ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப் படைக் கட்சியைச் சேர்ந்தவர் ஹரிநாடார். பத்து விரல்களிலும் பெரிய பெரிய மோதிரங்கள். இரண்டு கைகளிலும் வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கப் பட்டைகள். கழுத்தில் தேர் இழுக்கிற வடம் போன்ற கனத்த சைசில் பல சுற்றுகள் போடப்பட்டிருக்கும் தங்கச் சங்கிலிகள். மொத்தத்தில் மூன்றே முக்கால் கிலோ எடை கொண்ட தங்க ஆபரணங்கள். நிமிர முடியாத கனத்துடன் நகரும் நகைக்கடை போன்று வலம் வரக்கூடிய அடையாளம் கொண்டவர். சென்னையில் தொழிலதிபர் என்றாலும் நெல்லை மாவட்டத்தின் தேவர்குளம் சமீபமுள்ள மேல இலந்தைக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஹரி நாடார்.
2018 நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஹரி நாடார், நடந்தமுடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படைக் கட்சியின் வேட்பாளராகக் களம் கண்டு 37,727 வாக்குகள் பெற்று தி.மு.க.வின் வேட்பாளர் பூங்கோதை தோற்கக் காரணமாக இருந்தவர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ப்ளைட்டில் வந்திறங்கிய ஹரி நாடாரை மத்திய வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துக்கொண்டு சென்றனர். அவரது வியாபாரம் தொடர்பாக கட்டவேண்டிய நிலுவையின் வருமானவரி பெனால்ட்டி உட்பட ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய்க்கான டி.டி.யை வாங்கிக் கொண்ட பிறகே அவரை விடுவித்திருக்கிறார்கள்.
தற்போது பெங்களூர் பார்ட்டி ஒருவரால் ஹரி நாடார் மீது தரப்பட்ட மோசடிப் புகாரில் கேரள மாநிலம் கோவளத்தில் பதுங்கியிருந்த ஹரி நாடாரை உளவுத் தகவ-ன் அடிப்படையில் கர்நாடகா போலீஸ் விசாரணைக்காகக் கொண்டுபோனது.
பெங்களூரைச் சேர்ந்த வெங்கட் ரமணி என்பவர் தன்னிடம் 350 கோடிக்கும் மேலான இடங்கள் இருக்கிறது. அதனை அடமானமாக வைத்து 360 கோடி கடன் வேண்டும். அதற்கான ஏற்பாடு செய்யக் கேட்டு ஹரி நாடாரை அணுகியிருக்கிறார். அதற்கு ஹரி நாடார் குறைந்த வட்டி யில் கடன் வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். முறையாக 12 கோடி கமிசன் பேசப்பட்டுள்ளது. ஆனால் 10 கோடி மதிப்பிலான நிலங்களுக்குரிய டாக்குமெண்ட்களைக் கொடுத்த பெங்களூர் வெங்கட் ரமணி, இதைக் கொண்டு ஆரம்பகட்ட வேலையைப் பாருங்கள், மற்றவைகளைப் பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி, முதற்கட்ட கமிசனாக ரூ.7.20 கோடி ஹரி நாடாரிடம் கொடுத்திருக்கிறார்.
இதன்பின் இருவருக்குள்ளும் டீலிங்குகள் தொடரவில்லையாம். அடுத்தகட்டமாக இவர்களுக்குள் எந்தவித தொடர்புமில்லாமல் போயிருக்கிறது. கமிசன் தொகை பற்றிக் கேட்டதற்கு ஹரி நாடார் தரப்பில் பதில் இல்லை. இதையடுத்தே பெங்களூர் வெங்கட்ரமணியின் புகாரின் பேரில், பெங்களூர் போலீசார் ஹரி நாடார், ஜெகதீஷ் சுப்பிரமணியா, பாஸ்கர்ராஜ், தேஜூ, குருஜீ திருவனந்த புரத்தின் ரஞ்சித் பணிக்கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் அது சமயம் அவர் மீது கர்நாடகா போலீஸ் கை வைக்கவில்லை என்கிறார்கள். தேர்தலுக்குப் பின்பு உளவுத் துறையின் தகவலடிப்படையில் கேரளாவின் கோவளத்தில் தலைமறைவாயிருந்த ஹரி நாடாரை வளைத்து விசாரணைக்காகக் கொண்டு போயிருக்கிறார்கள். இதில் விசாரணை முறையாகப் போகுமேயானால் இரண்டு தரப்பினரைப் பற்றிய உண்மைகள் வெளியே வரலாம்.
"கைதுசெய்யப்பட்டுள்ள ஹரிநாடார் மீது 15 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தொழிலதிபர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கமிஷன் பெறுவதை ஒரு யுக்தியாகவே ஹரிநாடார் கடைப்பிடித்து வந்திருக்கிறார்' என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. வெங்கட் ரமணி தவிர வேறு தொழிலதிபர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என கர்நாடகா போலீஸ் விசாரித்துவருகிறது.