மிழக கூட்டுறவு வங்கிகளில் பல மோசடி களையும், குளறுபடிகளையும் கண்டு, கேள்வி கேட்ட பதிவாளரை பணிமாற்றம் செய்வதற்கான சகல வேலைகளையும் செய்யும் அமைச்சரின் பி.ஏ.வால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 

Advertisment

தமிழ்நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு சங்க வங்கிகளில் காலியாக உள்ள 2,890 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டு அதற்கான தேர்வு, நேர்முகத்தேர்வு நடந்துமுடிந்துள்ளது. இதில் பல பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். 500-க்கும் அதிகமானவர்கள் 180-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இது எப்படி சாத்தியமாகும் எனக் கேள்வியை எழுப்பியுள்ளார் பதிவாளர் நந்தகுமார். 

Advertisment

கேள்வித்தாள் விற்பனை செய்துள்ளதாலேதான் இப்படி பலபேர் கூடுதல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்ற பெரும் பாலானவர்கள், ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் பணிபுரிபவர்களின் மனைவி, மகன், மகள் போன்ற நெருங்கிய உறவினர்களாக இருப்பது எப்படி? 

உதாரணத் துக்கு, செங்கல் பட்டு மண்டல இணைப் பதிவாளர் வி.நந்தகுமாரின் மனைவி, திரு வண்ணாமலை கூட் டுறவு சார்பதிவாளர் தீபன் சக்கரவர்த்தி மனைவி, திருவண்ணா மலை கூட்டுறவு சார்பதி வாளர் மீனாட்சிசுந்தரம் மகள், திருவள்ளூர் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீயின் நெருங்கிய நண்பரான நாராயணமூர்த்தியின் குடும்பத்திலிருந்து மட்டும் நான்கு பேர் தேர்வாகியுள்ளனர். பதவியிலிருப்பவர்களின் அண்ணன் மகள், மகன் பலர் தேர்வாகியுள்ளனர் என பல புகார்க் கடிதங்கள் பதிவாளருக்கு வரவே, அந்தக் கேள்விகளையும் எழுப்பியுள்ளார். வினாத்தாள் தயாரித்த 5 பேர் கொண்ட குழுவி லுள்ள இணைப்பதிவாளர் ஒருவரோடு கைகோர்த்துக்கொண்டு அமைச்சரின் பி.ஏ. இந்த ஒட்டுமொத்த வேலையை யும் செய்துள்ளார் என அவருக்கு தகவல் வரவே, இந்தத் தேர்விற்கான முடிவினை நிறுத்தி வைக்கவும், அமைச்சரின் பி.ஏ.வான சரவணனை விசாரிக்கவும் உத்தரவிட்டார். 

Advertisment

இதனால் தனக்கு சிக்கலுண் டாகும் என நினைத்த அமைச்சரின் பி.ஏ., அமைச்சரைப் பற்றி பதிவாளர் தாறுமாறாகப் பேசிய தாக போட்டுக் கொடுத்ததுடன், பதிவாளர் கையொப்பமில்லாமலே தேர்வுக்கான முடிவை வெளியிடவும் காய் நகர்த்தியுள்ளார்.  

இதனால் மனம்நொந்த பதிவாளர், "இதுபோல பல விசயங் களை என்னால் சொல்லமுடியும்.    இந்த கூட்டுறவு மாநில, மாவட்ட தேர்வுகளுக்கு பல கோடியில் வசூல்செய்துள்ளார் அமைச்சரின்    பி.ஏ. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனர் சிவமலர் 04.07.24 அன்று ஒரேநாளில் 14.14 கோடி மதிப்புள்ள தளவாடப் பொருட்கள், வாகனம் வாங்குவதில் ஊழல், தூய்மைப் பணியாளர்களும் முதலாளிகளாக அம்பேத்கர் திட்டத்தின்கீழ் வாகனக் கடன் திட்டத்திலும் பல கோடி  ஊழல், ரேசன் பணியாளர்கள் நியமனத்தில் ஊழல் என அடுக்கிக்கொண்டே போகலாம்'' என புலம்பித்தள்ளியுள்ளாராம். 

கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பனின் பி.ஏ.வான சரவணன் மற்றும் காஞ்சிபுரம் வங்கி மேலாளர் இருவரும் இந்த ஊழலில் முக்கிய புள்ளிகள். சில நாட்களுக்கு முன்பாக கன்பெர்ட் ஐ.ஏ.எஸ்.ஸாக தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களில் சிவமலர் ஒருவராக இருந்தார். ஆனால் இவர் மீதுள்ள குற்றச் சாட்டுகளால் அவரை நிராகரித்துவிட்டனர். இந்த சூழ்நிலையில் மீண்டும் எப்படியாவது அந்த கன்பெர்ட் ஐ.ஏ.எஸ். பதவியைப் பெற, மத்திய கூட்டுறவு வங்கியில் சிறந்த வங்கியை தேர்வுசெய்து விருதுகொடுக்கும் நிலையில் அதைப் பெற்று தன்மீதான மதிப்பீட்டை மாற்றலாம் என திட்டம்போட்டார் சிவமலர். 

அமைச்சரின் பி.ஏ.வைப் பிடித்து, சிறப்பாகச் செயல்பட்ட கூட்டுறவு வங்கிகளில் முதல் மூன்றிடங்களில் இருந்த விழுப்புரம், சென்னை, ராமநாதபுரம் வங்கிகளை மறைத்து லாபமே ஈட்டாத, நஷ்டத்திலுள்ள, தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கிய வாகனக் கடனில் மோசடி செய்த காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியை சிறந்த கூட்டுறவு வங்கி எனத் தேர்வு செய்ய வைத்து விருது பெற்றுள்ளார். தவிரவும், மேலேசொன்ன பதிவாளர் நந்தகுமார். இந்த ஊழல் விவகாரங்களை அறிந்து கொண்டு தொடர்ந்து அவர்களுக்கு மத்தியில் பணி செய்வதில் ஆர்வமில்லை. என்னை இடம் மாற்றினால் நல்லது என தனக்கு வேண்டியவர்களிடம் புலம்ப ஆரம்பித்து விட்டாராம். 

ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை அமைச்சரின் பி.ஏ. கட்டுக்குள் கொண்டுவர முடிகிறதென்றால் இத்துறையில் என்னதான் நடக்கிறது என கேள்வியெழுகிறது. 

இந்தத் தேர்வை நியாயமான முறையில் எழுதியவர்களோ, "முதலில் இந்த தேர்வையே ரத்து செய்யவேண்டும். இதில் தேர்ச்சிபெற்றவர்கள் பெரும்பாலும் அதே துறையிலுள்ள உறவினர்களே. இதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் பல கோடி விளையாடியுள்ளது. 

இந்த தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், அதன்பிறகு கூட்டுறவு வங்கி மேலாண்மை நிலையத்தில் 6 மற்றும் 9 மாதம் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே அவர் தேர்வு எழுதத் தகுதியானவர். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிபவர்கள், தங்கள் உறவினர்களை பணிக்குக் கொண்டுவர அரசு ஜி.ஓ.வையே மாற்றி பயிற்சி பெறும்போதே தேர்வெழுதத் தகுதியானவர்கள் என அறிவிப்பை வெளியிட்டு அவர்களை உள்ளே கொண்டுவந்துள்ளனர். இதனை தனிக்குழு அமைத்து விசாரணை செய்தால் முழு பித்தலாட்டமும் வெளிச்சத்திற்கு வரும்''’என்றனர்.   

அரசு, இதில் உடனடியாகத் தலையிட்டு முறையான விசாரணை நடத்துமா?

-சே