரிமையாளர்களும் நிறுத்தினர். இதனால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகளுக்கு தேவையான எம்.சாண்ட், சவுடு, ஜல்லிகள் என அனைத்துப் பொருட்களின் விலைகளும் அசுர வேகத்தில் உயர்ந்தன. சாமானியர்கள் திணறினார்கள்.
இந்த சூழலில்தான், சீல் வைக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் உட்பட அனைத்து குவாரி ஓனர்களும் இயக்குநர் நிர்மல்ராஜை சந்தித்து முறையிட்டார்கள். அடுத்த சில நாட்களில் சீல் வைக்கப்பட்ட குவாரிகளைத் திறக்க காஞ்சி மாவட்ட நிர்வாகத்துக்கு ஆணை பிறப் பித்தார் நிர்மல்ராஜ். இப்போது குவாரிகள் ஓடத் துவங்கியிருக்கின்றன. சீல் வைக்கப்பட்ட குவாரிகள் திறக்கப்பட்டதற்கான காரணங்கள் சொல்லப் படவில்லை. காஞ்சி மாவட்டத்தில் மட்டுமே ஒரு நாளைக்கு 60 கோடி ரூபாய் அரசு கஜானாவுக்கு வராமல் வெளியேறுகிறது.
நிர்மல்ராஜின் செயல்பாடுகளைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பெரும் போராட்டத்தை நடத்தினர். ஆனால் நடவடிக்கை இல்லை. மேலிட செல்வாக்கால் நிர்மல்ராஜ் நிம்மதியாக இருக்கிறார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தீனனிடம் நாம் பேசியபோது,’"சட்டத்திற்கு புறம்பாக குவாரிகளின் செயல்பாடுகள் இருப்பதால் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது. ஓவர் லோடு ஏற்றி வந்ததால் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், என்ன காரணமோ தெரியாது, இல்லீகல் குவாரிகள் திறக்க அனுமதித்திருக்கிறார் நிர்மல்ராஜ். அதேபோல பறிமுதல் செய்யப்பட்ட எங்களது லாரிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விடுவிக்கப்படவில்லை.
சட்டத்திற்கு புறம்பாக ஓவர்லோடு ஏற்றி வந்ததால் எங்கள் மீது கிரிமினல் ஆக்சன் எடுக்க உத்தரவிட்ட நிர்மல்ராஜ், அந்த ஓவர் லோடை ஏற்றி அனுப்புகிற, விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் குவாரி ஓனர்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடவில்லை?, இதன் பின்னணியில் நடப்பது என்ன? குறிப்பிட்ட ஒரு குவாரியில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என புகார் கொடுக்கிறோம். ஆனால் எந்த விசாரணையும் இல்லை. அவர் இருக்கும் வரை இந்த துறை விடுபடுவது கடினம்''’என்கிறார் தீனன்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிய நிர்மல்ராஜை தொடர்புகொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவில்லை.
கல்குவாரி உரிமையாளர் ஒருவர் தமிழக முதல்வர், தலைமை நீதிபதி, சுரங்கத்துறை அமைச்சர், நிதியமைச்சர், தலைமைச்செயலாளர் என பலருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார். அதில், "சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் குவாரிகளால்தான் கட்டுமானப் பணிகளின் விலை அதிகரிக்காமல் இருக்கிறது. இல்லீகல் மைன்ஸ் மூலம் எடுக்கப்பட்ட பொருட்களால்தான் நீதிமன்றங்கள் கட்டப்பட்டன, ஆனால் எங்களை மட்டும் திருடர்கள் போல் பார்க்கிறீர்கள். எங்களால் அரசுக்கு வருவாய் அதிகம். அதனால் இதனை அனுமதிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இல்லீகல் மைன்ஸால் ஒரு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு மட்டுமே 100 கோடி ரூபாய் புழங்குகிறது. தமிழகம் முழுவதும் 1000 முதல் 1500 கோடி ரூபாய். இவை அத்தனையும் அரசு கஜானாவுக்கு வராமல் மேலிடங்களுக்கு செல்கின்றன. ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்ட ஏ.டி.மைன்ஸ் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் இருக்கிறது. ஆனால், அவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்படுவதில்லை.
இது ஒருபுறமிருக்க, ஆற்று மணலுக்கான தடையை நீக்கி சட்டப்பூர்வ மணல் குவாரிகளை திறக்க அமைச்சர் துரைமுருகன் முயற்சித்து வருகிறார். இந்த மாதத்தில் இது நடைமுறைக்கு வரவிருக்கிறது. முந்தைய ஆட்சியில் எடப்பாடியால் அனுமதிக்கப்பட்ட எம்.சாண்ட் குவாரிகள் இன்றைக்கு 5,000 எண்ணிக்கையில் இயங்கி வருகின்றன. அதன் உரிமையாளர்கள் அமைச்சர் தரப்புக்கு மாத கட்டிங் தந்தபடிதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சட்டப்பூர்வ மணல் குவாரிகள் திறக்கப்படும்போது எம்.சாண்ட் விற்பனையில் சரிவு ஏற்படும் என்பதால் அதன் உரிமையாளர்கள், மணல் திறப்பை தடுக்க அமைச்சர் தரப்பிடம் பேரம் பேசி வருகின்றனர். அதற்கேற்ப இரு மடங்காகத் தரும் முயற்சியில் குதித்திருக்கிறார்கள்.
சட்டவிரோதமாக நடக்கும் கனிம குவாரிகளை சட்டப்பூர்வமாக்கி, சுற்றுச்சூழல் களுக்கு பாதிப்பில்லாமல் விதிகளைத் தளர்த்தி, கனிம வளங்களை விற்பனை செய்தால் அரசு கஜானா நிரம்பி வழியும். அரசுக்கு இருக்கும் தற்போதைய 5 லட்சம் கடன் சுமையையும், அதன் மீதான வட்டிச் சுமையையும் விரைந்து அடைத்து விடமுடியும். அதற்கேற்ப உறுதியான முடிவை ஆட்சித் தலைமை எடுக்க வேண்டும்.