மிழக அரசியல் தலைவர்களில் 100 வயதைத் தொட்டு, வாழும் வரலாறாகியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரும், மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான மூத்த தோழர் என்.சங்கரய்யா. பெரியார், ராஜாஜி, கலைஞர் ஆகியோர் ஏறத்தாழ 95 வயது வரை வாழ்ந்து பொதுவாழ்வில் ஈடுபட்டனர். அவர்களைப் போலவே 95 வயது கடந்தும், மக்கள் தொண்டில் சளைக்காமல் ஈடுபட்ட, சமரசமற்ற போராளியான சங்கரய்யாவுக்கு 100 வயதைக் கடந்து வாழும் வாய்ப்பை இயற்கை வழங்கியிருக்கிறது.

sankarayya

1922ஆம் ஆண்டு, ஜூலை 15ல் பிறந்த சங்கரய்யா, மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்க்கைக்கு வந்தவர். அவருடைய தாய் வழி தாத்தா சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் 1938ல் பெரியார் முன்னெடுத்த இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் சங்கரய்யா பங்கேற்றார். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவரான அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பிரிட்டிஷ், இந்தியா காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து மாணவர் அமைப்பைக் கட்டமைத்து, போராட்டக் களம் கண்டவர். கம்யூனிசக் கொள்கைகளும் அந்த இயக்கமும் அவரை ஈர்த்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, கம்யூனிச இயக்கத்தில் நேரடியாகப் பங்கேற்று மாணவர்கள்- விவசாயி கள்-தொழிலாளர்கள் உரிமைக்காகக் களம் கண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தபோது, அதன் நிறுவன உறுப்பினரானவர். 1967, 1977, 1980 ஆகிய தேர்தல்களில் போட்டி யிட்டு சட்டமன்ற உறுப்பினரானவர். தீண்டாமைக் கொடுமைக்கெதிரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தை வளர்த்தவர் சங்கரய்யா. கோவை குண்டு வெடிப்பு கொடூரத்தின் போது, மத நல்லிணக்கத்திற்கான மாநாட்டை நடத்தி, அமைதிக்கான பாதையை உருவாக்கிடும் முயற்சிகளை மேற்கொண்டவர்.

Advertisment

sankarayya

திராவிட இயக்கத்துடன் அவர் பல கட்டங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறார். சில நேரங்களில் தனது எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார். இருப்பினும், கலைஞருக்கும் அவருக்குமான அரசியல் நட்பு நீடித்தபடியே இருந்தது. கலைஞரின் மரணத்தின்போது நடந்த இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்து, உணர்வுப்பூர்வமான தனது இறுதி வணக்கத்தை செலுத்தியவர் சங்கரய்யா.

அவருடைய நூற்றாண்டை ஒட்டி, குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நூற்றாண்டு கண்ட தியாகத் தலைவரை வாழ்த்தினர்.

Advertisment

புரட்சிகரமான தியாக வாழ்வில் நேர்மையையும் எளிமையயும் கடைப் பிடித்த சங்கரய்யாவிடம் இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது.

-கீரன்