காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள விவகாரம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் கர்நாடக அரசையும் அதற்கு ஒத்து ஊதும் மத்திய பா.ஜ.க. அரசையும் கண்டிக்கும் வகையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க.வின் முதன்மைச் செய்தித் தொடர்பு செயலாளரும் நதிநீர் இணைப்புக்காக நீண்ட காலமாகப் போராடி வருபவருமான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

மேகதாது அணைத் திட்டம் சுமார் 38 ஆண்டுகளின் தொடர்ச்சிதானே தவிர, புதிதாக சதிகள் இதில் இல்லை என கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறதே?

dam

Advertisment

கர்நாடகத்தின் முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸிடம் மேகதாது திட்டத்தை அதிகாரிகள் சொன்னபோது அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம், தமிழகத்தின் நலன்களுக்காக காவிரியில் அதிக நீரை திறந்து விடுவதற்கும் தயாராக இருந்த அவர், அதுகுறித்து எம்.ஜி.ஆருடனான சந்திப்பில் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். ஆனால், எம்.ஜி.ஆர். அதனை சரியாக டீல் பண்ணாததால் தமிழகத்துக்கு அதிக நீர் கிடைக்காமல் போனது. தேவராஜ் அர்ஸும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால் இதனை என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். அதன்பிறகு குண்டுராவ் முதல்வராக இருந்த காலத்தில் (1980) தான் மேகதாது அணை திட்டமிடப்பட்டு, பல ஆண்டுகளாக அதன் தயாரிப்பு பணியில் அதிகாரிகள் இருந்தனர். திட்டத்தின் தயாரிப்பு பணி 2012-ல் வேகமெடுத்து, 2015-ல் முழுமையாக தயாரித்து முடிக்கப்பட்ட நிலையில், அணைகட்டுவதற்கு முதல்கட்டமாக 25 கோடி ரூபாயை ஒதுக்கினார் சித்தராமையா. இதனை கண்டித்து தமிழகத்தில் எழுந்த வலிமையான எதிர்ப்புக்குரல்களாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளாலும் திட்டத்தை கிடப்பில் வைத்திருந்தனர். தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கும் தற்போதைய பா.ஜ.க. அரசை பயன்படுத்தி மத்திய நீர்வளத்துறையின் ஒப்புதலை பெற்றிருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. முதல்வரான சமயத்தில் பிரதமர் மோடியை குமாரசாமி சந்தித்தபோதே மேகதாது அணை கட்டுவதற்கான சதிகள் துவங்கிவிட்டன. தமிழகத்துக்கு எதிராக 38 ஆண்டுகளாக போடப்பட்ட சதிகளின் தொடர்ச்சிதான் இது. கர்நாடகாவின் சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்காத ஒரே முதல்வர் தேவராஜ் அர்ஸ் மட்டுமே!

radhakrishnanகாவிரியின் குறுக்கே அணைகட்டுவது மின்சாரம் தயாரிப்பதற்காகத்தான். இதனை தமிழகம் எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை என்கிறதே கர்நாடகா?

காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களில் 4 மிகப்பெரிய அணைகளை கட்டத் தீர்மானித்துள்ளது. மேகதாது அணைக்கான விரிவான திட்டத்தினை கடந்த ஜூன் 7-ந்தேதி மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்து தற்போது ஒப்புதலையும் பெற்றுவிட்டது. மற்ற அணைகளுக்கான ஒப்புதலையும் பெறவிருக்கிறது. மேகதாது அணையின் உயரம் 1546 அடி. இதில் 75 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க முடியும். மற்ற அணைகளும் கட்டிமுடிக்கப்பட்டால் 171.73 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க முடியும். நமது மேட்டூர் அணையின் கொள்ளளவை விட இரு மடங்கு இது அதிகம். மின்சாரம் தயாரிக்க என்பதெல்லாம் பித்தலாட்டம்!

Advertisment

அணைகள் கட்டுவதன் மூலம் தமிழகம் சந்திக்கும் அபாயங்கள் என்ன?

தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் சொந்தமானது காவிரி. காவிரியின் குறுக்கே எந்த அணையையும் கட்டக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தீர்ப்புகளுக்கு எதிராக அணை கட்டத்துடிக்கிறது கர்நாடகம். கபினி மற்றும் அர்க்காவதி அணையிலிருந்து நிரம்பி வழியும் நீரை தேக்கி வைக்கவே நம்முடைய ஒகேனக்கல்லிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் மேகதாதுவை கட்டவிருக்கின்றனர். இந்த அணை கட்டிமுடிக்கப்பட்டால் தமிழகத்தின் பாசனப் பரப்பு கருகி, வறண்ட பூமியாகிவிடும். குடிநீருக்கும் தமிழகம் கையேந்தும் நிலை உருவாகும். டெல்டா மாவட்டங்களின் உணவு உற்பத்தி பாதிக்கும். 6 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் நீர்ப்பாசன பரப்பளவு கொண்ட கர்நாடகத்தில் தற்போது 25 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், காவிரியை நம்பி 5 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் இருந்த 20 லட்சத்துக்கும் அதிகமான பாசனப் பரப்பு, தற்போது வெறும் 15 ஆயிரம் ஏக்கராக சுருங்கி விட்டது. மேகதாது கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்.

காவிரி ஆணையத்தில் தமிழகமும் ஒரு உறுப்பினராக இருக்கும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சகம் தந்துள்ள ஒப்புதல் தமிழகத்துக்கு தெரியாமல் போனது எப்படி?

ஆணையத்தின் தலைவர் மசூத், ""எங்களுக்குத் தெரியாமலே நீர்வளத்துறையின் ஒப்புதலை வாங்கியுள்ளது கர்நாடகா. ஆணையத்தை ஆலோசிக்காமல் ஒப்புதல் தந்திருப்பது தவறு'' என சொல்லியிருக்கிறார். அதனால், தமிழக அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், காவிரியில் கர்நாடகா செயல்படுத்த துடிக்கும் ரகசிய சதிகளை அறிந்து முறியடிக்கும் ஆற்றல் எடப்பாடி அரசுக்கு இருந்திருக்க வேண்டும். கர்நாடகத்தில் அரசியல் வெற்றிகளைப் பெறவேண்டியே தமிழகத்துக்கு நயவஞ்சகம் செய்கிறது மத்தியிலுள்ள மோடி அரசு. கர்நாடகாவும் மத்திய பா.ஜ.க.வும் இணைந்து காவிரியில் நாடகம் நடத்துகின்றன. அதனை வேடிக்கை பார்க்கிறது எடப்பாடி அரசு.

-சந்திப்பு : இரா.இளையசெல்வன்