ரஃபேல் என்ற வார்த்தை யைக் கேட்டாலே பா.ஜ.க.வில் மோடி முதல் அத்தனை பேரும் அலறுகிறார்கள். மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல் தொடர் பாக, எஸ்.விஜயன் எழுதிய சிறிய புத்தகம் ஒன்றை, மூத்த பத்திரிகையாளரும் இந்து குழு மத்தின் தலைவருமான என்.ராம் வெளியிடுவதற்கான நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு பாரதி புத்தகா லயம் சார்பில் விண்ணப்பிக்கப் பட்ட போது, அனுமதி மறுக்கப் பட்டது. அதனால் புத்தக விற் பனை நிலையத்திலேயே அதனை வெளியிட முடிவுசெய்யப்பட்டது.
இந்தத் தகவல், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. அவர், பா.ஜ.க. பிரமுகர் கே.டி.ராகவனைத் தொடர்புகொண்டு, "இது தேர்தல் நடத்தை மீறல் என்பதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லுங் கள்' என்றார். ராகவன் தரப்பிலிருந்து, தமிழகத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆடிட்டர் குருமூர்த்தியும் பேசியுள்ளார். அதே நேரத்தில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும் பா.ஜ.க. இது பற்றி முறையிட, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உத்தரவுப்படி, நடவடிக்கைக்கு ரெடியானது இங்குள்ள ஆணையம்.
சென்னையின் தேர்தல் அதிகாரியாக இருப்பவர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ். அவருக்கு சாஹு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அதன்படி பாரதி புத்தகாலயத்திற்கு ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கான பறக்கும்படை அதிகாரி கணேஷ், தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருடன் நுழைந்து ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தகங்களின் 200 பிரதிகளை பறிமுதல் செய்தார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது. சமூக வலைத்தளங் களில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு, தரவிறக்கம் செய்யப்பட்டது.
விவகாரம் வேறு மாதிரியாக செல்வதும், ரஃபேல் ஊழல் பேசுபொருளாவதும் பா.ஜ.க.வை அச்சுறுத்த, தேர்தல் ஆணையம் பின்வாங்கியது. தேர்தல் அதிகாரி பிரகாஷிடம் விளக்கம் கோருவதுபோல நிலைமையை உருவாக்கி, அதனடிப்படையில் பறக்கும்படை கணேஷ், இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்டோரை தேர்தல் பணியிலிருந்து விலக்குவதாக கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொண்டார் சத்யபிரதா சாஹு.
இந்த பரபரப்பிற்கிடையே நூலை வெளியிட்டார் இந்து என்.ராம். பாரதி புத்தகாலய மேலாளர் க.நாகராஜனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ""இதில் முழுக்க முழுக்க அரசியல் இருக்கிறது. மற்றபடி வெளியீட்டு விழாவிலேயே 8 ஆயிரம் பிரதிகள் விற்கவும், மேலும் 10 ஆயிரம் பிரதிகள் உடனடியாக ஆர்டர் கிடைக்கவும் இது உதவியிருக்கிறது. இணையத்தில் மட்டும் சுமார் 10 லட்சம்பேர் இந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்''’என்றார்.
-இளையர் & சோழன்
படம் : ஸ்டாலின்