பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 20-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்த-ல் நான்குமுனைப் போட்டி கூர்கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள வெகுசில மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் பஞ்சாபில், காங்கிரஸ் மீண்டும் தன் வெற்றிக்கொடியைப் பறக்கவிடுமா?
அதைப் பார்ப்பதற்குமுன் கடந்த தேர்த லில் காங்கிரஸ் எப்படி வெற்றிக்கோட்டைத் தொட்டது? அதன்பின்பு தற்போதுவரை நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம்.
2017 -சட்டமன்றத் தேர்தலில் அதற்கு முந்தைய பத்தாண்டுகளாக வென்றுவந்த அகாலி தளம், பா.ஜ.க. கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி மொத்தமுள்ள 117 சீட்டுகளில் 77 சீட்டு களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ். ஆட்சியிலிருந்த அகாலிதளம்- பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான மனநிலை, போதைப் பொருள் நடமாட்டம், அகாலி தளம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மாநிலத்தின் அதிகரித்துவரும் கடன் போன்றவை அம்ரீந்தர் சிங்கின் வெற்றிப் பாதையை ராஜபாதையாக மாற்றின.
ஆனால் இன்றைக்கு பஞ்சாப்பில் காங்கிரஸின் நிலை என்ன? கடந்த ஆட்சியில் குறைசொல்லப்பட்ட போதைப் பொருள் நட மாட்டம் தற்போதும் இருக்கிறது. வேலை வாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது, லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு, பொற்கோவிலில் புனித கிரந்தத்தை இழிவுபடுத்த முயன்ற நபர் கொலை என ஏகப்பட்ட பிரச்சினைகள். போதாதற்கு போன தேர்தலில் முன்னணியில் நின்று காங்கிரஸின் வெற் றித் தேரை வழிநடத்திய அம்ரீந்தர் சிங், சித்துவின் குடைச்சலால் கட்சியை விட்டு வெளியேறி, தனிக்கட்சி தொடங்கி பா.ஜ.க.வுடன் கூட்டணியும் அமைத்திருக்கிறார்.
கடந்த தேர்தலில் இல்லாத வலுவுடன் ஆம் ஆத்மி கட்சி எழுச்சிபெற்று வந்திருக்கிறது. சித்து திடீர் திடீரென காங்கிரஸ் தலைமையின் மீது குற்றச்சாட்டுகளைக் கூறியபடி பாய்வது கட்சியின் நம்பகத்தன்மையை பாதித்திருக்கிறது. ஒரேயொரு சாதகம், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்ற பின்னும் பா.ஜ.க. மீதும் பிரதமர் மோடி மீதும் விவசாயிகள் கோபம் தீராதிருப் பது. ஒருவேளை தேர்தலில் காங்கிரஸ் வென்றா லும், அம்ரீந்தர் சிங்குக்குப் பின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சன்னியை, காங்கிரசிலிருக்கும் கோஷ்டிகள் முதல்வராகத் தொடரவிடுமா என்பதும் சந்தேகம்தான்.
பலவீனங்கள் இருந்தாலும், காங்கிரஸ் இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது.
டெல்லியை வென்றது முதலே பஞ்சாப்பைக் குறிவைத்து வரும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், இந்த முறை பஞ்சாபை வென்றே தீருவதென களமிறங்கியிருக்கிறார். அதற் கேற்ப சில கருத்துக்கணிப்புகள் மெஜாரிட்டி நெருக்கமாக ஆம் ஆத்மியே அதிக இடங்களை வெல்வதற்கு வாய்ப்பு என கணித்திருக்கின்றன.
அந்தக் கணிப்பை மெய்யாக்குவதுடன், மெஜாரிட்டியையும் தக்க வைக்க, 300 யூனிட் வரை இலவச மின்சாரம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பஞ்சாப் முழுவதும் சுகாதார நிலையங்கள், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்தம் இனி அவமதிக்கப்படாமல் பாதுகாத் தல், ஊழல், போதைப் பொருளுக்கு முற்றுப் புள்ளி, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என தாராளமான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசியிருக்கிறார். அதற்கேற்ப ஆம் ஆத்மியின் பஞ்சாப் தலைவர்களுள் ஒருவரான ராகவ் சாதா, "காதலர் தினமான பிப்ரவரி 14-ல் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான காதலை பஞ்சாபியர் தங்கள் வாக்குகளில் வெளிப்படுத்து வார்கள்''’என பிரச்சாரம் செய்கிறார்.
பஞ்சாப் விவசாயிகளின் பிடிவாதம், பிரதமரையே வழிமறித்தது போன்றவற்றால் பெரிய நம்பிக்கை பஞ்சாப் பா.ஜ.க.வினரிடம் இல்லை. இருந்தாலும் மோதிப் பார்த்துவிடுவது என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. அம்ரீந்தரின் புதிய கட்சியான லோக் காங்கிரஸ் வேறு வழியில்லாததால் பா.ஜ.க. ஒதுக்கும் சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு களமிறங்கும்.
பா.ஜ.க.வின் வழக்கமான கூட்டணியான அகாலி தளம், வேளாண் சட்டங்கள் விவகாரம் எழுந்ததுமுதலே பா.ஜ.க.வைக் கைகழுவிவிட் டது. அதனுடனான கூட்டணியின்போது 25 இடங்களுக்கு உள்ளேயே பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும். சுக்தேவ் சிங்கின் திண்ட்சா சிரோன்மணி அகாலிதள் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக் கும் பா.ஜ.க. இம்முறை தாராளமாக 80 இடங் களில் போட்டியிட முடிவுசெய்துள்ளது.
சுக்பீர் சிங் பாதலின் சிரோன்மணி அகாலிதள் கட்சி, இம்முறை மாயா வதியின் பி.எஸ்.பி. கட்சி யுடன் இணைந்து தேர் தலை வெல்ல வியூகம் வகுத்துள்ளது. பஞ்சாப் பின் மொத்த மக்கள் தொகையில் 32 சதவீதம் பட்டியலின சமூகத்தினர். அவர்கள் ஒரே திரட்சி யாக வாக்களித்து, சிரோன்மணி கட்சியின் வாக்குகளும் கிடைத்தாலே கணிசமான இடங்களை வென்றுவிடலாம் என்பது வியூகம்.
போதாக்குறைக்கு வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடிய அமைப்புகளில் ஒன்றான சன்யுக்த் சமாஜ் மோர்ச்சாவும் தேர்தலில் கள மிறங்குகிறது. இது விவசாயிகளின் வாக்குகளில் கணிசமானவற்றை விழுங்கினால் இழப்பென காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கவலைப்படுகின் றன. மாறாக, பா.ஜ.க. இதை நல்லதொரு வாய்ப்பாகப் பார்க்கிறது. எல்லா வியூகத்துக்கும் அப்பால் வாக்காளனின் வியூகமென ஒன்றிருக் கிறது. அது வெட்ட வெளிச்சமாக மார்ச் 10, 2022 வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.