"ஹலோ தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவியின் போக்கால், பல்கலைக்கழகங்கள் பெரும் குழப்பத்திலும் பரபரப்பிலும் மூழ்கியிருக்கு''”
"ஆமாம்பா, டெல்லியின் தைரியத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்துக்கூட அவர் கவலைப்படறதாத் தெரியலையே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டை ஏப்ரல் 25, 26 இரண்டு நாட்கள் ஊட்டியில் நடத்துவதாக கவர்னர் அறிவிச்சிருக்கார். தலைமை விருந்தினராக அதில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் பங்கேற்பார்னு சொல்லப்பட்டிருக்கு. பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து கவர்னரை நீக்கி, அந்த பொறுப்பில் முதல்வரை நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால், இனி முதல்வர்தான் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்று தி.மு.க. சொல்லிவருகிறது. இதற்கிடையே, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களை அழைத்து கடந்த 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினும் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதனால் மாநாட்டைக் கூட்டும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறதா? என்ற கேள்வி பெரிதாய் எழுந்திருக்கிறது. எனவே, கவர்னர் கூட்டிய மாநாட்டில் நாங்கள் பங்கேற்பதா? வேண்டாமா?ன்னு எங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்று, தமிழக அரசுக்கு துணைவேந்தர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த நிலையில் மாநாட்டுக்கு அரசு பிரேக் பிடித்துவிடுமோ என்று மிரண்டுபோன ராஜ்பவன் தரப்பு, ’இது தமிழக அரசுக்குப் போட்டியாக நடத்தப்படவில்லை. வழக்கமாக ஏப்ரலில் நடத்துவதுதான்’ என சுதி இறங்கிப்போன நிலையில் விளக்கமளித்திருக்கிறது.''”
"அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறதே?''”
"அமலாக்கத்துறையால் 2023 ஜூனில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பின் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீனில் வெளியேவந்தார். அவருக்கு மீண்டும் துறைகள் ஒதுக்கப்பட்டன. அவர் இலாகாக்களின் பொறுப்பை ஏற்றவுடன் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தனது பதவியால் அவர் சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என்றும் அது வாதிட்டது. இதைத் தொடர்ந்து, பதவியா? ஜாமீனா? என்கிற உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் செந்தில்பாலாஜி. இவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அதே சட்டப் பிரிவின்படி, வெளியே வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான ஹேமந்த்சோரன் இப்போது ஜார்கண்ட் மாநில முதல்வராக இருக்கிறார். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாரும், மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்துவருகிறார். எனவே, இவர்கள் வழியில், தன் அமைச்சர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள செந்தில் பாலாஜி, மீண்டும் ஒரு அதி தீவிர சட்டப் போராட்டத்திற்கு ரெடியாகிறார் என்கிறார்கள்.''”
"இந்த நேரத்தில், அமைச்சர் துரைமுருகனுக் கும் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி கொடுத்திருக் கிறதே?''”
"வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த்தாக அமைச்சர் துரைமுருகன் மீது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடரப் பட்டது. வேலூர் மாவட்ட நீதிமன்றமோ, இந்த வழக்கிலிருந்து துரைமுருகனையும் அவரது குடும்பத்தினரையும் விடுவித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், விடுவித்ததை மறுஆய்வு செய்யவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2013, ஜெ.’ஆட்சிக் காலத்திலேயே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கைத் தாக்கல் செய்திருந்தது. இதன் விசாரணையும் முடிந்து, பல மாதங்களாக இதில் தீர்ப்பளிக்கப்படாமல்... கிடப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில், 23ஆம் தேதி தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், துரைமுருகனும், அவரது குடும் பத்தினரும் விடுவிக்கப்பட்ட வேலூர் நீதிமன்றத் தீர்ப்பினை ரத்து செய்ததுடன், துரைமுருகனுக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது அமைச்சர் துரைமுருகனை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யிருக்கிறது.''”
"தமிழக பா.ஜ.க. தலைவரான நிலையில் நயினார் நாகேந்திரன், எடப்பாடியை சந்தித் திருக்கிறாரே?''”
"தமிழக சட்டமன்ற வளாகத்தில். எதிர்க்கட்சி என்கிற வகையில் அ.தி.மு.க.வுக்கு பெரிய அறை ஒன்று இருக்கிறது. இதில் 22-ந் தேதி எடப் பாடியை, பா.ஜ.க. நயினார் சந்தித்தார். இந்த சந்திப்பு 35 நிமிடம் நீடித்தது. பா.ஜ.க.வின் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட நயினாருக்கு, அப்போது வாழ்த்தைத் தெரிவித்தார் எடப்பாடி. தி.மு.க.வை வீழ்த்துவதற்கான வியூகமும், தி.மு.க.வின் பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும்வகையில் நம்முடைய அரசியலும் இருக்கவேண்டும் என்றெல்லாம் விவாதித்தனர். அந்த நேரத்தில், "பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை அ.தி.மு.க.வினர் விரும்ப வில்லை போலிருக்கே?' என்று நயினார் கேட்க, எடப்பாடியோ, "உண்மைதான்... இந்தக் கூட்டணியால் எங்கள் மா.செ.க்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருக்கிறது. அவர்களை சமாதானப் படுத்தவே எங்கள் கட்சி மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டி யிருக்கிறேன். அவர்களிடம் இது கொள்கைக் கூட்டணி அல்ல, வெறும் தேர்தல் கூட்டணிதான் என்று தெளிவுபடுத்தவிருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.''”
"தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அனல் வீசியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த 22ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸின் செயற்குழுக் கூட்டம் நடந்தது. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ்ஜோடங்கர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, பீட்டர் அல்போன்ஸ், சசிகாந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கட்பர்ட், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை காட்டிவரும் கெடுபிடி நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், எந்த மாதிரியான போராட்டத்தை முன்னெடுப்பது என்று ஆலோசிக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அதை மறந்துவிட்டு, கூட்டணி ஆட்சி குறித்த கருத்துக்களே அங்கு முன்னெடுக்கப்பட்டன.''”
"காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப் பட்டிருக்கிறதே?''”
"கடந்த 2014-ல், குமரி மாவட்ட கிள்ளியூர் தொகுதிக்கு உட்பட்ட மிடாலம் "பி' கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இறங்கினார்கள். குறிப்பாக ஜோசப், பால்துரை மற்றும் சபிதா ஆகியோரின் வீடுகள் புறம்போக்கில் இருப்பதாக கூறி, அவற்றை இடிக்க முயன்றனர். அப்போது, குடியிருப்புவாசிகளுக்காக அந்தப் பகுதியின் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவரான ராஜேஷ்குமார் ஓடிவந்தார். "வீடுகளை இடிக்காதீர்கள்'னு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். உடனே, அவர் உட்பட 6 பேர் மீது, "அரசு அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக' வழக்குப் பதிவு செய்தது போலீஸ். இத்தனை ஆண்டுகளாக இழுபட்டு வந்த இந்த வழக்கில்தான், அண்மையில் ராஜேஷ்குமார் உட்பட மூன்றுபேருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்திருக்கிறது குமரி அமர்வு நீதிமன்றம். இதற்கிடையே அந்த ராஜேஷ்குமார், காங்கிரஸ் சார்பில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டார். இந்தத் தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த அவர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித் திருக்கிறார்.''”
"இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணத்தில் சிக்கல் எழுந்திருக்கே?''
"சவுதி அரேபியாவுக்கு ஹஜ் பயணம் என்கிற புனித பயணம் மே மாதம் 16ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. தமிழகத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கான அனுமதியையும் ஏற்பாடுகளையும் செய்துவரும் நிலையில், இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. தமிழக அரசின் ஹஜ் கமிட்டி மூலம் அப்ளை செய்த இஸ்லாமியர்கள் 5,700 பேருக்கும், சவுதி அரசுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. இதேபோல் ஒன்றிய அளவில் ஹஜ் பயணிகளை அனுப்பும் பணியை மும்பையில் உள்ள மத்திய அரசின் ஹஜ் கமிட்டி செய்துவருகிறது. தனியார் டிராவல்ஸ் மூலம் ஹஜ் செல்ல விரும்புகிறவர்களுக்கும் இந்த மத்திய ஹஜ் கமிட்டிதான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. இந்தநிலையில் இந்த வருடம் தனியார் டிராவல்ஸ் மூலமாக இந்தியா முழுவதும் 52 ஆயிரம் பேர் ஹஜ் பயணத்துக்கு பணம் கட்டி விண்ணப்பித்திருந்தனர். எனினும், மும்பையில் உள்ள ஹஜ் கமிட்டியோ, சவுதி அரசிடம் அனுமதி கோராமல் அலட்சியமாக இருந்துவிட்டது. இதனால் தாமதமாக அது அப்ளை செய்தபோது, அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அவர்களை நம்பிய 52 ஆயிரம் இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணம் கேள்விக் குறியாக மாறி யிருக்கிறது.''
’"மொழிப் போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக திடீர்னு சீமான் அறிவிச்சிருக்காரே?''”
"சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ராஜேந்திரன், 65-ல் பற்றி எரிந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அவரது உடல் அப்போது, பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் கடலூர் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், "ராஜேந்திரன் நினைவிடம் புதுப்பிக்கப்படும்' என அறிவிக்க, அதற்கான பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில் கடந்தவாரம் பரங்கிப்பேட்டை பகுதிக்கு வந்த நாம் தமிழர் சீமான், ராஜேந்திரன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்திவிட்டு, அவர் சமாதிக்கு அருகே இருந்த 4.5 சென்ட் நிலத்தைத் தன் பெயரில் பத்திரப் பதிவு செய்திருக்கிறார். அங்கே மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணி மண்டபம் கட்டப்போவதாக அறிவித்திருக்கிறார். சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு உள்ளிட்டோரோ, சீமான் இத்தனை நாளாக புலித்தலைவர் பிரபாகரனின் படத்தை வச்சிக்கிட்டு பேசித் திரிந்தார், இப்ப திடீர்னு மொழிப்போர் தியாகி ராஜேந்திரனை வச்சி சீன் காட்ட ரெடியாயிட்டார்'’ என்கிறார்கள் கிண்டலாக.''”
"நாம் தமிழர்’ கட்சி சீமான் தொடர்பாக நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சீமானை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்குக் கொண்டுவர, டெல்லியின் கைப்பிள்ளையாக இருந்து, பேச்சுவார்த்தை நடத்திவருபவர் ஓ.பி.எஸ்.தானாம். இவர், சீமானின் மனைவி கயல்விழியிடமும், சீமானிடமும் பா.ஜ.க. கொடுத்திருக்கும் டீலிங்குகளுடன் பேசிவரு கிறாராம். இது அ.தி.மு.க. சீனியர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்திவருகிறது என்கிறார்கள்.''”