பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி - கலா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் மீரா ஜாஸ்மின், திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் படிப்பை படிப்பதற்காக திருச்சி, சீனிவாசா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து வசித்துவந்தனர். கடந்த நவம்பர் 31, வெள்ளியன்று காலையில், நேர்முகத்தேர்வுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். ஆனால் இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால், அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். மீரா ஜாஸ்மினின் செல்போன் டவர், சனமங்கலம் காப்புக் காட்டுப் பகுதியில் சிக்னல் காட்டவே, அங்கு சென்ற போலீசார், அங்கே கண்ட காட்சி அதிர்ச்சியில் உறைய வைத்தது. அங்கே மீரா ஜாஸ்மினின் உடல் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததைக் கண்டனர். மீரா ஜாஸ்மின் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகத் தெரியவந்ததால், அவரை கொலை செய்து எரித்தது யாரென்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். எரிந்த நிலையில் கிடந்த மீரா ஜாஸ்மினின் உடலை, உடற்கூராய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே மீரா ஜாஸ்மினின் உடலைப் பார்த்து அவரது தாய் கதறி அழுதது அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மீரா ஜாஸ்மினை கொலை செய்தபின்னர், அடையாளம் தெரியக்கூடாதென்பதற்காக, பைக்கிலுள்ள பெட்ரோலை ஊற்றி அவரை எரித்திருப்பது தெரிய வந்தது. அதேபோல், மீரா ஜாஸ்மினின் எரிக்கப்பட்ட உடலருகே இரண்டு பீர் பாட்டில்கள் கிடந்ததால், இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டது இரண்டு இளைஞர்களாக இருக்கலாமென்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், போலீசாரின் விசாரணையில், பெரம்பலூரில் மீரா ஜாஸ்மினின் பள்ளிப்பருவக் காதல் விவகாரம் தெரியவந்தது. மீரா ஜாஸ்மின், பத்தாவது படித்தபோது அவரது தோழியின் சகோதரன் மீராவைக் காதலித்ததாகவும், மீராவின் பெற்றோர் அவனை கடுமையாகத் திட்டியதால் அவமானப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது. 

Advertisment

இதையடுத்து, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் திருச்சிக்கு வர, மீரா ஜாஸ்மின் தோழியும் அவளோடு அதே கல்லூரியில் படித்திருக்கிறார். அதன்பின் மீரா ஜாஸ்மினின் தோழிக்கு திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்திருக்கிறது. இச்செய்தியறிந்த மீரா, நேர்முகத்தேர்வென்று வீட்டில் பொய்யாகக் கூறிவிட்டு தோழியை மருத்துவமனையில் பார்த்தபோது, தோழியின் தற்கொலை செய்துகொண்ட  சகோதரனின் நண்பர்கள் அங்கிருக்க, அவர்கள் மீரா ஜாஸ்மினை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி காப்புக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, கொலை செய்து எரித்திருப்பதாக தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார், சம்பந்தப்பட்ட இருவரையும் கைதுசெய்து ரகசியமாக விசாரித்துவருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

-மகேஷ்