"எளிமை' என்ற சொல்லுக்கு அர்த்தம் கேட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் இரா.நல்லகண்ணுவை சொல்லலாம். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்... எளிதில் அனைவராலும் அணுக முடிந்தவர்... எளிய மக்களின் நலனுக்காக, உரிமைகளுக்காக உறுதியோடு போராடியவர் தோழர் நல்லகண்ணு! வயது வித்தியாசமில்லாமல் அனைவராலும் தோழர் என்று அழைக்கப்படும் ஐயா நல்லகண்ணு, பிப்ரவரி 25, 2026 அன்று 101வது வயதில் வயது மூப்பின் காரணமாக காலமானார்! 

Advertisment

பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக் காக வைக்கப்பட்டிருந்த "தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் பெருமக்கள், காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க. தலைவர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், ஆர்யா, விஜய்சேதுபதி, நக்கீரன் ஆசிரியர் மற்றும் பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்கள், தொழிற்சங் கத் தலைவர்கள், திரை பிரபலங்கள், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Advertisment

தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "வீர வணக்கம்! வீர வணக்கம்!'’ என்று முழக்கமிட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதை வழங்கப்பட்ட பின் தோழர் நல்ல கண்ணுவின் உடல், ஊர்வலமாக எடுத் துச்செல்லப்பட்டு சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரால் "தோழர் ஆர்.என்.கே' என்று தோழமையோடு அழைக்கப்பட்ட ஆர்.நல்லகண்ணு, 1925ஆம் ஆண்டு, டிசம்பர் 26ஆம் தேதி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண் டத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில், ராம சாமி - கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தி லுள்ள கார்னேசன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 

Advertisment

nalakannu1

 மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பை முடித்துவிட்டு, பி.ஓ.எல். படிப்பை இரண்டாமாண்டு படித்த நிலையில், வெள்ளையனே வெளியேறு போராட்டத் தில் பங்கெடுத்த காரணத்தால் கல்லூரிப்படிப்பு தடை பட்டது. பின்னர், கம்யூனிஸ்ட் இயக்கத்தின்மீதான ஈர்ப்பால், கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளராகவும், மத்தியில் கமிட்டி உறுப்பினர் உள் ளிட்ட ஏராளமான பொறுப்புகளையும் வகித்துள்ளார். 

தொடக்கத்தில், ஜனசக்தி இதழின் செய்திக் குழுவில் பணியாற்றியபோது, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல்லை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் நல்லகண்ணு எழுதினார். உடனடியாக அன்றைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். 

தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கிராமத்தில் தலித் தொழிலாளர்களை மிராசுதாரர்கள் கொத்தடிமைகளாக நடத்தினார்கள். வேலையில் சுணக்கமாக இருந்தால் சாட்டைகளால் அடிப்பார்கள்... சாணத்தை கரைத்து ஊற்றுவார்கள்... இந்த கொடுமைக்கு எதிராக கிஷான் சபா சீனிவாச ராவ் தலைமையில் நல்லகண்ணு போராட்டத்தில் இறங்கினார். அதன்பின்னர் மிராசுதாரர்கள் தங்களுடைய முரட்டுத்தனமான நடவடிக்கையை கைவிடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்!

1948ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டதையடுத்து, தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறை வாக தங்கியிருந்த நல்லகண்ணு, 1949, டிசம்பர் 20ஆம் தேதி, நாங்குநேரி, புலியூர்க்குறிச்சியில் கைத்துப்பாக்கியோடு கைது செய்யப்பட்டார். அப்போது அவர் முறுக்கு மீசை வைத்திருப் பார். போலீசார் விசாரணை நடத்தியபோது, கம்யூனிஸ்ட் தலைவர்களை காட்டிக்கொடுக்கச்சொல்லி, அவரது முறுக்கு மீசையை சுருட்டை வைத்து பொசுக்கியும், மீசை முடிகளைப் பிய்த்தெடுத்தும் காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத் தினர். மன உறுதியுடன் போலீசாரின் தாக்குதலை எதிர்கொண்டவர், அதன்பின் தனது மீசையையே துறந்தார். தோழருக்கு 1951 ஆகஸ்ட் 11 முதல் 1956 வரை 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

சிறையிலிருந்து வெளிவந்த தோழர் நல்லகண்ணுவுக்கு பெண் கொடுத்தவர், சாதி ஒழிப்புப்போராளியான அன்னச்சாமி. அவரது மகள் ரஞ்சிதம்மாளை 5.6.1958ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 1999ஆம் ஆண்டில், தென் மாவட்ட சாதிக்கலவரத்தில், சாதி ஒழிப்புப் போராளியான அவரது மாமனார் அன்னச்சாமி வெட்டிக்கொல்லப்பட்டபோது, பதட்டமான சூழலை மிகவும் நிதானத்தோடு கையாண்டார் தோழர் நல்லகண்ணு. மாமனாரின் மரணத்துக்காக அரசு கொடுத்த இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளாமல், அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விச்செலவுக்காக அதனை அளித்தார்!

தோழர் நல்லகண்ணு, ஒடுக்கப்பட்ட மக்களுடன் நாங்குநேரி வானமாமலை கோவிலுக்குள் நுழைவுப் போராட் டம், அவர்களோடு செருப்பணிந்து தெருக்களில் நடக்கும் போராட்டம், நொச்சிக்குளத்தில் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 நாட்கள் பட்டினிப் போராட்டம் என சமூக நீதிக்கான அவரது போராட்ட வாழ்க்கை மிக நீண்டது.

nalakannu2

தாமிரபரணி ஆற்றை தூர்வாருவ தாகக்கூறி மணல் கொள்ளை நடப்பதை எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத் தியதோடு, 2010ஆம் ஆண்டில் நீதிமன்றம் சென்று, அவரே ஆஜராகி வாதாடி தடையுத்தரவு பெற்றார் நல்லகண்ணு!

அவரது 80வது பிறந்த நாளுக்கு கட்சி சார்பில் 1 கோடி ரூபாய் நிதி திரட் டப்பட்டு அவருக்கு வழங்கியதை, அப் படியே கட்சிக்காகக் கொடுத்துவிட்டார்.

76வது சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வரால் 'தகைசால் தமிழர்' விருது வழங்கப்பட்டது. அவ்விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்ட தோழர் ஆர்.நல்லகண்ணு, அத்தொகையுடன், தனது பங்களிப்பாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையையும் சேர்த்து, மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

சுதந்திரப் போராட்டத் தியாகி என்ற வகையில், அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீடு ஒதுக்கீட்டை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், மாதாமாதம் வாடகை செலுத்திவந்தார். தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாயில் பாதியை கட்சிக்கும், மீதியை தொழிலாளர் சங்கத் துக்கும் வழங்கினார்! 

2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, நக்கீரன் ஆசிரியரை அன்றைய ஜெய லலிதாவின் அ.தி.மு.க. அரசு கைது செய்து, பொடா சட்டத் தில் வழக்கு பதிவு செய்தது. பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் இத்தகைய நடவடிக்கையை எதிர்த்து, பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிகள் சார்பாக கண்டனக்கூட்டம் நடத் தப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சி.பி.ஐ. தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் நல்ல கண்ணு, "உங்களுடைய நியாயமான போராட்டத் துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது. அனைத்து எதிர்க்கட்சி களுடன் பேசி நாங்கள் நக்கீரன் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்போம். ஏ.ஐ.டி.யு.சி., இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பிலும் உங்க ளுக்காக போராட்டம் நடத்துவோம்'' என்றார். அதே போல், நக்கீரன் ஆசிரியர் மீதான பொடா சட்டத்தை நீக்கக்கோரி, நக்கீரன் பணியாளர்களின் குடும்பத் தினர் கலந்துகொண்ட உண்ணாவிரதப் போராட்டத் தில் கலந்துகொண்ட தோழர் நல்லகண்ணு,  "லைசன்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்த தாக நக்கீரன் கோபாலை "பொடா' சட்டத்தில் கைது பண்ணியிருக்காங்க. பத்திரிகை சுதந்திரத்தை பாது காக்க நடக்கும் இந்த கூட்டம் தமிழக நகரங்கள் தோறும் நடத்தப்பட வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் நாங்க துணை நிற்போம்'' என்று இயல்பான பேச்சுத்தமிழில் பேசியது பலத்த கைத்தட்டல்களை பெற்றது. இப்படி, நக்கீரனுக்கு ஒரு பிரச்சனையென்றால் முன்னின்று போராடக் கூடிய தோழமை நல்லகண்ணு அவர்கள்!

2012ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், ஐயா சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பாக சிறந்த கட்டுரைகளுக்கு பரிசளிக்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவ நேயப் பாவாணர் அரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, நக்கீரன் ஆசிரியரால் அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. அந்த அரங்கின் நிர்வாகிகள் கடைசி நேரத்தில்,  "உங்களுக்கு அனுமதியில்லை' என்றார்கள். அவ்விழாவின் முதன்மை விருந்தினர் தோழர் நல்லகண்ணு அவர்கள். நக்கீரன் கோபால், தோழர் நல்லகண்ணுவிடம், "விழா நடத்துவதற்கு அனுமதி மறுக்கிறார்கள்!" என்று சொல்ல, உடனே, "விடுங் கய்யா, அதிகாரிகளுக்கு என்ன நெருக்கடியோ, அரங்கத்தில் தானே நடத்தக்கூடாது என்கிறார்கள். திறந்தவெளியில் நடத்துவோம்!" எனக்கூறி கார்கள், டூவீலர்களின் ஹெட்லைட் வெளிச்சத்தில் விழா சிறப்புரையாற்றி விழாவை சிறப்புசெய்தார் தோழர் நல்லகண்ணு! இப்படியாக, தோழர் நல்ல கண்ணுவுக்கும் நக்கீரன் ஆசிரியருக்குமான நட்பு மிகுந்த ஆத்மார்த்தமான ஒன்று! தோழர் நல்லகண்ணு வின் பிறந்த நாளான டிசம்பர் 26 அன்று குடும்பத் தோடு சென்று தோழரை சந்தித்து வாழ்த்து சொல்லி, ஆசிபெறுவது நக்கீரன் ஆசிரியரின் வழக் கம்! நக்கீரனோடு ஐயா நல்லகண்ணுவுக்கு இருந்த உளப்பூர்வமான அன்புக்கு அடையாளமாக, தோழர் மகேந்திரன் நக்கீரனில் தொடராக எழுதிய ஐயா வின் வாழ்க்கை வரலாறை 'கைதி எண் 9658' என்ற நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளது நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்! தன் வாழ்நாள் முழுக்க எளிய மக்களின் போராளியாகவே வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு!