தமிழக அரசிய லில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் களத்தில் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, நக்கீரன் முன்கூட்டியே தெரிவித்தபடி மாறுபட்ட தீர்ப்புகளாக வெளிவந்துள்ளன.
கடந்த ஜனவரி மாதம் விசாரணை முடிந்தது என அறிவிக்கப்பட்ட இந்த வழக்கில் ஆறுமாதம் கழித்து ஜூன் மாதம் தீர்ப்பைத் தந்திருக்கிறது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு.
ஜூன் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்பதையும், இதற்கான நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றுள்ள ஜூனியர் நீதிபதியான சுந்தர் தனது தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்பதையும், அவர் எழுதிய தீர்ப்பை சீனியர் நீதிபதியான இந்திரா பானர்ஜிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும், இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறார் என ஜூன் 2-ம் தேதி வெளியான நக்கீரனில் வெளியிட்டி ருந்தோம். 14-ந்தேதி வெளியான தீர்ப்பும் அப்படித்தான் அமைந் துள்ளது.
அன்றைய தினம், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்து நீதிபதி சுந்தர் சென்னைக்கு வந்தார். அன்று மதியம் இரு நீதிபதிகளும் அரவக்குறிச்சி தேர்தல் வழக்கு, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரை நியமனத்தை எதிர்த்த வழக்கு உள்பட 6 வழக்கு களில் தீர்ப்பளித்துவிட்டு 7-வது வழக்காக 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வாசிக்க தொடங்கினர்.
"என்னுடைய பார்வையில்' என தலைமை நீதிபதி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்ததும் ஏன் வழக்கத்துக்கு மாறாக என்னுடைய பார்வையில் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார் என்கிற ஆச்சரியம் கோர்ட்டில் பரவியது. அதற்கான விடை அவரது தீர்ப்பிலேயே இருந்தது. ""உயர்நீதிமன்றம் என்பது சட்டசபையில் சபாநாயகர் இடும் உத்தரவுகள் சரியா? தவறா? என சொல்லும் வேலையை செய்யும் அமைப்பு அல்ல. சபாநாயகர் என்பவர் நீதித்துறையின் அந்தரங்கங்களை கையாள்பவர் என அரசியல் சாசனம் அவருக்கு அதிகாரங்களை கொடுத்திருக்கிறது.
சபாநாயகர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருந்தால் நீதிமன்றம் தலையிடலாம். சட்டவிரோதமாக பயன்படுத்தியிருந்தால் அதில் விளக்கம் கேட்கலாம். உயர்நீதிமன்றத்துக்கு அரசியல் சாசனம் 226-ன் கீழ் சட்டசபை சபாநாயகரை கேள்வி கேட்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதை எதற்கெடுத்தாலும் எடுத்துப் பயன்படுத்திவிட முடியாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக் கத்தை அளிக்க வாய்ப்புகளை அளித் துள்ளார்.
கவர்னரிடம் முதல்வருக்கு எதிராக மனு கொடுத்துள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையை கூட்டுங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள். இந்த 18 பேரும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், அவர்கள் புகார் தெரி வித்த முதல்வருக்கு ஆதரவாகவும் நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். இது ஒரு எம்.எல்.ஏ. தனது விருப்பப்படி கட்சி தாவலாமா? என்கிற கட்சித் தாவல் தடை சட்டத்தின் அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. அதனால்தான் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். அதை செல்லாது என சொல்ல முடியாது'' என தீர்ப்பளித்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
அவரைத் தொடர்ந்து தான் எழுதிய தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார் நீதிபதி சுந்தர். ""18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு உள்நோக்கம் கொண்டது. மொத்தம் 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் முதல்வருக்கு எதிராக மனு கொடுத்தார்கள். அதில் ஜக்கையன் முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவான நிலை எடுத்ததால் அவரை விட்டுவிட்டு 18 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது, அவரது உள்நோக்கம் கொண்ட செயல்பாடுகளை காட்டுகிறது. ஒரு எம்.எல்.ஏ. என்பவர் பல லட்சம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரை ஒரேயொரு உத்தரவின் மூலம் தகுதி இழக்க செய்வது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது. கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கவர்னரிடம் கடிதம் கொடுத்தார்கள் என்கிற ஒரே காரணத்துக்காக 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. அடிக்கடி தேர்தல் வரக்கூடாது என்கிற விதி இருக்கும்போது எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி தகுதி நீக்கம் செய்வதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு செல்லாது'' என தீர்ப் பளித்தார்.
இரண்டு நீதிபதிகள் இரண்டு விதமாக தீர்ப்பளித்தது நீதித்துறை வட்டாரங்களை அதிர வைத் துள்ளது. நீதிபதி சுந்தர் வழக் கறிஞராக இருந்த காலத்திலேயே அதிரடிக்கு புகழ் பெற்றவர். சஞ்சய் கிஷன் கவுல் தலைமை நீதிபதியாக இருந்தபோது அப்போது வழக்கறிஞராக இருந்த சுந்தரை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஜெ. அரசு பாழ்படுத்தி விட்டதா ன அறிய நீதிமன்றம் சார்பில் அனுப்பி வைத்தார். அப்பொழுது சுந்தர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு நூலகத்தை பாழ்படுத்தி யுள்ளது என சாடியது என்பதை நினைவூட்டுகிறார்கள் சட்டத்துறை வல்லுநர்கள்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பினால் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது. நீதிபதி யார் என ஒருவாரத்திற்குள் நியமிக்கும் பொறுப்பை மூத்த நீதிபதியான ரமேஷ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
ரமேஷ் கர்நாடகத்தை சேர்ந்தவர். கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் கொடுத்தார்கள் என கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தார். அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றார். ஜூனியர் நீதிபதி செல்லாது என்றார். வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது. மூன்றாவது நீதிபதியும் தலைமை நீதிபதி சபாநாயகர் உத்தரவு செல்லும் என அளித்த தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்தார். அந்த வழக்கு உச்சநீதிமன்றம் போனது. பா.ஜ.க.வின் முதல்வருக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தது அவரது ஆட்சியமைக்கும் உரிமையை பாதிக்காது என தீர்ப்பளித்தது. அந்த நேரத்தில் ரமேஷ் அங்கு நீதிபதியாக இருந்தார் என்கிறார்கள் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்.
மூன்றாவது நீதிபதி ஒருவாரத்தில் நியமிக்கப்பட்டாலும் அவர் வழக்கை விசாரித்து முடிக்க அதிகபட்சம் 2 மாதங்களாகும். அவர் அளிக்கும் தீர்ப்பை எதிர்த்து யார் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் அது முடிய குறைந்தபட்சம் ஆறு மாதங்களாகும். எப்படியும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வர 2019 ஜனவரி மாதமாகிவிடும் என்கிறது உயர்நீதிமன்ற வட்டாரம்.
இப்படி ஒரு தீர்ப்பு வருவதற்கு காரணம் திவாகரன்தான். அவர் கடந்த ஒருவாரமாக டெல்லியில் அமர்ந்து காய்நகர்த்திக் கொண்டிருந்தார். தீர்ப்புக்கு முந்தைய நாள் தனது ஆதரவாளர்களிடம் பேசிய திவாகரன் தரப்பினர் "தினகரனுக்கு சாதகமாக வராது' என்றனர்.
"தற்போது தினகரன் பக்கமிருக்கும் 18 எம்.எல்.ஏ.க்களில் பத்து பேர் என்னிடம் இருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் போனாலும் எடப்பாடி ஆட்சியை நான் காப்பாற்றுவேன்' என எடப்பாடி தரப்பினருக்கு உத்தரவாதம் அளித்துள்ளார் திவாகரன். அதற்காக கோடிக்கணக்கில் உதவிகள் அடங்கிய எடப்பாடியின் பேக்கேஜ் ஒன்றையும் தயாரித்து எம்.எல்.ஏ.க்களிடம் பேசி வருகிறாராம் திவாகரன். தினகரன் தரப்பினரோ ""தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தாலும் எடப்பாடி சுப்ரீம் கோர்ட்டுக்கு போவார். அங்குதான் இந்த தீர்ப்பு இறுதி வடிவத்தை அடையும். தற்பொழுது வந்த தீர்ப்பினால் எடப்பாடி அரசு இன்னும் இரண்டு மாதம் அதிகமாக உயிரோடிருக்கும் அவ்வளவுதான்'' என்பதுடன், கைவசம் உள்ள எம்.எல்.ஏ.க்களை தக்கவைக்க பெருமளவில் செலவழிக்கவும் ரெடியாகின்றனர்.
எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம், மூன்றாவது நீதிபதியிடமிருந்து வழக்கை எப்படி சட்ட உதவி செய்து மீட்பது என காய்நகர்த்தல்கள் தொடங்கிவிட்டன. இது எடப்பாடிக்கும் தினகரனுக்குமான ஃபைனல் ஃபைட் என்கிறது கோட்டை வட்டாரம்.
-தாமோதரன் பிரகாஷ்,
சி.ஜீவாபாரதி
படங்கள்: ஸ்டாலின், அசோக்