"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் கவர்னர் ஆர்.என். ரவியை எடப்பாடி சந்திச்சிருக்கார்.''”
"ஆமாம்பா, நாம் போனமுறையே கவர்னரின் டெல்லி விசிட் பற்றிப் பேசிக்கிட்டோம். அவர் அங்கிருந்து திரும்பி வந்த சூட்டோடு இந்த சந்திப்பு நடந்திருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை 23-ந் தேதி ராஜ்பவனில் சந்தித்தார் எடப்பாடி. அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனி வாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக் குமார், தங்கமணி, வேலுமணின்னு கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலரும் சென்றார்கள். அந்த சந்திப்பில் தி.மு.க. அரசில் நடக்கும் ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, லஞ்ச ஒழிப்புத்துறையின் மெத்தனம்னு சில குற்றச்சாட்டுகள் அடங்கிய புகாரை கவர்னரிடம் கொடுத்துள்ளார் எடப்பாடி. அந்த புகார்கள், அமைச் சர்கள் செந்தில் பாலாஜி, கே.கே. எஸ்.எஸ். ஆர். பற்றியே அதிகம் இருந்ததாம். அதனால் இது குறித்து, ஸ்பெஷலாக ஆராயச் சொல்லி இருக்கிறாராம் கவர் னர்.''”
"தி.மு.க. அரசுக்கு எதிரான புகாரைக் கொடுக்கவா இவ்வளவு அவசரமா எடப்பாடி கவர்னரைச் சந்திச்சார்?''”
"தி.மு.க.வுக்கு எதிரான புகார் மனுவை கொடுப்பதற் காகவே இந்த சந்திப்புன்னு சொல்லப்பட்டாலும், நாக்குத் தவறிப் பேசிய ஒரு வார்த் தைக்காகத்தான் இந்த சந்திப்பு நடந்திருக்குன்னு எடப்பாடி தரப்பிலேயே டாக் இருக்கு. அதாவது, அண்மையில் அமித்ஷா தமிழகம் வந்தபோது, ஏதோ கடுப்பில், அமித்ஷா இங்கு வரும்போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லைன்னு எடப்பாடி சொல்லிவிட்டார். இது தமிழக பா.ஜ.க.வினரைக் கொதிப்படைய வைக்க, அவர்கள் வழியாக அது அமித்ஷாவின் காதுக்கே போய் விட்டது. அவர், இதுபற்றிப் பெரிதாக ரியாக்ஷனை வெளியே காட்டலை. ஆனால், மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, தங்கள் கொதிப்பை எடப்பாடியிடமே கொட்டிவிட்டாராம்.''”
"எப்படி?''”
"எடப்பாடியைத் தொடர்பு கொண்ட அண்ணாமலை, நிதானமாகப் பேசக் கத்துக்கங்க. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா? நீடிக்காதாங்கிறது பிரச்சினையே இல்லை. பா.ஜ.க.வின் ஆகப்பெரிய தலைவராக இருக்கும் அமித்ஷாவை எதுக்கு அலட்சியப்படுத்திப் பேசினீங்க? அதை நீங்க தவிர்த்திருக்கணும்னு காரமான குரலில் சொல்லியிருக்கார். அதனால், தன் நாக்குச் சனி ரியாக்ட் பண்ணுதோன்னு அவர் யோசிக்க, சொந்தக் கட்சியிலேயே இருக்கும் சீனியர்களும், ’நீங்க தேவையில்லாமல் வாயை விட்டுட்டீங்கன்னு சொல்லி இருக்காங்க. இதனால் மிரண்டு போயிருக்கார் எடப்பாடி. அதனால் அமித்ஷாவை தொடர்புகொண்டு மன்னிப்புக் கேட்க அவர் நினைக்க, அவருக்கு இணைப்பு கொடுக்கப் படலையாம். அதனால்தான், டெல்லிக்கு கவர்னர் கிளம்புவதை அறிந்து, அவரிடம் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த எடப்பாடி, அமித்ஷாவை சந்திக்க, நீங்கதான் உதவிசெய்யணும்னு சொல்லி இருந்தாராம்.''”
"ஓ.. டெல்லியின் ரியாக்ஷனைத் தெரிஞ்சிக்கதான், எடப்பாடி கவர்னரைச் சந்திச்சாரா?''”
"ஆமாங்க தலைவரே, டெல்லி சென்ற கவர்னர் ரவி, அங்கே உள்துறை அதிகாரிகளை மட்டும் சந்திச்சிருக்கார். அப்ப அவரிடம், தமிழகத்தில் என்.ஐ.ஏ. நடத்திய ரெய்டுகள் பற்றிய பல தகவல்கள் பகிரப்பட்டிருக்கு. இதன் பின்னர் கவர்னர் ரவியிடம் போனில் பேசியிருக்கிறார் அமித்ஷா. அப்போது, எடப்பாடி அவரைச் சந்திக்க விரும்புவது குறித்து கவர்னர் சொல்ல, அமித்ஷாவோ, அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என் பதுதான் என் விருப்பம். ஒன்றுபடும் அ.தி.மு.க.வுடன்தான் பா.ஜ.க. கூட்டணி வைக்க விரும்புகிறது. இதற்கு சம்மதமெனில், அவருக்கு டெல்லியின் கதவுகள் திறக்கும்னு சொல்லி இருக்கார். அமித்ஷாவின் இந்தத் தகவலைச் சொல்ல விரும்பியதால்தான், எடப்பாடிக்கு கவர்னர், உடனடியாக அப்பாயின்ட் மெண்ட் கொடுத்தாராம். அமித்ஷா சொல்லி அனுப்பிய தகவலைக் கேட்டு, அதிர்ச்சி விலகாமலே அங்கிருந்து கிளம்பிவிட்டாராம் எடப்பாடி.''”
"பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் பெண் நிர்வாகியை கடுமையாக மிரட்டினார்னு செய்தி வருதே?''”
"பா.ஜ.க.வில் பதவி நியமனம் குறித்து, அக்கட்சியின் நிர்வாகி சூர்யா சிவாவுக்கும், சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி டாக்டர் டெய்சிக்கும் இடையே மோதல் ஏற்பட, டெய்சியை சூர்யா ஆபாசமாகத் திட்டி மிரட்டும் ஆடியோக்கள், சமூக வலைத்தளங்களில் பரபரத்துக்கிட்டு இருக்குது. இந்த நிலையில், டெய்சியை 23-ஆம் தேதி தொடர்புகொண்ட அண்ணாமலை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்கணும்னு நினைக்கிறேன். எங்கோ இருந்த கட்சியை நான் இப்ப ஓரளவு பலப்படுத்தி இருக்கேன். இன்னும் பலமாக்கணும். அதுக்கு எனக்கு சூர்யாதான் தேவை. நீ தேவையில்லை. சூர்யா விவகாரத்தைப் பெருசாக்குற உன்னை ஜீரணிக்கவே முடியலை. முதல்ல நீ ராஜினாமா பண்ணிட்டு ஓடிடுன்னு ஆரம்பிச்சி, டெரராவே மிரட்டினாராம். இதை பா.ஜ.க. தரப்பே பரப்பிக்கிட்டு இருக்குது.''”
"தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக மறுபடியும் உதயநிதி நியமிக்கப்பட்டிருக்கிறாரே?”
"ஆமாங்க தலைவரே, அவர் நியமிக்கப் பட்டதுடன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சராகிட்டதால அவரோட இடத்திலும், அசன் முகமது ஜின்னா அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞரானதால மரபுப்படி அவர் போன வருடமே ராஜினாமா பண்ணிட்டதாலும், புது துணைச் செயலாளர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அந்த இடங்களுடன் மற்ற துணைச் செயலாளர்களில் பெரும்பாலானவர்களை மாற்ற, இளைஞரணி துணைச் செயலாளர்களாக மாவட்டப் பொறுப்புகளில் இருந்தவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கு. இது இளைஞரணியினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கு. அதேபோல, கனிமொழி வகித்துவந்த மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிற்கு, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டிருக்கார். கனிமொழியை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக்கிய போது, மகளிரணிச் செயலாளர் பொறுப்பு குறித்து அவரிடமே சாய்ஸை விட்டுவிட்டார் ஸ்டாலின். அதன்படிதான் ஹெலன் நியமனம் நடந்திருக்கு.''”
"தாம்பரம் கமிஷனர் அலுவலகம் ஏகத்துக்கும் பரபரப்பில் இருக்குதே?''”
"தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் டி.சி.யாக இருப்பவர் மூர்த்தி. இவர், தனது டிரைவர்களாக இருந்த 18 பேரை இதுவரை மாற்றிவிட்டாராம். அவர்களில் ஒரு ஓட்டுநர், கடுப்பாகி, அவரது காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டுச் சென்றாராம். அதேபோல் ஒரு அதிகாரிக்கு அவர் மெமோ கொடுத்தாலும், அவருக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் தெரியும்படி கொடுத்து சங்கடப்படுத்துவாராம். இவர் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கரூரில் இருந்த போது, கே.என்.நேருவிடமே மோதியவர் என்கிறார்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலக போலீசார். அவரது இதுபோன்ற அதிரடியால் தாம்பரம் கமிஷனர் அலுவலகம் பதட்டத்தில் இருக்க, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜோ, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஏடி.ஜி.பி.யாகவோ அல்லது சென்னை கமிஷன ராகவோ ஆக வேண் டும் என்பதிலேயே கவனத்தைச் செலுத்தி வரு கிறாராம்.''”
"தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை, பதவியில் இருந்து தூக்கணும்னு டெல்லிக்கு ஒரு டீம் போனதே?''”
"அண்மையில், காங்கிரஸ் அலு வலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த உருட்டுக்கட்டை மோத லும், அங்கே அரங் கேறிய ரத்தகளறிச் சம்பவங்களும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ லில், சம்பவத்துக்குக் காரணமான கே.எஸ். அழகிரியின் தலைவர் பதவியைப் பறிக்கணும் என்ற கோரிக்கையோடு, முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் டெல்லிக்குப் பறந்தார்கள். இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு, கட்சியின் அகில இந்தியத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேயைச் சந்தித்தார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அவர், குஜராத் தேர்தலில் எல்லோரும் பிசியாக இருக்கிறோம். தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று அவர்களைத் திருப்பியனுப்பி பு;ஸ்வாணமாக ஆக்கிவிட்டாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சசிகலாவின் பி.ஏ.வாக இருப்பவர் கார்த்தி. இவரிடம் ஜெ.வின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன், சசியை சந்திக்க நேரம் கேட்டாராம். ஆனால் பலமுறை கேட்டும் கார்த்தி அலைக்கழிக்கிறாராம். எப்படி ஜெ.’ இருந்தபோது அவரை யாரும் சந்திக்க முடியாதபடி சசிகலா நந்தியாக இருந்தாரோ, அதேபோல் கார்த்தி, சசிகலாவுக்கு இருக்கிறார் என்கிறார்கள். சசியின் ஆதரவாளர்கள் பலரையும் கூட இது புலம்ப வைத்திருக்கிறது. கார்த்தி இப்படி பிரேக் பிடிப்பதற்குக் காரணம், அவர் இளவரசி மகன் விவேக் மற்றும் தினகரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறாராம். அவர்களிடம் இருந்து சிக்னல் கிடைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் சசியை சந்திக்க முடியுமாம்.''”
________________________
தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ.வின் பிறந்தநாளையொட்டி இந்த இதழில் விளம்பரங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. வரும் இதழில் வழக்கம்போல செய்திகள் அதிகளவில் இடம்பெறும் என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-ஆர்