கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீரென ‘"அரசியலில் இருந்து நான் துறவறம் பூணு கிறேன்'’ என அறிவித்தார் சின்னம்மா சசிகலா. அதுபோல வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறார். அது அ.தி.மு.க.வை கலக்கப்போகும் அறிவிப்பு என பீடிகை போட்டுச் சொல்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். சசிகலாவின் துறவற அறிவிப்பை முதலில் சொன்ன பத்திரிகை நக்கீரன். அதன்பிறகு அவர் அரசியலில் ஆக்டிவாக இல்லை என்றாலும், அ.தி.மு.க.வின் தலைமைப் பதவியை பெறுவதற்கான காய் நகர்த்தல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டே இருந்தார்... இருக்கிறார். ஒரு காலத்தில் சசிகலாவுடன் பேசுவதே ‘ஜெ.வுடன் நேரடியாகப் பேசுவதற்கு சமம் என்ற நிலை இருந்தது. அன்றைய மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வாக இருந்த எம்.கே.பாலனை கொலை செய்ததாக சொல்லப்படும் ஒரு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர், "சின்னம்மா சசிகலா என்னுடன் பேசிவிட்டார்' என பெருமையடித்துக் கொண்டிருந்தார். அது சசிகலா போல ஒரு பெண் மிமிக்ரி செய்து பேசினார் என்று கோர்ட்டில் சொல்லப்பட்டது. அவ்வளவு மதிப்புவாய்ந்த சசிகலாவின் குரல் இன்று சாதாரணத் தொண்டர் களுக்குக் கூட கேட்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் உள்ள அனைத்துத் தொண்டர்களிடமும் சசிகலா பேசுகிறார். சசிகலாவுடன் தொடர்பில் இல்லாத அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களே இல்லை. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சசிகலாவுடன் பேசுவதற்காகவே சென்னை கதீட்ரல் சாலையில் தனது நண்பரது அலுவலகத்தில் தனி அறையே வைத்திருக்கிறார். ஆர்.பி. உதயகுமார் போன்ற முக்குலத்தோர் இன தலைவர்கள் மட்டுமல்ல; வேலுமணி, தங்கமணி போன்ற எடப்பாடிக்கு நெருக்கமானவர்களும் சசிகலாவுடன் பேசி வருகிறார்கள். எடப்பாடி கட்சியில் மட்டுமல்ல, ஓ.பி.எஸ்.ஸின் தளபதியான வைத்தி லிங்கமும் தினமும் சசியுடன் பேசி வருகிறார். சாதாரண அரசியல் நிகழ்வு தொடங்கி அனைத்து விவரங்களையும் தொலைக்காட்சியைத் தவிர வேறெதையும் பார்க்கும் பழக்கமில்லாத சசிக்கு இவர்கள்தான் எடுத்துச் சொல்கிறார்கள். இவர்கள் சொல்லும் விபரங்களைத்தான் தி.மு.க. அரசுக்கு எதிரான கருத்துக்களாக சசி பேசுகிறார். பேசியபிறகு அவர்களுக்கே போன் போட்டு அவர்களுடைய ரியாக்சனை கேட்கிறார் சசிகலா. இப்படி ஒரு லைவ் அரசியல்வாதியாகவே வலம்வரும் சசி, சில விசயங்களில் தனது பழைய ஸ்டைலில் கறாராகவும் இருக்கிறார்.
வைத்திலிங்கத்துடன் பேசும் சசிகலா, ஓ.பி.எஸ்.ஸிடமும் பேசுகிறார். ஆனால் இதுவரை ஓ.பி.எஸ்.சை நேரில் சந்திக்க வெளிப்படையான எந்த அப்பாய்ண்ட்மென்டும் சசிகலா தரவில்லை. சசிகலா ஓ.பி.எஸ்.சை நம்பவில்லை. கூவத்தூர் பதுக்கல் காலங்களில் ஓ.பி.எஸ். நடந்துகொண்ட விதத்தை சசிகலா இன்னமும் மறக்கவில்லை. பா.ஜ.க. விசயத்தில் சசிகலாவும் ஓ.பி.எஸ்.சும் ஒரே லைன்தான் என்றாலும் ஓ.பி.எஸ்.சை ஏற்க சசிகலா தயாராக இல்லை. ஓ.பி.எஸ். துரோகம் செய்தவர் என்பது சசிகலாவின் மனநிலை. ஓ.பி.எஸ்.சை விட எடப்பாடி எவ்வளவோ மேல் என எடப்பாடி ஆதரவாளர்களிடமும், எடப்பாடியிடமும் நேரடியாகவே பேசிக்கொண்டு இருக்கிறார் சசிகலா. இதுதான் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கும் பெரிய டுவிஸ்ட்.
அ.தி.மு.க. கட்சியை கவுண்டர்களின் கட்சியாக சுருக்கிவிட்டார் எடப்பாடி. என்னதான் ஆர்.பி. உதயகுமார் போன்ற முக்குலத்தோர் இன தலைவர்களை வைத்து சப்பைக்கட்டு கட்டினாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்த முக்குலத்தோர் வாக்குகளை எடப்பாடியால் ஜெயிக்க முடிய வில்லை. அந்த 28 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தால் பா.ஜ.க. உதவியுடன் மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருக்கும். அந்த வாக்குகள் மறுபடியும் அ.தி.மு.க.வுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பு. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.தான் தி.மு.க.வின் மிகப்பெரிய பலம். அதை ஒருங் கிணைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. ஆனால், எடப்பாடி அதற்கு நேரெதிரான நிலையெடுத்து செயல்பட்டு வருகிறார்.
சென்னையை நசுக்கிய பெரு வெள்ளத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுந்த அதிருப்தியை அதிமுக்கிய செல்வாக்காக மாற்ற எடப்பாடியால் முடியவில்லை. அதற்கு அ.தி.மு.க. மா.செ.க்கள் ஒத்துழைக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடியால் முடியவில்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களான வேலுமணி போன்றவர்கள் தலைமையில் அணிவகுத்து நிற்கும் மா.செக்கள் மீது கைவைத்தால் கட்சி உடைந்துவிடும் என எடப் பாடி பயப்படுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்குமானால் எடப்பாடி யின் தலைமையை எதிர்த்து அ.தி.மு.க.வில் கலகம் வெடிக்கும். சசிகலாவுடன் தொடர்பில் இருப்பவர் கள் கலகம் செய்வார்கள் என்கிறது அ.தி.மு.க. தரப்பு. இந்த நிலைமையைச் சமாளிக்க நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பு சசிகலாவுடன் சமரசம் செய்து அவருக்கு ஒரு நல்ல பதவியைக் கொடுத்து அ.தி.மு.க.வை முழுவதுமாக ஒருங்கிணைக்க சசிகலா எடப்பாடி இரண்டுபேர் தரப்பிலும் பேச்சுவார்த் தைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
டி.டி.வி.தினகரன் சசிகலாவின் சொத்துக் களை ஆட்டையைப் போட்டு விட்டார். வெள்ளைப் பணத்தில் இருக்கும் சசிகலாவின் சொத்துக்களை தரமுடியாது எனச் சொல்லிவிட் டார். சொந்த பந்தங்கள் பலமுறை பஞ்சாயத்துப் பேசியும் தினகரன் இறங்கி வரவில்லை. சசிகலா தினகரனை விட்டு விலகிப் போய் விட்டார். இளவரசியின் மகன் விவேக்கும் தினகரனைப் போலவே சொத்துக்களைத் தர முடியாது என மிரட்ட டென்ஷனான சசிகலா சொத்துக்களை விற்க ஆரம்பித்துவிட்டார். வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா மற்றும் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சொத்துக்களை விற்றுக்கொண்டி ருக்கிறார் சசிகலா. சொத்துக்களை விற்று ஒரு பெரிய நிதியை திரட்டிக்கொண்டிருக்கும் சசிகலா, விரைவில் போயஸ் கார்டனில் ‘ஜெ.வின் வீட்டுக்கெதிரே கட்டியுள்ள புதிய வீட்டில் குடியேறப்போகிறார். அந்த கிரகப்பிரவேசமும் சசிகலா அ.தி.மு.க.வில் மீண்டும் இணையும் விழாவும் ஒருசேர நடந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.