மணல் மற்றும் மண் கிடைக்காததால் தமிழகத்தில் கட்டுமானத்துறை முற்றிலும் முடங்கிப் போய்க் கிடப்பதாகக் குற்றம்சாட்டுகிறது சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கம். இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இச்சங்கத்தின் நிறுவனர் தலைவர் பொறியாளர் கோ.வெங்கடாச்சலம், "ஆற்று மணல், சவுடு மண் உள்ளிட்ட குவாரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், எம்.சாண்ட் மணலின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கன அடி எம்.சாண்டின் விலை தற்போது 75 ரூபாயாக அதிகரித்துவிட்டது.
இந்த அதிகரிப்பால் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருந்த கட்டுமானப் பணிகள் ஸ்தம்பித்துக் கிடக்கின்றன. சாமானியர்களின் வீடு கட்டும் கனவும் பொய்த்துப்போயிருக் கிறது. கட்டுமானப் பணிகள் முடங்கிவிட்டதால், தமிழக அரசின் உள்கட்ட மைப்பு வளர்ச்சித் திட்டத்திலும் இலக்கை எட்ட முடியாமல் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ஏழைகளுக்கான கலைஞர் கனவு இல்லம் கட்டும் திட்டமும் முடங்கும் அபாயத்தில் இருக்கிறது''’என்கிறார் ஆவேசமாக.
இதுகுறித்து தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மணல் மற்றும் சவுடு மண் குவாரிகள் திறக்கப்படாததிலுள்ள சிக்கல்களை அரசின் கவனத்துக்குத் துறையின் உயரதிகாரிகள் கொண்டு சென்றனர். இதனையடுத்து, நீதிமன்றங்களில் இருந்த தடையை அரசு நீக்கி சில உத்தரவுகளைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே ஈ.டி. ரெய்டுக்கு உள்ளான எஸ்.ஆர்.குரூப்பால் அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தமிழக முதல்வர் மணல் அள்ளும் உரிமையை எஸ்.ஆர்.குரூப்புக்கு தருவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், சவுடு மண் அள்ளும் காண்ட்ராக்ட்டை ராஜப்பா குரூப்புக்கு வழங்கியுள்ளனர். மேற்கு மண்டலத்தில் சவுடு மண் அள்ளும் பொறுப்புக்கு ராஜப்பா குரூப்பின் இன்சார்ஜாக பொன்னர்-சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு ராஜப்பா குரூப்பே இன்சார்ஜ் ஆட்களை நியமித்து கிராவல் குவாரிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி. மைன்ஸ் பிரியா என்பவரால் பல குழப்பங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால் தஞ்சை மாவட்டத்தில் எந்தவிதமான கிராவல் குவாரியும் திறக்கப்படாமல் அதே நிலை நீடித்துவருகிறது.
தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இந்த மண் பிசினஸ் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது. மணல் மற்றும் மண் அள்ளத் தடை இருந்த கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் திருட்டு மண் மற்றும் மணல் கடத்தல் விற்பனை கன ஜோராக நடந்தன. இந்த கடத்தலை மாவட்ட கலெக்டர் உட்பட துறையின் அதிகாரிகளின் துணையுடன் ஆளும் கட்சியினர் (மா.செ. முதல் ஒ.செ. வரை) செமையாக நடத்தி வந்தனர்.
ஆளும் கட்சியினருக்கு கிடைத்து வந்த லாபத்தில், அதிகாரிகளுக்குப் போக வேண்டியது முறையாக போய்க்கொண்டிருந்தது. இதனால், மண் மற்றும் மணல் கடத்தல் தடுக்கப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிசினஸில் ருசி கண்ட ஆளும்கட்சியினர், இந்த பிசினஸ் தனி நபரிடம் செல்வதை ரசிக்கவில்லை. தனியார் குரூப்பால் நிய மிக்கப்பட்டவர்கள் மண் அள்ள ஸ்பாட்டுக்குச் செல்லும்போது லோக்கல் கட்சிக்காரர்கள் இதனை எதிர்ப்பதால், விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதியை சந்தித்து ராஜப்பா முறையிட்டுள்ளார். மணல், மண் விவகாரத்தில் விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், கட்டுமானத்துறையில் தனி நபர்கள் வீடு கட்டுவது மட்டுமல்ல; அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள், சாலைப் பணிகள் என மண் மற்றும் மணலை நம்பியுள்ள பல்வேறு பணிளும் முடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்''’என்று விரிவாக சுட்டிக் காட்டுகிறார்கள்.
"மணல், மண் விவகாரத்தில் இப்படிப்பட்ட சிக்கல்கள் என்றால், அங்கீகாரமும் அனுமதியும் பெற்று நடத்தப்பட்டுவரும் கல் குவாரிகள் பிசினஸிலும் சிக்கல்கள் முளைத்துள்ளது' என்கிறார்கள்.