ட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் களத்தில் முதல் ஆளாய் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வரும் தி.மு.க., அந்த பணிகளில் வேகம்காட்டி வருகிறது.

மதுரை பொதுக்குழுவில், "உடன்பிறப்பே வா' என்ற பெயரில் தி.மு.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தொகுதிவாரியாக நானே ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். அந்த வகையில், தொகுதி வாரியாக உடன்பிறப்புகளை சந்தித்து வருகிறார் ஸ்டாலின்.

dmk

ஒன் டூ ஒன் சந்திப்பில் கலந்துகொண்ட உடன்பிறப்புகள் சிலரிடம் பேசினோம்.

சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ஒருவரிடம் நாம் பேசியபோது, "எங்கள் மாவட்டத்துக்கு தலைவர் வரும்போதெல்லாம் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால், அதேபோன்ற வரவேற்பு தொண்டர்களுக்குத் தலைவர் கொடுத்த தில் எங்களுக்குத் தலை கால் புரியவில்லை. அத்தனை மகிழ்ச்சி. அறிவாலயத்தில் நுழையும்போது, "உடன்பிறப்பே வா' என்ற அழைப்பு எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Advertisment

மேலும், சாதனை விளக்க பேனர்கள், தலைவர் செல்ஃபி பாயிண்ட், புகார் பெட்டி என புதிய சிந்தனையில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொண்டர்களுக்கு இவ்வளவு சிறப்பான வரவேற்பு வேறு எந்த கட்சியிலும் நிகழாத சம்பவம்''’என்றார் பெருமிதமாக.

பரமக்குடி தொகுதி தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "தலைவரை நான் சந்திப்பேன் என்றோ, தனிப்பட்ட முறையில் என்னிடம் அவர் பேசுவார் என்றோ நான் நினைக்கவே இல்லைங்க. ஆனா, அத்தனையும் நடந்தது. தொகுதியில் உள்ள குறைகள், கட்சியினரின் செயல்பாடுகளில் உள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் தயக்கமின்றி, பயமின்றி என்னிடம் பகிர்ந்துகொள்ளலாம் எனச் சொன்னார் தலைவர். அதுவே எனக்கு பெரிய கௌரவம். தொகுதியின் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னேன். அவரே அதனை குறித்தும்கொண்டார். கலைஞரை நேரில் பார்த்ததுபோல இருந்தது''’என்றார் நெகிழ்ச்சியாக.

ஸ்டாலினின் ஒன் டூ ஒன் ஆலோசனை எப்படி நடக்கிறது என்பதை விசாரித்தோம். "நிர்வாகிகள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பி வைக்கப்படுகின்றனர். முதல்வர் ஸ்டாலினுடன் ஆர்.எஸ். பாரதி, அன்பகம் கலை, தலைமைக் கழக நிர்வாகிகள் அந்த அறையில் இருக்கின்றனர். அதே சமயம், மா.செ.க்கள், அமைச்சர்கள் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. நிர்வாகிகள் சொல்லும் குறைகளை, குற்றச்சாட்டுகளை தலைமைக் கழக நிர்வாகிகளிடம் விவரித்து, உடனடி நடவடிக்கை எடுக்கச்சொல்லி அறிவுறுத்துகிறார் ஸ்டாலின்'' என்றனர்.

Advertisment

இது குறித்து ஸ்டாலினை சந்தித்துவிட்டு வந்த நிர்வாகிகள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "அறைக்குள் சென்றதும் தனக்கு அருகிலேயே அமரச் சொல்கிறார் தலைவர். அமர்ந்ததும், "குறைகள் எதுவாக இருந்தாலும் தைரியமாகச் சொல்லுங்கள். இந்த அறையில் உங்களை தடுப்பதற்கோ, சமிக்ஞை செய்வதற்கோ யாரும் இல்லை. உண்மைகளை மட்டும் சொல்லுங்கள்' எனச் சொல்கிறார். அவர் கொடுத்த தைரியம், எங்களை இயல்பாகவும் பதட்டமில்லாமலும் பேசவைத்தது. தலைவரிடம் ஒரு ரிப்போர்ட் இருக்கிறது. அதைவைத்து நாங்கள் சொல்வதையும் சரி பார்த்துக்கொள்கிறார். அதில் ஏதேனும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் எங்களிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு சரியான விளக்கம் சொன்னால், சபாஷ் என பாராட்டவும் செய்கிறார் தலைவர். "என்னை மீறி எதுவும் யாரும் செயல்பட முடியாது. உங்களுக்கு நான் இருக்கிறேன். உற்சாகமாகவும் உண்மையாகவும் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள். உங்களுக்கான அங்கீகாரம் உரிய வகையில் வந்தே தீரும்' என நம்பிக்கை கொடுக்கிறார் தலைவர்''’என்றனர்.

ஸ்டாலின் நடத்திவரும் "உடன்பிறப்பே வா' சந்திப்பு அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமும், அரசியல் விமர்சகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்த சந்திப்பில் ஸ்டாலினின் அணுகுமுறை என்ன? என்ன மாதிரி வியூகம் வகுக்கப்படுகிறது? என்பது குறித்து அறிந்து கொள்ள அ.தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் படாதபாடுபடுகின்றனர்.

அரசியல் விமர்சகர்கள் சிலரிடம், உடன்பிறப்பே வா குறித்து விவாதித்தபோது, ‘’"தேர்தல் நெருங்கி விட்டாலே தி.மு.க. முன்னெடுக்கும் பணிகளை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. கலைஞர் இதனை பலமுறை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக, நிர்வாகிகளுடனும் தொண்டர்களுடனும் விவாதிப்பதை முதன்மையாக கொண்டிருப்பார். அதே பாணியைத் தான் ஸ்டாலினும் கையிலெடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட சந்திப்புதான் கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இந்த சந்திப்பில் சொல்லப்பட்ட, விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளின் அடிப்படையில் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தால்தான் அவர் மீது தொண் டர்களுக்கு நம்பிக்கை வரும். அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பதற்காகத்தான் இந்த ஒன் டூ ஒன் நிகழ்வை நடத்துகிறார்.

மிக வலிமையும், தொண்டர்கள் பலமும் கொண்ட தி.மு.க.வின் தலைவர், தொண்டர்களை தனது அருகில் அமரவைத்து குறைகளைக் கேட்பது ஒரு வரலாற்று நிகழ்வுதான்''’என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரம் தொண்டர்களை சந்தித்து உரையாடுவதில் தொண்டர் களைப்போல ஸ்டாலினும் உற்சாகமாகி விடுகிறார் என்கின்றனர். கட்சிப் பிரச்சனைகளைக் கடந்து தொண்டர்களிடம் அவர்களின் தனிப்பட்ட விசயங்களையும் கேட்டு ஆச்சரியப்படுத்துகிறாராம் ஸ்டாலின். கடந்த வாரம், தென் மாவட்ட தொகுதி ஒன்றின் நிர்வாகியிடம், "நீங்கள் இஸ்லாமிய பெண் ஒருவரை லவ் மேரேஜ் பண்ணியிருக்கீங்கதானே... அதுவும் போராடி திருமணம் செய்திருக்கிறீர்கள். வாழ்க்கை எப்படி இருக்கிறது, பிரச்சனைகள் ஏதும் இல்லையே?'' என்று ஸ்டாலின் விசாரிக்க... அந்த நிர்வாகியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். அந்த கண்ணீரோடு, "எந்த பிரச்சனையும் இல்லை தலைவரே! வாழ்க்கை நன்றாகப் போகிறது. நீங்கள் இப்படி என்னிடம் விசாரித்ததே இன்னும் அதிகமாக கட்சிக்காக உழைக்கச் சொல்கிறது'' என்று நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். உடன்பிறப்பே வா நிகழ்வை விறுவிறுப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

__________________

இறுதிச்சுற்று!

அன்புமணிக்கு, ராமதாஸ் அதிர்ச்சி வைத்தியம்!

pmk-ramdoss

பா.ம.க.வில் அன்பு மணி ஆதரவாளர்களின் கட்சிப் பதவியை டாக்டர் ராமதாஸ் நீக்குவது தொடர்கதையாகி வருகிறது. முதல்முறையாக எம்.எல்.ஏ. ஒருவரின் கட்சிப் பதவியை நீக்கி, அன்புமணிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் ராமதாஸ். சேலம் மேட்டூர். தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வாக இருக்கும் சதாசிவம், பா.ம.க.வின் சேலம் மேற்கு மா.செ.வாக இருந்துவருகிறார். இவர், அன்புமணியின் ஆதரவாளர். ராமதாஸ் கூட்டிய எந்த ஒரு கூட்டத்திலும் இவர் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், சதாசிவத்திடமிருந்த கட்சிப் பதவியை திங்கள்கிழமை அன்று (23-06-2025) அதிரடியாக பறித்துள்ளார் ராமதாஸ். சதாசிவத்திடம் பறிக்கப் பட்ட பதவியில் வெடிக்காரனூர் ராஜேந்திரன் உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பறிப்பும் நீக்கமும் பா.ம.க.வில் மீண்டும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

-இளையர்