தன் சொந்தக் கட்சிக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார் என்று சொந்தக் கட்சிக்காரர்களாலேயே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன்.
அப்படி என்ன பிரச்சனையென்று காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் மணிமாறனிடம் கேட்டபோது, "மதுரையில் காங்கிரசுக்கு என்று ஒரு கணிசமான ஓட்டு வங்கி இருக்கிறது. முன்பு என்.எம்.ஆர்.சுப்புராமன், ஏ.ஜி.எஸ்.ராம்பாபு இருவருமே பாராளுமன்ற எம்.பி.யாகத் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த தேர்தலில், மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக, நகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் கேட்டிருந்தார். அவரைத் தவிர வேறு யாரும் சீட்டு கேட்கக்கூடாதென்றும் கூறியிருந்தார். எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியனின் மகன் இளைஞர் காங்கிரஸ் வரதராசன் சீட்டு கேட்க, அவரை ஒருமையில் பேசி மிரட்டியதால் ஒதுங்கிக்கொண்டார்.
எப்படியும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தனக்கு சீட் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று நம்பியிருந்த நிலையில், இத்தொகுதி தி.மு.க.விற்கு ஒதுக்கப்பட்டதும் மிகவும் அப்செட் ஆனவர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கூட்டத் தில், "யாரும் என்னைக் கேட்காமல் தி.மு.க.விற்கு தேர்தல் வேலை செய்யக்கூடாது' என்றார். நம் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வினர் அழைக்கும்போது பிரச்சாரத்திற்கும், ஓட்டுச் சேகரிப்பிற்கும் போகாதிருப்பது எப்படி யென்றும், இப்படி இருந்தால், அது அங்கே போட்டியிடும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகப் போகாதா என்றும் கேள்வி எழுப்பவும், அவசர அவசரமாகக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறினார்.
காங்கிரஸ் கட்சியினர் தி.மு.க. காரியாலத்திற்குச் சென்றால், உடனே அவருக்கு தகவல் போய்விடும். அந்த நபரை அழைத்து, "காசு வாங்கப் போனியா?' என்று திட்டுவார். இதுபற்றி விசாரித்த போதுதான், பா.ஜ.க.வுக்கு தாவி ஒரே நாளில் வேட்பாளரான டாக்டர் சரவணன் அவருக்கு நெருக்க மானவர் என்கிறார்கள். கட்சி அலு வலகத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி படம் கிடையாது. கேட் டால், நான் திருநாவுக்கரசரோட ஆள். அவர் படம் மட்டும் தான்னு சொல்றாரு'' என்று குற்றச்சாட்டுகளை அடுக்கி னார்.
காங்கிரஸ் கட்சியின் வாட்ஸ்ஆப் குருப்பில், பா.ஜ.க. ஒன்றிய அரசு வழக்கறிஞர் வீரணசாமி என்பவர், "ஏன் கார்த்தி கேயனுக்கு எதிராக இருக்கிறீர்கள்? ஒழுங்கா அவருக்கு ஒத்துப் போங்கள்'' என்று மிரட்டும் தொனியில் பேசுவதுபோல ஒரு ஆடியோவை நம்மிடம் காட்டினார் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப் பினர் காமராசர். அவர் வேறு யாரு மில்லை, மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்த்தி கேயனின் அப்பாதான். திருநாவுக்கரசர் பா.ஜ.க.வில் இருந்தபோது அவரும் இருந்தார். தற்போதும் பா.ஜ.க. ஒன்றிய அரசின் வழக்கறிஞராகத் தொடர்கிறார். மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் இருக்கும் படங்களை வைத்திருக்கிறார் கார்த்திகேயன். இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் பதவியைக் கொடுத்தால் கட்சியைக் காட்டிக் கொடுத்துவிடுவார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டத்தான் ரமேஷ்குமார் என்பவரின் மூலம் விசாரணை நடத்தப்படுகிறது'' என்றார்.
மாவட்டத் தலைவர் கார்த்திகேயனிடம் இதுபற்றி கேட்டபோது, "என் மீது குற்றச்சாட்டு வைப்பவர்கள் யார் என்று தெரியும். எல்லோரும் பிராடுப் பயல்கள்தான். எனக்கு எதிராக, இல்லாததையும், பொல்லாததையும் கட்சித் தலைமையிடம் புகார் தந்திருக்கிறார்கள். எதையும் நம்பாதீர்கள்'' என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மதுரை பொறுப்பாளர் ரமேஷ்குமார் நம்மிடம், "மதுரை காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப் பூசல் இருக்கத்தான் செய்கிறது. மாவட்ட நகர் தலைவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டார் என்று புகார் வந்திருக்கிறது. அதுபற்றி விசாரித்து, ஆடியோ ஆதாரம் உள்ளிட்ட விவரங் களை மேலிடத்துக்கு அனுப்பிவருகிறேன்'' என்றார். அகில இந்திய காங்கிரசுக்கு, அகில இந்தியா முழுக்க பிரச்சனைதான் போல!