கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, அப்பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் நக்கீரன் எடுத்த முயற்சியால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்ட பின், அப்பள்ளி ஆசிரியை சுஷ்மிதாவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் அப்பள்ளியின் நிர்வாகிகளான சிவசங்கர் பாபாவின் வலதுகரமான ஜானகி, கருணா, பாரதி உள்ளிட்ட ஐந்து பேர் தேடப்பட்ட நிலையில்... இவர்கள் ஐந்து பேருக்கும், இந்த பாலியல் குற்றத்தில் நேரடியாக தொடர்பில்லை என நிபந்தனைகளுடன் முன்ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சிவசங்கர் பாபாவும் ஜாமீனுக்காக பல வழிகளில் முயற்சிக்கிறார். இவர் ஜாமீனில் வெளிவந்தால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது என்று அவரது ஜாமீன் மனு தள்ளுபடியானது.
அவரது பள்ளியின் செல்வாக்குமிக்க நடன ஆசிரியையின் கணவர், தனது டெல்லி தொடர்பில் சிவசங்கர் பாபாவுக்கு உதவி வருகிறார். சிவசங்கர் பாபாவை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர தன் கட்சி வழக்கறிஞர்கள் மூலம் உயர்போலீஸ் அதிகாரிகளின் உதவியையும் தன் டெல்லி செல்வாக்கால் முழுவீச்சில் காய் நகர்த்திவருகிறார் என்கிறார்கள்.
இந்நிலையில், ஏற்கனவே ஜாமீன் பெற்ற சுஷ்மிதாவின் ஜாமீனும் ரத்து செய்யப் பட்டிருப்பது புதிய திருப்பம். அவர் எந்நேரமும் கைதாகலாம் என்ற சூழலில், சுஷில்ஹரி பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு சம்மன் வழங்க சி.பி.சி.ஐ.டி. போலீசார், சம்மந்தப் பட்டவர்களின் வீட்டுக்கு சென்ற வேளையில் அவர்கள் தப்பியோடினர்.
இந்த வழக்கு சம்பந்தமாக பழைய மாணவி அமிர்தா, பழைய மாணவர் ஹாசிப் துணிந்து வந்து அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்களை பற்றி மீடியாக்களுக்கு பேட்டியளித்தனர். இதனால் இவர்கள் இருவரும், சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்படுவதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அமிர்தா, "அங்கே நான் படிக்கிறப்போ நடந்த அனைத்து அத்துமீறல்கள் பற்றியும் சமீபத்தில் மீடியாவில் பேசியிருந்தேன். அதேபோல ஹாசிப்பும் பேசியிருந்தாரு. அதனால, பாபாவின் ஆதரவாளர்கள் புதுசு புதுசா புதிய யூடியூப் சேனல் ஆரம்பித்து என்னையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அசிங்கமா பேசி யூடியூப் சேனல்ல போட்டிருக்காங்க. இதனாலதான் இந்தமாதிரி பிரச்சினைக்கு பெண்கள் முன்வர தயங்குறாங்க. ஆனாலும் "எக்கச்சக்கமானவங்க எனக்கு துணையா இருக்காங்க, அதனால உண்மைகளைப் பேச தயக்கமில்லை'’என்றார். ஹாசிப் நம்மிடம், "பள்ளியில் அமிர்தா அக்கா எனக்கு முன்னாடி படிச்சவங்க. இது கூடத் தெரியாம அரைவேக்காடுத்தனமா கொச்சப்படுத்தி பேசுறாங்க. உண்மைதான் கடைசியா ஜெயிக்கும்'' என்றார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவைக் காப்பாற்றுவதற்காக, டிரஸ்ட்டுக்குள் பிரச்சினை இருப்பதுபோலவும், பாபாவுக்கு நெருக்கமான ஜானகிசீனிவாசன் மட்டுமே பிரச்சினைக்கு பொறுப்பு என்பதுபோலவும், சிவசங்கர் பாபாவைக் காப்பாற்றுவதற்கான திசை திருப்பல் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக நடக்கிறது. டிரஸ்ட்டின் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஜானகி சீனிவாசன் தன்னோட கண்ட்ரோலில் கொண்டுவருவதற்காக சிவசங்கர் பாபா வழக்கை வாதாட சரியான வழக்கறிஞரை அமைக்கல என ரமேஷ் என்பவர் தலைமையில் ஒரு டீம் கிளம்பியுள்ளது.
ரமேஷ் தரப்பினர் சந்திரகாந்த் என்பவரை முன்னிலைப்படுத்தி கடந்த ஜூலை 20-ஆம் தேதி கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி வளாகத்துக்குள்ள சுமார் நூறு பக்தர்களோடு ஜானகி சீனிவாசனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார். அதேபோல ஜானகி சீனிவாசன் கைது நடவடிக்கைக்கு பயந்து, துபாயில் இருந்துவந்த தன் மகனோடு சென்னையில் தங்கியிருக்கிறார். பள்ளிக்குள் இரண்டு கோஷ்டிகள் உருவானது போலவும், பாபாவுக்கு எதிராக ஜானகி செயல்படுவது போலவும் சீன்களை உருவாக்கி, மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவுகளை திசை திருப்பும் வேலை தீவிரமாகியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் போக்சோ வழக்கில் கைதான அவ்வளவு எளிதாக ஜாமீன்ல வெளியே வரமுடியாது. அதிலும், இந்த வழக்கில் பாலியல் புகார் கொடுத்த அத்தனை மாணவிகளும் நீதிபதிகிட்ட 164 ஸ்டேட்மெண்ட் ஸ்ட்ராங்கா கொடுத்திருக்காங்க, ஆனா ரமேஷ் ஏதோ ஜானகி சீனிவாசனால தான் சிவசங்கர் பாபா வெளியே வரமுடியவில்லை என்பது போல பிரிவினைப் போராட்டம் நடத்திவருகிறார்.
புழல் சிறையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அடைபட்டிருக்கும் சிவசங்கர் பாபா மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் கவனமாகக் கையாள்கிறது. சமீபத்தில் சம்மன் வழங்கப்பட்டவர்களில் மூன்று பேர் சி.பி.சி.ஐ.டி. போலீஸில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத் திருப்பது, பாபாவுக்கு கிடுக்குப்பிடியாகியுள்ளது..