மே 7-9, நக்கீரன் இதழில், 'ஏழை எளியோருக்கு எட்டாத கலைஞரின் கனவு இல்லம்! அரசு கவனிக்குமா?' என்ற செய்திக்கட்டுரையில், ஏழைகளுக்கான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பது குறித்த விரிவான செய்தி வெளியாகி, பெரிதும் பரபரப் பாகப் பேசப்பட்டது. தற்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்மனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சிக்குப்பம் கிராமத்தில் வாழும் கழைக்கூத் தாடி குடும்பத்தினருக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வீடுகள் தரமில்லாமல் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்துள்ளன.

kh

ஊராட்சி மன்றத் தலைவர் உமாவின் கணவர் நடராஜன், லஞ்சம் வாங்கிக்கொண்டு மோசமான சிமெண்ட் கலவையால் கட்டிக்கொடுத்தது தான் காரணம் என்கிறார்கள். வீடு இடிந்ததில் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத் துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் ஆகி யோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பொறியாளர்கள், லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு, வீடுகளின் தரத்தை கண்காணிக்காமல் விட்டுவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்தனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, "பிரதமர் வீடு கட்டும் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றில், ஏழைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகளை அவர்களே கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கான குறிப்பிட்ட அளவு செலவுத்தொகை, கம்பிகள், சிமெண்ட் ஆகியவற்றை அரசு கொடுக்கும். இதுதான் திட்டம்.

Advertisment

kh

இதில் அதிக பணம் சம்பாதிப்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவி உமாவின் கணவர் நடராஜன், சப் காண்ட்ராக்ட் கொடுத்து கட்டப் பட்ட வீடுகளைத் தரமில்லாமல் கட்டிவிட்டார். எனவே ஊராட்சி மன்றத் தலைவர் உமா நட ராஜனை பதவி நீக்கவேண்டும். ஏழை மக்களுக்கு வீடு கட்டுவதில் கவனக்குறைவாக செயல்பட்ட திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், மேலா ளர், பி.டி.ஓ. ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறார்கள் தமிழ்நாடு ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

பாதிக்கப்பட்ட தொம்புரா எனும் கழைக் கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவர், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 14 குடும்பங்கள் இந்த ஊரில் வசித்து வருகிறோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் எங்கள் இனத்தவர்களுக்கு 12 வீடுகள் கட்ட மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் 30.7.2024-ல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அப்போது எங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் உமாவின் கணவர் நடராஜன், எங்களுக்கு தரமான முறையில் வீடு கட்டித் தருவதாகக் கூறினார்.

Advertisment

அரசு ஒதுக்கீடு செய்யும் மூன்றரை லட்சம் பத்தாது எனக்கூறி, எங்களிடம் மேலும் சில லட்சங்களைப் பெற்றுக்கொண்டார். தேவியகரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரை காண்ட்ராக்டராக வைத்து வீடு கட்டும் பணியை செய்தார். அப்போதே தரமான முறையில் சிமெண்ட் ஜல்லி கலக்கவில்லை. சந்தேகம் வந்து நடராஜனை சந்தித்து முறையிட்டபோது, "போங்கடா, எங்களுக்கு எல்லாம் தெரியும்' எனக்கூறி திட்டியனுப்பினார். இந்நிலையில்தான், கடந்த பத்தாம் தேதி காலையில் எங்கள் வீட்டிற்கு மேலே தண்ணீர் ஊற்றுவதற்காக என் கணவர் பிரபு மேலே ஏறியபோது சுவர் இடிந்து விழுந்ததில், என் கணவர், மகன் பிரசாத், உறவினர் ராஜேஷ் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காய மடைந்தனர்.

kh

தற்போது உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். வீடு கட்டும் இடத்திற்கும், திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் இடையே 500 மீட்டர் தூரம் தான் இருக்கிறது. ஆனால் வீடு கட்டும் போது எந்த அதிகாரியும் வந்து பார்க்கவேயில்லை. நடராஜன் சொன்னதை நம்பி வீட்டையும், பணத்தையும் இழந்துநிற்கிறோம்'' என்றார் வருத்தத்துடன்.

செம்மனந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் உமாவின் கணவர் நடராஜன் ஒரு கோல்மால் பேர்வழி என்பதை நாம் நேரடியாகவே அறிந்திருக்கிறோம். செம்மனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன், சுமதி தம்பதியருக்கு ஒரு குடிசை வீடுதான் இருக்கிறது. வீட்டுக்குள் பாம்பு, தேள் போன்றவை அடிக்கடி வந்துபோவதால் உயிர்ப்பயத்துடன் வாழ்ந்த சூழலில், தங்களுக்கு உதவ வேண்டுமென்று கடந்த ஆண்டு நம் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர். அப்போது அவர்களை சந்தித்தபோது, அரசு வழங்கும் வீடு ஒன்று கிடைத்தால் நிம்மதியாக இருப்போமென்று சொன்னதால், ஊராட்சி மன்றத் தலைவரை சந்திக்க நினைத்தபோது, உமாவின் கணவர் நடராஜன்தான் ஆல் இன் ஆல் எனக்கூறி அவரை சந்திக்குமாறு அறிவுறுத்தினர்.

பின்னர், தொகுதி எம்.எல்.ஏ. மணிக் கண்ணனை சந்தித்து கோவிந்தன் குடும்பத்தின் தேவைகுறித்து பேசியதும், ஊராட்சி மன்றத் தலைவர் உமாவின் கணவர் நடராஜனை வரவழைத்து, ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றி, வீடு கட்டுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். நடராஜனும் வீடு கிடைக்கச்செய்வதாக உறுதியளித்தார். பல மாதங்களாகியும் வீடு ஒதுக்காததால் சில தினங்களுக்கு முன்பாக நடராஜனை தொடர்புகொண்டபோது, பயனாளிகள் அதிகமிருப்பதாகவும், வீடுகள் குறைவாக இருப்பதாகவும் கூறி மறுத்தார். அவரிடம், குடும்பங்களின் வறுமையைக் கணக்கிட்டும், சீனியாரிட்டி படியும் வீடு ஒதுக்கீடு செய்யுங்களென்று கூறினோம். உடனே ஆத்திர மான நடராஜன், "அதைச்சொல்ல நீ யார்? பத்திரிகைக் காரனென்றால் பெரிய புடுங்கியா? என் விருப்பப்படிதான் வீடுகள் ஒதுக்கப்படும். உனக்கு தெரிந்ததை எழுதிக்கொள். உன்னால் என்னை என்ன செய்யமுடியும்? வீடு ஒதுக்கீட்டுக்கு லஞ்சமெல்லாம் வாங்கவில்லை'' என்று மிகக்கடுமையாக ஒருமையில் திட்டினார்.

ஏழைக்குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யும்படி கேட்டதற்கே தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய நடராஜன், பின்னர் பயம் வந்ததும், எம்.எல்.ஏ. மணிக் கண்ணனை சந்தித்து, கோவிந்தன்-சுமதி குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றியதாகத் தெரிவித்தார். நம்மால் ஒரு ஏழைக்கு வீடு கிடைத்ததை நினைத்து க்கொண்டு, நடராஜன் நம்மை இழிவாகப் பேசியதைத் தாங்கிக்கொண்டோம்.

kh

இப்படிப்பட்ட நடராஜன் தான் தற்போது பினாமி பெயரில் காண்ட்ராக்ட் எடுத்துக் கட்டிக்கொடுத்த வீடுகள் இடிந்துவிழுந்து அவரது முகத்திரையைக் கிழித்துள்ளது. தரமற்ற முறையில் வீடுகள் கட்டியதைக் கண்டுகொள்ளாதிருந்த ஒன்றிய பொறியாளர் மாயகிருஷ்ணன், மேற்பார்வையாளர் மனோகர், மேலாளர் உத்தண்டராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் சார்பாக திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் முன்பு தோழர் வெங்க டேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகும் செம்மனந்தல் ஊராட்சிமன்றத்தலைவர் உமாவின் கணவர் நடராஜன், கிராம மக்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லத் திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்து, வரும் சட்டமன்றத் தேர்தலுக்குள் பல லட்சம் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதே வேகத்தில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடமிருந்து லஞ்சம் வசூ லிப்பதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கு மேலும் ஒரு உதாரணம், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில் மேற்படித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனளிகள் வீடுகள் கட்டும் பணியை செய்து வருகின்றனர். அந்த பயனாளிகளிடம் 15,000 முதல் 30 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடு கட்டும் பணியை அதிகாரிகள் நிறுத்தி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரண மாக அதை வெளியில் சொல்லாமலும், உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்காம லும் மௌனமாக உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்பியுள்ளார். அரசின் திட் டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய அதிகாரிகள், கட்சிக்காரர்கள் வசூலிக்கும் கமிஷன் காரணமாக தமிழக அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்பதுதான் உண்மை நிலை.

-எஸ்.பி.எஸ்.