ன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதில் அங்கங்கே பரபரப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பல ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றபோதும் அங்கே அதிரடிக் காட்சிகள் அரங்கேறி, பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள துறவி கிராமத்தில் அரசு நடு நிலைப்பள்ளியில் மதியம் 3 மணியள வில் அப்பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திரளாக வாக்களிக்க வந்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. அதனால் காலதாமதமும் ஏற்பட்டதால் காத்திருந்த வாக்காளர்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதலாக ஒரு பூத்தைத் தயார் செய்து கொடுப்பதாக கூறி அவர்களின் மறியலைக் கைவிடச்செய்தனர்.

ll

கண்டாச்சிபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு தேவி ரவிக்குமார் மற்றும் ரேவதி கணபதி ஆகிய இரு பெண் வேட்பாளர்கள் பிரதான மாக போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென வாட்ஸ்அப், பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் வேட்பாளர் தேவியின் கணவர் ரவிக்குமார், அவரை எதிர்த்துப் போட்டியிடும் ரேவதியை ஒருமையில் பேசியதாகவும், அந்த வேதனை தாங்கமுடியாமல் ரேவதி அழுவது போன்றும் ஒரு வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

ஆனால் ரவிக்குமாரோ, “"ஓட்டுப் போட வரிசையில் நின்றிருந்தேன். அப்போது வேட்பாளர் ரேவதி என்னிடம் தானாக வம்புக்கு வந்தார். பிறகு அவர் அழுவது போன்ற வீடியோ காட்சியை அவரது ஆதரவாளர்கள் எடுத்து வெளியிட்டனர். இது சிம்பதிக்காக நடத்தப்பட்ட நாடகம்''’என்றார் எரிச்சலாக.

திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ஊராட்சியில் மாலை 5 மணி அளவில் வாக்குச் சாவடிகள் திடீரென மூடப்பட்டன. அப்போது அங்கே வாக்களிக்க ஏறத்தாழ 150 வாக்காளர்கள் காத்திருந்தனர். கோபமுற்ற அவர்கள் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டனர். அங்கு போலீசார் விரைந்து வந்து வாக்காளர்களை விரட்டியடித்தனர்.

ஸ்ரீதேவி கிராம ஊராட்சித்தலைவர் பதவிக்கு, வள்ளி சாமிநாதனுக்கும், சசிகலா மணிகண்டனுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இங்கே மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் விதிமுறைகளை மீறி, பூண்டி கிராம வாக்குச் சாவடியில் ஒரு தரப்பு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குப்பதிவு நடந்ததாக கூறி, மோதல் ஏற்பட்டது. இதில் ஸ்ரீதேவி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, பச்சையப்பன் உள்ளிட்ட வர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட, அவர் களைக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த இன்னொரு தரப்பினர், சாலை மறியலில் குதித்தனர். காவல் துறை அதிகாரிகள், அவர்களை அப்புறப்படுத்தினர். எலவாசனூர் கோட்டை வாக்குச்சாவடியிலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதனால் கும்பலை கலைப்பதற்கு போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

இப்பகுதியிலுள்ள செங்குறிச்சி, பெரிய குப்பம், இறையூர், பின்னல்வாடி, ஆகிய கிராம வாக்குச்சாவடிகளில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டது. ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள பகண்டை கூட்டுரோடு வாக்குசாவடி மையத்தில் சாமுவேல் என்பவரது மனைவி அமுதா வாக்களிக்க வந்தார். ஆனால் அவரது வாக்கை வேறு ஒருவர் போட்டு விட்டதாக அங்கிருந்து அலுவலர்கள் கூற, உடனே சர்க்கார் சினிமா பட பாணியில் அமுதா, "எனது ஒட்டு எங்கே? அதை நான் பதிவு செய்தே ஆக வேண்டும்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு முடிந்து புறப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து அவர்கள் விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர், தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே ஆசிரியைகளையும் பெண் பணியாளர்களையும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத் தும் அரசு, அவர்களது பாதுகாப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கைக் குரலும் பெண்கள் மத்தியிலிருந்து எழுந்திருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண்களை, அவர்கள் ஊர்களில் இருந்து தூர தூரங்களில் பணியாற்றச் சொல்வதோடு, முதல் நாளே வாக்குசாவடி மையத்துக்கு வந்துவிடும்படி சொல்லும் அதிகாரிகள், அவர்கள் அங்கே தங்குவதற்கான வசதிகள், பாதுகாப்புகள் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லையாம். அதேபோல் வாக்குப்பதிவு முடிந்ததும் அவர்களை வீட்டிற்குப் பாதுகாப்பாக அனுப்பிவைக்காமல், வாக்குப்பெட்டிகளை வந்து எடுத்துச்செல்லும் வரை, அதாவது நள்ளிரவு தாண்டியும் அங்கேயே இருக்கச் சொல்கிறார்களாம். இதனால் பல்வேறு ஆபத்துக்களை அவர்கள் சந்திக்கவேண்டி யிருக்கிறதாம். இப்படி தேர்தல் பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆசிரியை ஆனந்தி என்பவர் வழிப்பறிக் கும்பலால் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறாராம்.

இப்படி சிறு சிறு சலசலப்புடன் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.