இஷ்டப்படி ஆட்சி நடத்திக்கலாம், தேர்தல் வரும்போது மட்டும் சர்வரோஹ நிவாரணியாக 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தைப் பயன்படுத்தலாம் என்ற பா.ஜ.க.வின் எண்ணத்தில் ஒரு லாரி மண்ணள்ளிக் கொட்டியுள்ளது கர்நாடகத் தேர்தல் முடிவு. ஆம், கர்நாடகத் தேர்தல் முடிவு, பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்குமே அதிர்ச்சி தரக்கூடிய முடிவாகத்தான் உள்ளது. காங்கிரஸின் அதிர்ச்சி என்பது இன்ப அதிர்ச்சி.
கர்நாடகாவில் 150 இடங்களைக் கைப்பற்று வோம் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதிலும், அதிகபட்சம் 115 - 120 இடங்கள் வரை கிடைக்குமென்றே எதிர் பார்த்தது. ஆங்கில ஊடகங்களின் கருத்துக்கணிப்பு களும் பார்டர் பாஸ் அல்லது தொங்கு சட்டசபை என்றே மோடிக்கு சப்போர்ட்டாக எழுதின. ஆனால் தேர்தல் முடிவோ, எவ்வித குதிரை பேரத்துக்கும் இடமளிக்காதபடி, 137 இடங்களில் காங்கிரஸ் வலுவான வெற்றி என்பதாக வந்தது.
கர்நாடகாவைப் பொறுத்தவரை, குற்றச்சாட்டுகளுக்குள் ளான எடியூரப்பாவால் பெயர் கெட்டுப்போவதை விரும்பாத பா.ஜ.க. தலைமை, அவரை நீக்கிவிட்டு, அவரது லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது. இதன்மூலம் லிங்காயத்துகளின் வெறுப்பிலிருந்து தப்பியது. எனினும், பசவராஜ் பொம்மையின் அரசு மீது, அரசாங்க கான்ட் ராக்டர்களிடம் 40% கமிஷன் கட்டாய கமிஷன் பெறப்பட்ட புகார், கர்நாடக எம்.எல்.ஏ.விடம் 8.02 கோடி பணத்தை லோக் ஆயுக்தா போலீஸார் கைப்பற்றிய விவகாரம், ஊடகத்தினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது எனப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவையனைத்தும் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளாக மாறின.
அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மோசமான செயல்பாட்டால் உச்சத்துக்குப் போன பெட்ரோல் விலை, சமையல் கேஸ் விலை, பொருட்களின் விலைவாசி உயர்வு, டோல் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு எனப் பல்வேறு விஷயங்களும் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராகவே அமைந்தது. தேர்தல் நாளன்று பல்வேறு இடங்களில் கேஸ் சிலிண்டர்களுக்கு பூஜை நடத்தி கேஸ் சிலிண்டர் விலை உயர்வை வாக் காளர்களுக்கு நினைவுபடுத்திய காங்கிரஸின் உத்தியும் பா.ஜ.க.வுக்கு ஆப்பாக அமைந்தது.
அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் தலைமை பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன் கார்கே நியமிக்கப்பட்டதை கர்நாடக மக்கள் கவுரவமாகக் கருதினார்கள். ராகுல் காந்தி நடத்திய சுமார் 4000 கி.மீ. தொலைவுக்கான இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் தியாக பிம்பம், காங்கிரஸுக்கு கைகொடுத்தது.
ராகுல் காந்தியைப் போன்ற எளிமையான, நேர்மையான இளம் தலைவர் நமக்கு வேண்டும் என்ற எண்ணம் பரவலானது. மோடி மீதான கட்டமைக்கப்பட்ட பிம்பம், அவரது அதானி ஆதரவு அரசியலால் தரைமட்டமான சூழலில், தேர்தல் நெருங்கினால் மட்டும் மக்களுக்காக ஆட்சி நடத்துவதுபோல் வேடமிடுவதை வெட்ட வெளிச்சமாக்கியது. இதனால்தான் ஒரு வாரகாலமாக கர்நாடகாவையே வலம்வந்த போதும்... சாலையில் பூக்கள் மழை பொழிய ஊர்வலம் சென்றபோதும்... அவரால் பெரிதும் ஈர்க்க முடியவில்லை.
தற்போதைய கர்நாடகத் தேர்தல் வெற்றி யானது, ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கையையும், சர்வாதிகாரத்தை ஜனநாயகத் தால் வீழ்த்த முடியுமென்ற தெம்பையும் கொடுத்துள்ளது.
இந்த வெற்றியானது, அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸோடு ஒருங்கிணைந்து செயல்படும் எண்ணத்தைத் தூண்டக்கூடும். பா.ஜ.க.வோ, காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இடங்களில் சரிபாதியைக்கூட பெற முடியாமல் மோச மான தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இது, கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக்கப்பட்ட அண்ணாமலைக்கும் அவப்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் வலுவான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடை காண்பதில் முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா வுக்கும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்குமிடையே கடும் போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா 9 முறை வென்றவர். டி.கே.சிவகுமார் 8 முறை வென்றுள்ளார். சித்தராமையாவுக்கு தான் முதல்வர் பதவி தரப்படவேண்டுமென்று அவரது மகன் வெளிப்படையாகக் கோரிக்கை வைத்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், முதல்வர் பதவிக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார்கள்.
இன்னொருபுறம் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்களோ, பெங்களூர் நகரெங்கும் "அடுத்த முதல்வர் சிவகுமார்' என்று பேனர்களை வைத்தனர். டி.கே.சிவகுமார் தனது ஆன்மிக குருவான அஜ்ஜய்யா சுவாமியை சந்தித்து ஆசி பெற்றதோடு, அடுத்த முதல்வராவதற்கான யாகங் களை நடத்தியுள்ளார். இந்நிலையில் கர்நாடக புதிய முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமுகமான முடிவு எட்டப்பட்டதும், வரும் மே 18ஆம் தேதி புதிய அமைச்சரவை பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது. கர்நாடக காங்கிரஸில் நடக்கும் பதவி யுத்தத்தை பா.ஜ.க. உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதிலும் குறுக்குச்சால் ஓட்டி, மகாராஷ் டிராவில் உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்த்த உத்தியை கர்நாடகாவிலும் செயல்படுத்தக் காத்திருக்கிறது. மக்கள் தந்த மாபெரும் வெற்றியின் மதிப்பை காங்கிரஸ் காப்பாற்றுமா, கோஷ்டிச் சண்டையால் வீணடிக்குமா என்பது விரைவில் தெரியவரும்!