கடந்த 3 நாட்களாக "இதோ திறக்கிறோம், நாளைக்கு திறக்கிறோம்...' என நாட்களை கடத்தி கடைசியாக ஏப்ரல்-1 அன்று, திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே காங்கிரஸ் தேர்தல் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.
"காலை 7 மணிக்கு அலுவலகம் திறக்கப்பட உள்ளது' என காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முதல்நாள்தான்... தி.மு.க. மாவட்டச் செயலாளர் கே.என்நேரு வுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். அவரும் சரியாக ஏழு மணிக்கு அலுவலகம் திறக்க வந்துள்ளார். அப்போது அலுவலகத்தில் 4 காங்கிரஸ் தொண்டர்களே இருந்துள்ளனர்.
வேட்பாளர் இல்லாததால் கோபமடைந்த கே.என்.நேரு அங்கிருந்தவர்களிடம் "உங்கள் வேட்பாளர் எங்கே? வந்தவுடன் சொல்லுங்க' என கோபமாகக் கிளம்பி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் உள்ள குரு ஓட்டலுக்கு காபி சாப்பிடச் சென்றுவிட்டார்.
நேரு வந்து கோபமாகி சென்ற தகவல் தெரிந்து பத்து நிமி டத்தில் அங்கு வந்த வேட்பாளரிடம்... "அலுவலகம் திறக்கவே சரியான நேரத்துக்கு வர முடியவில்லையா? உங்களது பிரச்சாரத் திற்கு நான் உங்களை இழுத்துச்செல்ல வேண்டியுள்ளது' என கடிந்துகொண்டே திருநாவுக்கரசருடன் உறையூர் பகுதியில் வாக்குகள் சேகரிக்கச் சென்றுவிட்டார். "தி.மு.க. மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத திருநாவுக் கரசர், எப்படி மீதமுள்ள நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்போகிறார்' என அவரது கட்சித் தொண்டர்களே விழி பிதுங்கி நிற்கின்றனர்.
கடந்த 3 நாட்களாக தொண்டர்களுக்குச் செலவு செய்யவே பணம் கொடுக்காததால் நேரு டென்ஷனாகியிருக்கிறார். "திருநாவுக்கரசர் சென்னையில் ஏதோ ஒரு இடத்தை விற்று தான் தேர்தலுக்கு பணத்தை தயார் செய்துகொண்டிருக்கிறாராம். அதான் பிரச்சாரம் எதுவும் இல்லாமல் ஓட்டல் அறையிலே முடங்கியிருந்தார்' என்கிறார்கள் கதர்ச்சட்டையினர்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு தேவேந்திர குலத்தை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் திருச்சியில் இதே சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொன்முருகேசன் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் "திருநாவுக்கரசர் அடித்த போஸ்டர்களில் அனைத்து தலைவர் களின் படம் போடும்போது தியாகி இம்மானுவேல் சேக ரன் படம் போட வில்லை' என எதிர்ப்பு தெரிவித்து "படம் போடவில்லை என் றால் எதிர் பிரச்சாரம் செய்வோம்' என வெடிக்கிறார்கள்.
இப்படி திருநாவுக்கரசருக்கு பண ரீதியாக பிரச்சினையும், கூட்டணியில் உள்ள கட்சியினரின் இடையே நெருக்கடியும் அதிகரித்துவந்தாலும், "அவருடைய அனுபவத்தை வைத்தே இதை எல்லாம் சரி செய்துவிடுவார்' என நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அவர் ஆதரவாளர்கள்.
திருச்சி எம்.பி. தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மணி கண்டம் ஒன்றிய பகுதியில் அ.தி.மு.க. கூட்டணியைச் சார்ந்த தே.மு.தி.க. வேட்பாளர் தர்மபுரி டாக்டர் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் வளர்மதி மற்றும் கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மாலை நேரத்தில் முடிகண்டம், மேக்குடி, துறைக்குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளுக்குச் சென்று விட்டு பின்னர் அளுந்தூர் ஊராட்சியை சார்ந்த செவ்வந்தியாணிபட்டி என்ற கிராமத்திற்கு இரவு எட்டு மணிக்குச் சென்றனர். கேள்விப்பட்ட பொதுமக்களும் அவர்களுக்காக காத்திருந்தனர்.
ஊருக்குள் நுழைந்த அமைச்சர் வளர்மதி காரிலிருந்து கீழே இறங்கியவுடன் திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு, ""கடந்த ஒரு வருடமாக சரியாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளே இல்லை. கஜா புயலால் செவ்வந்தியாணிப்பட்டி கிராமம்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டது... ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
அமைச்சரான பின்பு நீங்கள் ஒருமுறைகூட இந்த கிராமத்திற்கு வரவில்லை. இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள். உங்களுக்கு நாங்கள் ஓட்டுப் போடமாட்டோம். இந்த கிராமத்தை விட்டு திரும்பிச் செல்லுங்கள்'' என்று பொதுமக்கள் ஆவேசமாய் கூறினார்கள். உடன் வந்த அ.தி.மு.க.வினர் பொதுமக்களை அமைதிப்படுத்த முயன்றார்கள்.
ஆனாலும் பொதுமக்கள் தொடர்ச்சி யாக, அமைச்சருக்கு எதிராக கோஷங் களை எழுப்பி அவரை முற்றுகையிட முயன்றதால் அவர்களால் பொது மக்களை அமைதிப்படுத்த முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் அமைச்சர் வளர்மதியும் வேட்பாளர் இளங்கோவ னும் இறுகிய முகத்துடன் அங்கிருந்து வெளியேறினர். திருச்சியில் முதல் முறையாக பொதுமக்கள் ஆவேசமாக அமைச்சரை திருப்பி அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சருக்கும் தே.மு.தி.க. வேட்பாளருக்கும் ஏற்பட்ட நிலைமை, காங்கிரஸ் தரப்பில் இருக்கும் மைனஸ்கள்... இவற்றை தனக்கு ப்ளஸ் ஆக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் உள்ளூர் வேட்பாளரான அ.ம.மு.க. சாருபாலா தொண்டமான்.
-ஜெ.டி.ஆர்.