ஹெலிகாப்டரில் பறந்து ஆறுதல் சொல்லவந்து கடுமையான விமர்சனத்தை சந்தித்த இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும், டேமேஜான தங்கள் இமேஜை தூக்கிநிறுத்த ரயில் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சந்திக்க வந்தார்கள். ஆனால், அப்போதும் நிவாரணம் புயல் பாதித்த மக்களுக்கு கிடைக்கவில்லை.

புயல் பறித்த உயிர்களின் எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் அரசு நிர்வாகத்தின் அலட்சிய செயல்பாடு உயிர்களைப் பறித்தது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி சௌந்தரராசன், ""எனது 5 ஏக்கர் தென்னையும் அடியோடு அழிஞ்சு போச்சே. மரத்துக்கு இழப்பீடாக ரூ.1,100 எப்படி போதும். நான் வாங்கின கடனை எப்படி கட்டுவேன்'' என்று பேட்டி கொடுத்தவர், விஷம் குடித்து இறந்துபோனார்.

peopleswaitforcm

Advertisment

ஒரத்தநாடு -ஒக்கநாடு கீழையூர் சிவாஜி என்ற விவசாயி "தென்னையும், நெல்லும் அழிஞ்சு போச்சே' என்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார்.

பட்டுக்கோட்டை வாட்டாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முத்துப்பேட்டைக்கு கடைக்குச் செல்ல தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 200 மீட்டர் தூரம் சென்றார். சாலையின் குறுக்கே தாழ்வாக தொங்கிய மின்கம்பி கழுத்தில் அறுத்து கீழே விழுந்து உயிர்விட்டார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ள முள்ளங்குறிச்சி கிராமத்தில் முனியாண்டி என்ற விவசாயி தனது தோட்டத்தில் முறிந்து கிடந்த தென்னை மரங்களைப் பார்த்து உயிரைவிட்டார்.

நெடுவாசல் கிராமத்தில் திருச்செல்வம் என்ற விவசாயி தனது 20 ஏக்கரில் நின்ற தென்னை, பலா, வாழை, சவுக்கு மற்றும் பல மரங்களும் அடியோடு சாய்ந்து கிடப்பதை பார்த்து தவித்தவர் விஷம் குடித்தார். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

26-ந் தேதி காலை கந்தர்வகோட்டை மங்கனூர் கிராமத்தில் அழிந்துகிடந்த தனது சோளப்பயிர்களை பார்க்கச் சென்ற விவசாயி தங்கராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னமாக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் 14 நாட்கள் ஆகியும் குடிதண்ணீர்கூட கிடைக்காமல் தவிக்கும் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகி நிற்கிறார்கள். உணவும், தண்ணீரும், மின்சாரமும் கேட்டு சாலையில் இறங்கிப் போராடும் நிலையில் 28 ஆம் தேதி பலத்த பாதுகாப்போடு நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நாடகக் காட்சிகளை முதல்வரும் துணை முதல்வரும் அரங்கேற்றினார்கள்.

28-ஆம் தேதி அதிகாலை நாகைக்கு ரயிலில் வந்த இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் பயணியர் மாளிகையில் தங்கினார்கள். முதல்நாள் இரவே, அவர்கள் நிவாரணம் வழங்குவதற்காக நாகை, வேதாரண்யம் தாலுகாக்களைச் சேர்ந்த கட்சிக்காரர்களுக்கு நன்றாக பயிற்சி அளித்து அழைத்து வந்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் தங்கவைத்திருந்தனர். அவர்களுக்கு 27 வகையான நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்கள்.

பிரதாமராமபுரம் சென்ற முதல்வர் அங்கு மூன்று நாட்களாக அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டிருந்த மக்களைச் சந்தித்து, “""எல்லோரும் நல்லாருக்கீங்களா?'' என்று கேட்டார். அதற்கு அந்த பெண்கள் ""நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்னா குறைங்க?''’’என்று கோரஸாக பதில் சொன்னார்கள்.

peopleswaitforcm

வள்ளி என்ற பெண்ணிடம் நாம் இதுபற்றி விசாரித்தபோது, “""இப்படி சொன்னால்தான் வீடு. இல்லைன்னா கிடையாதுன்னு சொன்னாங்க''’என்று உண்மையை போட்டுடைத்தார்.

வேட்டைக்காரனிருப்பு முகாமுக்குச் சென்றபோது 11.40 மணிவரை காலை உணவு இல்லாமல் மக்கள் பசிக்களைப்பில் இருந்தார்கள். "முதல்வர் வந்ததும்தான் சாப்பாடு' என்று சொல்லியிருந்தார்கள். பல பெண்கள் குழந்தைகளோடு துவண்டு கிடந்தனர். இந்த லட்சணத்தில், “""நீங்க வந்ததும்தான் சாப்பிடுவோம்னு மக்கள் காத்திருக்கிறார்கள்''’’ என்று அதிகாரிகள் முதல்வரிடம் பொய் சொன்னார்கள்.

முகாமில் இருந்த மீனாட்சியிடமும், மாரியப்பனிடமும் விசாரித்தோம், “""இவ்வளவு நாள் ரேசன் அரிசியில் செய்த புளிசாதம் போட்டாங்க, முதல்வர் வராருன்னு எல்லாத்தையும் மாத்தியிருக்காங்க. இதுவரை எட்டிப்பாக்காத அ.தி.மு.க.காரவுங்க கூட முதல்வர் வராருன்னு வந்துட்டாங்க. காலையிலேயே துப்பாக்கியோட அதிகாரிங்க வந்துட்டதால, எழுந்ததில் இருந்து உட்கார்ந்திருக்கோம்'' என்றனர்.

விழுந்தமாவடியில் அமைச்சர் வேலுமணியின் விருப்பத்துக்காக முதல்வரும் துணைமுதல்வரும் அடிபம்ப்பை அடித்து தண்ணீர் குடிப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். பிறகு நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளை காருக்குள் இருந்து கண்ணாடிவழியாக பார்த்துச்சென்றார்கள். தோப்புத்துறையில் காலை 8 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை 300 பெண்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களைக்கூட பார்க்காமல் பக்கத்திலிருந்த அமைச்சர் ஓ. எஸ்.மணியனிடம் பேசியபடியே போனார் முதல்வர். காத்திருந்த சிரோன்தேவியிடம் பேசினோம்,…""இவருக்கு ஜெயலலிதான்னு நெனப்பு போல. காலையில இருந்து நாயா காத்துக்கிடக்கிறோம். நூறுநாள் வேலையைச் செய்திருந்தா ஊராவது சுத்தமாகியிருக்கும்''’’ என்றார்.

""நாங்க நிற்கிற இடம்தான் புயல்கரையேறுன மையமான இடம். இங்கயே இறங்கிப் பார்க்காதவர் எங்கபோயி பார்த்திடபோறாரு'' என்றார் குழந்தைகளோடு வந்திருந்த செந்தில். வேதாரண்யம் அருகில் உள்ள மகாராஜபுரத்தில் முதல்வரின் பாராமுகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கைக்குழந்தையோடு போராட்டத்தில் பங்கேற்ற செந்தமிழ்செல்வி, ""முதல்வர் பார்த்துட்டார். நிவாரணம் கொடுக்கிறோம். முகாமை கலைக்கபோறோம்ன்றாங்க. வீடு கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டோம்''’’ என பிடிவாதமாகவே பேசினார்.

முதல்வரோ மதியஉணவை வேதாரண்யத்தில் சாப்பிட்டுவிட்டு, ஆதனூர், வாய்மேடு பகுதிகளைப் பார்த்துவிட்டு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு சென்றார். அங்கு ஒரு டீக்கடையில் காபிகுடித்து ஒரு காட்சியை அரங்கேற்றிவிட்டு மணலிக்கு சென்றார்கள். அங்கு அமைச்சர் காமராஜின் ஏற்பாட்டில் "காவிரி' ரெங்கநாதன் தலைமையிலான விவசாயிகளை சந்தித்தார். பிறகு இருட்டில் மழையோடு வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மக்களை பார்வையிட்டபடியே ரயிலில் சென்னை புறப்பட்டார்.

""கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இருப்பது கீழையூர், தலைஞாயிறு, கோடியக்கரை. அந்த மக்களைச் சந்திக்காமல், பிரச்சனை இல்லாத இடங்களுக்கு பாதுகாப்போடு வந்து போயிருக்கிறார்கள்'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரிலேயே வீட்டை இழந்த ராஜலெட்சுமி, “""பானையை அடகு வச்சு 300 ரூபாய்க்கு பாய் வாங்கி டெண்டு கொட்டா போட்டு அதுக்குள்ள சோறாக்குறேன்''’என்று புலம்பினார். ""அமைச்சரின் வீட்டுக்கு தெற்கே ஒரு கிலோமீட்டரில் தனித்தீவாக இருக்கிறது குண்டுரான்வேலி. மொத்த வீடுகளையும் பறிகொடுத்தவர்களை இதுவரை யாருமே வந்து பார்க்கவில்லை'' என்கிறார்கள்.

"காப்பாற்ற வரச்சொன்னால் கருமாதிக்கு வருவதா' என்ற கோபப்புயலே மக்களிடம் அதிகமாக வீசுகிறது.

-க.செல்வகுமார்