டைகளிலும், ஆறுகளிலும் தத்தளித்தபடி இறந்தவர்களின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் தமிழகத்தின் ஏராளமான கிராமங்களில் இப்போதும் தொடர்கின்றன. சுடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை இல்லாததால் காலம் காலமாக அக்கிராமங்களில் இறந்தவரின் உறவினர்கள் படும்பாடு சொல்லிமாளாது. அப்படிப்பட்ட கிராமங்களுக்கு ஒரு முன்னோடி கிராமமாக அமைந்துள்ளது கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நல்லூர். ஊராட்சிக்கு உட்பட்ட தம்பிக்கு நல்லான் பட்டினம்.

jothi

கடந்த 100 ஆண்டுகளாகவே இக்கிராமத்தில் யாராவது இறந்து போனால் உடலை அடக்கம் செய்ய, சுடுகாட்டுக்கு செல்வதற்கு வழியில்லாமல் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்தனர். மழைக்காலங்களில் விவசாய நெல்வயல்களில் மிதித்து துவைத்துக் கொண்டும், வெள்ளாற்றில் இறங்கி நீந்திச் சென்றபடியே சடலத்தை சுமந்து சென்றும் அடக்கம் செய்து வந்தனர்.

இந்த கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுடு காட்டுபாதை இல்லாமல்படும் சிரமம் குறித்து மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை .

Advertisment

தற்போது ஆதிவராக நல்லூர் ஊராட்சி தலைவராக ஜோதி நாகலிங்கம் தேர்ந் தெடுக்கப்பட்ட பின்னர்தான் இந்த கிராமத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. இவர், சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் நிலம் வைத்திருக்கும் 25 விவசாயிகளை அழைத்துப் பேசியுள்ளார். அவர்களும் மனம் உவந்து சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் இருந்த தங்களின் சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை சாலை அமைக்க தானமாக ஆதிவராக நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிநாகலிங்கம் நம்மிடம் கூறுகையில், ""தம்பிக்கு நல்லான் பட்டினம் மற்றும் ஆயிரம் புறம், புவனகிரி பேரூராட்சி (மேற்கு) ஆகிய மூன்று பகுதி மக்கள் அந்த சுடுகாட்டு மயானத்தில் தான் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய வேண்டும். 100 ஆண்டுகளால இருந்த பிரச்சனை இப்போது தீர்ந்திருக்கிறது. 25 விவசாயிகளும் தங்கள் நிலத்தை ஊராட்சி நிர்வாகத்திற்கு முறைப்படி ஒப்படைத்தனர். அதன்பிறகு எங்கள் சொந்த செலவில் சுமார் ஒன்றரை லட்சம் செலவு செய்து சுடுகாட் டுக்கு பாதை அமைக்கும் பணியை முதல் கட்டமாக செப்பனிட்டுள்ளோம். அரசு மேலும் சீர் செய்ய தார்சாலை அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்றார்.

jothi

Advertisment

அவர் மேலும், ""தமிழகத்தில் இதேபோன்று பிரச்சனை உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளூர் மக்களைக் ஒன்று கூட்டி சுடுகாடு இல்லாத ஊர்களில் சுடுகாட்டுக்கு இடமும், சுடுகாட்டுக்கு பாதை இல்லாத ஊர்களில் அதற்கான பாதையையும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்போடு பிரச்சனைகளை சுமூகமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரலாம். தமிழக அரசு இதற்காக ஒரு சட்டத்தை கூட இயற்றலாம். உதாரணமாக மத்திய, மாநில அரசுகள் சாலை அமைப்பது மற்றும் அரசு திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடந்த 2005ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது மத்திய அரசு. அதில், யாரும் தடையாணை வாங்க முடியாது. அதேபோன்று முறையில் சுடுகாட்டுக்கு இடமும் அதற்கான பாதையும் அரசு கையகப்படுத்தும் போது யாரும் தடுக்காத வகையில் ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில், தம்பிக்கு நல்லான் பட்டினத்தின் தகவலறிந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தின் கூட்டடி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் நம்மிடம் பேசியபோது, ""எங்கள் ஊரில் இருந்து சுமார் இரண்டுகிலோ மீட்டர் செல்ல வேண்டும் சுடுகாட்டுக்கு. ஆனால் அதற்கு பாதை இல்லாததால் வயல்வெளிகளிலும், வாய்க்கால் வரப்புகளிலும் தட்டுத்தடுமாறி இறந்தவர்கள் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்கிறோம். சுடுகாட்டிற்கு பாதை கேட்டு காலம் காலமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் போராட்டம் நடத்தியும் அலுத்து போய் விட்டோம். இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதேபோன்று எங்கள் ஊர் அருகில் உள்ள ஈஸ்வரன் கண்ட நல்லூர் நகர், மன்னார்குடி ஆகிய ஊர்களிலும் இதே போன்று சுடுகாட்டு பிரச்சினை உள்ளது''’ என்கிறார்.

மேலும், ""நிலைமை இப்படி இருக்கும்போது, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் சுடுகாட்டிற்கு புதிதாக பாதை அமைப்பதற்கு 50 லட்ச ரூபாய் அரசு நிதி ஒதுக்கி உள்ளதாம். நிதியை மட்டும் ஒதுக்கினால் போதுமா? அதிகாரிகள் சுடுகாடு இல்லாத ஊர்களுக்கு இடமும், பாதை இல்லாதவர்களுக்கு பாதையும் ஏற்படுத்தித் தருவதில் அக்கறை காட்டுவதில்லையே?'' என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

-எஸ்.பி.சேகர்