ஒருவழியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திருவிழாவில் வாக்குப்பதிவும் முடிந்துவிட்டது. ஓட்டுக்கு நோட்டினை கச்சிதமாக சேர்த்துவிட்டார்கள் அரசியல் கட்சியினர்.
இதனைக் கண்டிக்கும்விதமாக தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன், 18-ந் தேதி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டார். “""தேர்தல் ஆணையம் செயலற்றுக் கிடக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் ரூ.75 கோடி வீதம் ஊழல் செய்து சேர்த்த ரூ.150 கோடியை வாக்காளர்களுக்கு வாரி இறைக் கிறார்கள். ஜனநாயகத்துக்கு விரோதமான இந்த செயலை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே, இந்த கட்சிகளின் வேட்பாளர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
அவரிடம் சமாதானம் பேசிய போலீசார், "தேர்தல் அதிகாரி சந்திரசேகரனிடம் இது சம் பந்தமாக புகார் கொடுங்கள்' என கேட்டுக் கொண்டனர். அவரும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் கௌதமன் கட்சியினர்.
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., ஸ்டா லின் ஆகியோரின் இரண்டுகட்ட பிரச்சாரங்களின் பரபரப்புக்கு மத்தியில், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க வந்திருந்தார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
விக்கிரவாண்டியை அடுத்து காணை, கெடார், கஞ்சனூர் ஆகிய பகுதிகளில் முத்தமிழ்ச் செல்வன், அமைச்சர் சண்முகம் இருவரும் வேனுக்கு வெளியே தலைகாட்ட, விஜயகாந்த் காருக்குள்ளேயே அமர்ந் திருந்தார். இதுபோல பல ஓட்டை கள் வரிசை கட்டினாலும், ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததோடு பெண் களுக்கு சேலைகொடுத்த தெம்பில் இருக்கிறது அ.தி.மு.க. தரப்பு.
இன்னொருபுறம், தி.மு.க. தலை வர் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது, ஏழுசெம்பொன் கிராமத்தில் மக்கள் கூட்டத்தை அதிகமாகக் காட்டுவதற் காக அந்த ஊரைச்சேர்ந்த பள்ளி மாணவர்களை அழைத்துவந்து கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைத்திருந்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி யதை அடுத்து, மாவட்ட கல்விஅலு வலர் முனுசாமி சம்பந்தப்பட்ட பள்ளி தலைமைஆசிரியரிடம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு மாணவ- மாணவிகள் எப்படிச் சென்றார்கள். இதற்கு யார் பொறுப்பு என்பதை விசாரித்து பதிலளிக்குமாறு கேட்டுள்ளார்.
பிரச்சாரத்தின் இறுதிநாளான 19-ந் தேதி மாலை 6 மணிக்கே வெளியூர் அரசியல் கட்சியினர் வெளியேறி விடவேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு. இதனைமீறி, வெளி யாட்கள் தங்கியுள்ளார்களா என்பதையறிய, திருமண மண்ட பங்கள், தனியார் விடுதிகளில் சோதனையில் குதித்தது எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான டீம். 184 பேரை கைது செய் துள்ளனர். 848 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் இருக்கும் 275 வாக்குச்சாவடிகளில், பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்ட 24 வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் கல்பட்டு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியின் வாக்கு விழுப்புரம் டவுனில் இருப்பதால், அவர் வாக்களிக்கவில்லை. பூண்டி, துறவி, சங்கீதமங்கலம் ஆகிய வாக்குச்சாவடிகளில் ஓட்டு மெஷின்கள் வேலை செய்யாததால், வாக்குப்பதிவு தாமதமாகவே தொடங்கியது.
விக்கிரவாண்டியில் வாக்குச்சாவடி அருகே பந்தல் அமைத்து, வாக்காளர்களை அழைத்துச்செல்ல காத்திருந்தனர் தி.மு.க.வினர். அப்போது அங்குவந்த இன்ஸ்பெக்டர் பூங்கோதை, "பூத்துல இருந்து 200 மீட்டர் தள்ளிதான் பந்தல் போடணும்' என பந்தலைப் பிரிக்க முயற்சிசெய்தார். இதனால், தி.மு.க.வினருக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. இதனைப் படம்பிடிக்க வந்த பத்திரிகையாளர் களிடம் பிரச்சனை செய்தார் இன்ஸ். பூங்கோதை.
கல்யாணப்பூண்டியல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. நிர்வாகி சேகர் மற்றும் பா.ம.க.வைச் சேர்ந்த மணி கண்டன் இடையே பணம் பிரித்துக்கொள்வதில் தகராறு ஏற் பட்டு கைகலப்பானது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், மிதமான சாரல் மழையில் நனைந்தபடியே மகிழ்ச்சியாக வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றார்கள் வாக்காளர்கள். 84.36% வாக்குகள் பதிவாகியுள்ளது.
-எஸ்.பி.சேகர்