கடந்த மாதம் 4ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தின் 29வது கலெக்டராக சரவணன் பொறுப்பேற்ற வுடனே மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளுக்கும் அதிரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை, கோரிக்கைகளைக் கேட்டது மட்டு மல்லாமல், பல்வேறு துறைகளுக்கு சென்று விசிட்டடித்து, ஆய்வு செய்து நலத்திட்டப் பணிகளையும் பார்வை யிட்டு, சரியாக செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு டோஸ் விட்டிருக் கிறார்.
ஆத்தூர் தொகுதியிலுள்ள கே.புதுக்கோட்டையில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் மூலம் வீடு கட்டும் பணிகளை கலெக்டர் சரவணன் பார்வையிட்டார். அப்போது தொகுப்பு வீடு பெற்ற கூலித் தொழிலாளியான ராமு, தனது கட்டடப் பணிகள் முடிந்தும்கூட நிவாரணத்தொகை இன்னும் முழுமை யாகக் கிடைக்கவில்லையென்றும், அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும் புகாரளிக்க, கலெக்டர் டென்ஷனாகி விட்டார். உடனே உடனிருந்த இன்ஜினி யர்களான ராமநாதன், மகேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் "பய னாளிகளின் கஷ்ட நஷ்டங்கள் கூட உங்களுக்கு தெரியவில்லை. உடனே பணம் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள், இல்லை யென்றால் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்துவிட்டு சென்றார். அதுபோல் சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாடிப்பட்டி காலனியில் இடிந்த நிலையிலிருந்த ஓட்டு வீட்டை பார்வையிட்டு, அந்த வீட்டில் இருந்த முனியாண்டியிடம், "உங்களுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மூலம் வீடுகள் வழங்கவில்லையா?'' என்று கேட்டார். அவரோ, "பல வருடங்களாக இலவச வீடு கேட்டு ஊராட்சியில் மனு கொடுத்தும் கொடுக்கவில்லை. நான் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் தொடர்ந்து என்னால் அலையவும் முடியவில்லை'' என்று கண்ணீர் மல்க கூறியதை கேட்டு ஆறுதல் சொன்ன கலெக்டர், உடனிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், "கலைஞரின் கனவு இல்லத் திட்டம் மூலம் உடனடியாக வீடு ஒதுக்கிக் கொடுங்கள்'' என்று உத்தரவு பிறப்பித்தார்.
அடுத்து, ஒட்டன்சத்திரம், திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று காலை உணவை ஆய்வு செய்து, மாணவர்களோடு சேர்ந்து உணவருந்தினார். அதேபோல் ஜவ்வாது பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று, அங்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், நர்சுகள் முறையாக சிகிச்சை அளிக்கிறார்களா என்று விசாரித்தார். அதைத்தொடர்ந்து ஒட்டன் சத்திரம் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். அதேபோல் ஆயிரம் கோடி செலவில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி கொண்டு வந்து செயல்படுத்தி வருவதையும் கலெக்டர் ஆய்வு செய்து அந்த பணிகளை இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவிட்டார்.
அதுபோல் எஸ்.பாறைப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முட்டைகள் தரமாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, தரமான பெரிய சைஸ் முட்டைகளை மாணவர்களுக்கு கொடுங்கள் என்று உத்தரவிட்டார். வடமதுரை சத்துணவு மையத்தில் இருப்புகள் குறைவாக இருப்பதைக் கண்ட கலெக்டர், உடனே அந்த மைய பொறுப்பாளர் வீட்டிற்கே சென்று பார்வையிட்டு, அவர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காமராஜர்புரம், கருணாநிதி நகர், செல்லாண்டியம்மன் கோவில் வடக்குத் தெரு, வண்டிப்பாதை, குமரன் திருநகர் உட்பட சில பகுதி களில் புறம்போக்கு இடங்களில் வசித்து வந்த ஐந்தாயிரத் திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கலைஞர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட இலவச பட் டாக்கள், அ.தி.மு.க. ஆட்சியில் ஆன்லைனில் ஏற்றாமல் கிடப்பில் போடப்பட்ட தகவல் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தெரியவந்தது. அதுகுறித்து அவர் கலெக்டரிடம் தெரிவித்தார். அதையடுத்து, கலெக்டர் சரவணன் நேரடி யாகப் பார்வையிட்டு, உடனடியாக பட்டா விவரங்களை ஆன்லைனில் ஏற்றும்படி உத்தரவிட்டார். இப்படியாக, பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறார்.
அவரது செயல்பாடு குறித்து திண்டுக்கல் லைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் விஜயக்குமாரிடம் கேட்டபோது, "இருபத்தைந்து வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் கலெக்டர் ஜீவரத்தினம், பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொடுத்தார். அதுபோல தற்போது வந்துள்ள கலெக்டர் சரவணனும் அதிரடியாக செயல்பட்டுவருகிறார். இரு நாட்களுக்குமுன் தனது பங்களாவிற்கு எதிரேயுள்ள பஸ் ஸ்டாண்டிற்குள் திடீரென வந்தவர், பொதுமக்கள் பயன்படுத்தும் பாத்ரூம் மற்றும் குடிநீர் பகுதிகளை ஆய்வு செய்தார். அவரிடம், பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டும். அதுபோல் மாநகராட்சியில் 12 ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டும் அதற்கான பணியை இன்னும் அதிகாரிகள் தொடங்காமல் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். அதை கலெக்டர் உடனே சரிசெய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.
ஆக... புதிதாக வந்துள்ள கலெக்டர் சரவணன், மக்களுக்கான தேவைகளை உடனுக் குடன் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பாரென்ற நம்பிக்கை மக்களுக்கு பிறந்துள்ளது.
-சக்தி