கவிஞர் கே.ஜீவபாரதி தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள "காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்' என்ற நூலின் வெளியீட்டு விழா, ஜூலை 28. திங்களன்று காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. சி.பி.ஐ. பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூலினை, நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, முதல் பாகத்தை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். நூலின் இரண்டாம் பாகத்தை கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக் கொண்டார். சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குநர் க.சந்தானம், ஓவியர் அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.
விழாவில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய ஸ்டாலின் குணசேகரன், "கவிஞர் கே.ஜீவபாரதி எழுதியுள்ள "காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்' நூலில் எவ்விதச் சார்புத்தன்மையும் இன்றி, வரலாறு வரலாறாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் கே.ஜீவபாரதி இன்றைக்கு வர இயலவில்லை. எனினும், அவருக்கு அனைவரும் சேர்ந்து பாராட்டை, வாழ்த்தை தெரிவிப்போம்'' என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "பொது வுடைமை இயக்கமும், திராவிட இயக்கமும் சமூக விடுதலைக்கான இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக இன்றுவரை இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்புடன் கவிஞர் ஜீவபாரதி வடித்துள்ள இந்நூல், இந்த மண்ணின் சிந்தனையைச் சிவப்பாக்கிய ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலர்’ முதல், ‘மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்த்த தா.பாண்டியன்’ வரையிலான நூறு கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை இரு பாகங்களாக இன்றைய தலைமுறைக்கு எடுத்து இயம்புகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமையுரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா பேசும் போது, "இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைப்பு ரீதியாகத் தொடங்கி, இன்றைக்கு நூறாண்டுகள் ஆகின்றது. காரல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் முதலில் மொழிபெயர்த்தவர் பெரியார்.
இன்றைய இந்தியச் சூழலில் புரட்சியை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டுமானால், கம்யூனிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், பெரியா ரிஸ்டுகள் அனைவரும் ஓரணியில் நின்று போராடவேண்டும். இதுவே காலத்தின் தேவையாக வந்திருக்கிறது'' எனக் குறிப்பிட்டார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "தோழர் ராஜா பேசும்போது, நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். காமராஜர் அரங்கத்தைப் பார்க்கும்போது அதை நான் பரிபூரணமாக உணர்கிறேன். காலம் மாறிக்கொண்டேயிருக்கும், ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் மாறுவதேயில்லை என்பதை இந்நூலின் தலைப்பு உணர்த்துகிறது. நூற்றாண்டு கண்ட இந்த கம்யூனிச இயக்கம், மாறாத தன்மையோடு நிலைத்துநின்று மக்களுக்காகப் போராடிவருகிறது'' என்று புகழ்ந்துபேசினார்.
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசும்போது, "கீழ்வெண்மணி கொடூரத்தின்போது அங்கு சென்ற ஒரே மடாதிபதி குன்றக்குடி அடிகளார் தான். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லையென்ற விவசாயிகளின் ஏமாற்றத்தை தீர்ப்பதற்காகத்தான் உழவர் சந்தை திட்டத்தை கலைஞர் கொண்டுவந்தார். அவர் வழியில், பொதுவுடைமை சிந்தனைகளை செயல் படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார். சைவ சித்தாந்தமும் கம்யூனிசமும் வாழ்வியல் முறையில் ஒன்று'' என்று குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர் பெ.சண்முகம், "தான் உண்டு, தன் வேலையுண்டு என்று பெரும் பகுதியினர் இருக்கக்கூடிய காலகட்டத்தில் உடல், பொருள், ஆவி என அத்தனையையும் மக்களுக்காக அர்ப்பணிப்பது என்பது இந்த நூலில் இடம்பெற்றுள்ள எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். சொந்த வாழ்க்கையைப் பற்றி கடுகளவும் சிந்திக்காமல், மக்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு அந்த தலைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன், "நானறிந்தவரையில் புத்தகம் முழுவதும் ஆர்ட் பேப்பரில் போட்டிருப்பது இதுதான் முதல் முறை. அதேபோல் தலைவர்கள் படங்கள் அனைத்தையும் திருவண்ணாமலை அன்பு மிகச்சிறப்பாக வரைந்துள்ளார். தோழர் அன்புவிற்கும், தோழர் ஜீவபாரதிக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூலை என்.சி.பி.ஹெச். நிறுவனம் மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளது'' என்று பாராட்டி னார்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, "இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியைப்போல் காயப்பட்ட, நசுக்கப்பட்ட கட்சி எதுவுமில்லை. ரஷ்ய புரட்சிக்குப்பின் பிரிட்டிஷ் அரசு காங்கிரஸை விட கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்தே பயந்தது. புரட்சியை அடிப்படை சித்தாந்தமாகக்கொண்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தியாகத்தின் அடிப்படையில் செதுக்கப்பட்ட கட்சி இது. அதனால் இதை அழிக்க முடியவில்லை'' என்றார்.
காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூலில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்கள் 100 பேரின் வாழ்க்கை வரலாறுகள், நேர்த்தியாகவும், நெகிழ்ச்சியாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைவருக்கான தலைப்புமே அவர்களின் தனித்துவத்தை சொல்வதாக அமைந்துள்ளது. அவர்களைப் பற்றிய விரிவான செய்திகளை அறிந்துகொள்ள உதவும் நூல்கள் குறித்த விவரங்களையும் இணைத்திருப்பது, இன்றைய தலைமுறையினருக்கு கூடுதல் பயனளிப்பதாக உள்ளது.