தி.மு.க. முன்னெடுத்துள்ள "ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை எப்படி போகிறதென்று ஆம்பூர் தொகுதியைச் சேர்ந்த ஒ.செ. ஒருவரிடம் பேசியபோது, "உறுப்பினர் சேர்க்கை நடக்கும் இடங்களில் எங்கேயும் பெரிதாக எதிர்ப்பு வரவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று எம்.எல்.ஏ., சேர்மன்னு யாரும் கூட வர்றதில்லை, அவுங்க வந்தா ஏதாவது சில இடங்களில் சிக்கல் வந்திருக்கும். இரண்டாவது, மகளிர் உரிமைத்தொகை வரலன்னு சொல்றவங் களை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்ல மனு தரச்சொல்லி வழிகாட்டறோம். இதனால கட்சி மேல அவுங்களுக்கு நம்பிக்கை வருது" என்றார்.
திருவண்ணாமலையை அடுத்த கீழ் பென்னாத்தூர் தொகுதி கிளைக் கழக நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "பெண்களிடம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு உள்ளது. நாங்க முதல்ல தி.மு.க. உறுப்பினர்களின் குடும்பத்தைத்தான் அணுகினோம், இப்போதுதான் மற்றவர்களிடம் கேட்கிறோம்'' என்றார்.
ராணிப்பேட்டை தொகுதியிலுள்ள ஒ.செ.விடம் பேசியபோது, "அ.தி.மு.க. அனுதாபி, அ.தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகளை தவிர்க்கச் சொல்லிட்டோம். அவுங்க ஏதாவது பேசி வீடியோ எடுத்துப் போட்டுடுவாங்களோங்கற பயம். ஆனால் எங்களுக்கு ஆச்சர்யம் என்னன்னா, ஒரு அ.தி.மு.க. கிளைக்கழக நிர்வாகியின் மனைவியே, "ஏன் எங்க வீட்டுக்கு வந்து எதையும் கேட்கல?'ன்னு கேட்டாங்களாம். "நீங்க அ.தி.மு.க.வாச்சே?'ன்னு சொன்னதுக்கு, 'அவர் அந்த கட்சியிலயே இருக்கட்டும், நான் உங்க கட்சிக்கு வர்றேன்'னு சொல்லி உறுப்பினரா சேர்ந்திருக்காங்க. காலேஜ் படிக்கற பொண்ணுக்கு உதவித்தொகை வாங்கும் அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவாளர்கள் வீடுகளிலுள்ள பெண்களும் தி.மு.க.வுல சேர்ந்திருக்காங்க. அதனால் இப்போ அ.தி.மு.க. அனுதாபிகளின் வீடுகளுக்கும் போகிறோம்'' என்றார்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்த நாடு பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்க கிராமங்களுக்குள் போனபோது, "ஏம்பா நீங்க வந்தா எங்களுக்கு நல்லது செய்வீங்கன்னு நினைச்சுதான் ஓட்டு போட்டோம். எம்பொண்ணு கல்யாணத்துக்கு தாலிக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ.50 ஆயிரம் பணமும் கிடைச்சுடும்னு நினைச்சா... மொத்தத்தையும் நிறுத்திட்டீங்களே?'' என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். இதேபோல ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில், "மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை, ஒன்றியம், தாலுகா பிரிப்பதெல்லாம் கிடப்பில் உள்ளது' என்ற குறைகளைக் கூறியிருக்கிறார்கள்.
திருமயம் தொகுதியிலோ, ரகுபதி அமைச்சரான பிறகு கனிமங்கள் கொள்ளை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகக்கூறி எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் கிடைக்கவில்லையென்றும் குறைகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். கலைஞரின மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், இலவச பஸ் பயணம், மாணவர்களுக்கான மாதம் ரூ.1000 போன்ற திட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தபோதும், முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட இலவசங்கள் நிறுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள்.
சென்னை கிழக்கு மா.செ.வான பி.கே.சேகர்பாபுவின் பகுதிகளில், உறுப்பினர் சேர்க்கையில் 92 சதவீதம் பணியை முடித்துள்ளனர். அதில் முதல்வரின் தொகுதியில் 100 சதவீதம் முடித்துள்ளனர். மக்களிடமே சென்று குறைகளைக் கேட்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வடசென்னை மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கேட்பவர்களுக்கு உடனடியாக கேம்ப் அமைத்து, அதை கிடைக்கும்படி செய்வதால் பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவருகிறது.
அதேபோல குடிசைப் பகுதிகளில் பட்டா, கழிவுநீர் வடிகால் வசதி பிரச்சனையை அதிகம் எழுப்புவதால், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்வதற்கான எண்களை வழங்கி, குறைகளைப் பதிவுசெய்வதால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் வசிப்பதால், அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
மதுரையின் 63வது பூத் கமிட்டி நிர்வாகியான பாபுவிடம் பேசியபோது, "சார் எங்கள் பகுதியில் 1300 வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை 650 வாக்காளர்களை உறுப்பினர்களாக்கியிருக்கிறோம். அவர்களில் 54 பேர், அரசு வேலையிலிருப்ப தால், "ஓரணியில் தமிழ்நாடு' திட்டத்தில் மட்டும் சேர்கிறோம், கட்சி உறுப்பினர் வேண்டாம்' எனக் கூறிவிட்டார்கள். பிராமணர்கள் தவிர்த்து மற்றவர்கள் ஆர்வத்துடன் சேர்கிறார்கள்'' என்றார்.
அதே பகுதியில் நாகராஜன் என்பவர், "முதலில் நான் எம்.ஜி.ஆர். ரசிகன். இப்பதான் முதன்முதலில் தி.மு.க. உறுப்பினரானேன். முதல்வர் ஸ்டாலின் எல்லோரையும் அரவணைத்துப் போகிறார் தம்பி. ரொம்ப காலமாக எங்கள் ஏரியாவில் பட்டா மாறுதல் செய்யாமலேயே இருந்தது. "உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 10 நிமிடத்தில் வீட்டிற்கான பட்டாவை மாற்றிவிட் டேன். மின்இணைப்பு பெயர் மாற்றமும் செய்து விட்டேன். தம்பி, முதல்வர் ஸ்டிக்கர் இருந்தா எங்க வீட்டில் ஒட்டுங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். அடுத்த நாளே வந்து ஒட்டிவிட்டார்கள். இப்ப ஏதோ வீட்டிற்கே பாதுகாப்பா இருக்கிற மாதிரி உணர்கிறேன் தம்பி" என்றார்.
(வரும் இதழில் மாவட்டங்கள் தொடரும்...)
- ராஜா, பகத்சிங், அண்ணல், அருண்பாண்டியன்