கடந்த சில மாதங்களாக, தமிழகத்தின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகளுக்குள் பனிப்போர் நடைபெற்று வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதனால் நிர்வாகம் ஸ்தம்பித்து வருகிறது என்றும், அமைச்சர்கள் இந்த போக்கை விரும்பவில்லை என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமான, அவர்களின் ஊழல்களுக்குத் துணைபோன அதிகாரிகள் களையெடுக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தன்னை சுதந்திரமாக பணியாற்றவிட மறுக்கிறார்கள் என்று வெளிப்படையாக அ.தி.மு.க. அரசை குற்றம்சாட்டிய உதயசந்திரன், அந்த ஆட்சியில் டம்மியான போஸ்டில் பணியாற்றினார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உதயசந்திரன், இறையன்பு உள்ளிட்டோருக்கு முக்கிய பதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இறையன்பு தலைமைச் செயலாளராக இருந்தபோது, உதயசந்திரன் முதல்வரின் செயலாளராகவும், முருகானந்தம் நிதித்துறை செயலாளராகவும் இருந்துவந்தனர். அ.தி.மு.க. கஜானாவைக் காலிசெய்துவிட்டு சென்றபோதும் முருகானந்தம் திறம்பட நிதி நிர்வாகத்தை மேற்கொண்டார். ஆனால் முதல்வரின் செயலர் மற்றும் தலைமைச்செயலாளர் ஆகியோர் சில முடிவுகளை எடுப்பதில் திறம்படச் செயல்படவில்லை என பலரும் குறிப்பிட்டனர்.
மேற்சொன்னவர்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என்பதைத் தாண்டி திறம்பட செயலாற்றுபவர்களா என்றால் கேள்விக்குறியே என்கிறார்கள். குறிப்பாக, இரண்டா மாண்டு சென்னை வெள்ளத்தினைக் கையாண்டவிதம், செயல்பாடுகளில் மந்த நிலையால் கே.என்.நேரு பல இடங்களில் அசிங்கப்பட்டது உண்டு. முருகானந்தத்தை தவிர மற்ற இருவரும் அவர்கள் பணியாற்றிய காலங் களில் அதிமுக்கிய அல்லது முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவமில்லாததே காரணம். நெருக்கடிமிகுந்த காலங்களில் குறிப்பாக வெள்ளம், கொரோனா காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய ராதாகிருஷ்ணன், அமுதா, ககன்தீப் சிங் உள்ளிட்ட ஒருசிலரே முன்னணியில் உள்ளனர்.
உமாநாத், உதயசந்திரன் போன்றோர் அவசரகாலப் பணிகளைச் செய்யாமல் நிதானமாக பணியாற்றும் தகுதிபெற்றவர்கள். இந்த அதி காரிகளிடம் தமிழகத்தின் முக்கிய பொறுப்பு களைக் கொடுத்தால் எப்படி முடிவுகளை விரைவாக எடுப்பார்கள் என்று ஆதங்கப்படு கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர்.
இதற்கிடையில் உதயசந்திரன், முதல்வ ருக்கு நெருக்கமான ஒருவருடன் கூட்டணி அமைத்துச் செயல்படுவதும், அவர் நிழல் முதல்வராகச் செயல்படுவதும் தொடர்ந்தது. இதற்கிடையில் இறையன்பு ஓய்விற்குப் பிறகு முருகானந்தம் தலைமைச் செயலாளராகவும் உதயசந்திரன் நிதித்துறை செயலாளராகவும் பொறுப்பேற்றபின் பணிகள் விரைவாக நடைபெறும் என்று நம்பிக்கையோடு இருந்த அமைச்சர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
காரணம், எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக் கீடு செய்வது கிடையாது, எதைக் கேட்டாலும் நிதிப் பற்றாக்குறை என்று சொல்வது என சாதகமான பதில் வந்ததில்லை. அதேபோல் எந்த அமைச்சர்களையும் மதிப்பது கிடையாது. தான்தான் நிழல் முதல்வர் என்ற எண்ணத்தில் செயல்படுவதன் பிரதிபலிப்புதான் சட்டசபையி லேயே பி.டி.ஆர். பேசியது. தன்னால் எந்த திட்டத்தையும் கொண்டுவரமுடியாது, அதற்கான அதிகாரம் தனக்கில்லை என்று நேரடியாகத் தெரிவித்தார்.
சில மூத்த அமைச்சர்களோ, டெல்லியில் அதிகாரிகள் மத்தியில் நல்ல செல்வாக்குடன் இருக்கும் தலைமைச்செயலாளர் முருகானந்தம் முயற்சிசெய்து நிதிப்பிரச்சினையை சீர்செய்ய லாமே என்று ஆதங்கப்படுகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் டெல்லி சென்ற மூத்த அமைச்சர் தனது துறைசார்ந்த திட்டங்களுக்கு மத்திய அரசிலிருந்து நிதி ஒதுக்கீடு நடக்கவில்லை என்று முறையிட்டபோது, "அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் உங்களிடமிருப்பது திறமையான அதிகாரி ஆச்சே, அவரை இதுகுறித்து விளக்கமாக எழுதச்சொல்லுங்கள். விரைவில் நிதி ஒதுக்கீடு நடக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்திலோ, நாம் எந்தக் காலத்திலும் மத்திய அரசிடம் கையேந்தக் கூடாது. அவர்கள் இதனை தங்களுக்கு சாதக மாக மாற்றிக்கொள்வார்கள் என்று நிதித்துறை சார்பில் முதல்வருக்கு தெரிவிக்கிறார்கள். இதன் விளைவு நிதிப்பற்றாக்குறையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பும்தான்.
எந்த அரசியல் சார்புமில்லாமல் மத்தியில் பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டு அதிகாரிகளின் நட்பு வட்டாரம் மூலமே நிதி யைப் பெற முருகானந்தத்தால் முடியும் என்று தலைமைச் செயலக அதிகாரிகள் பலரும் கருது கின்றனர். ஆனால் இங்கு அதிகாரிகளுக்குள் நடக்கும் பனிப்போர் காரணமாக எந்தத் துரும்பும் நகராமல் உள்ளது. இது இப்படி யிருக்க, தற்போது உதயசந்திரன் உடல்நிலை சரியில்லாத நிலையில், மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பட்ட உதயசந்திரன், முதல்வருக்கு வேண்டிய முக்கியபுள்ளி, காவல்துறை துணைத்தலைவர் டேவிட்சன் ஆசிர்வாதம் ஆகியோரின் செயல்பாடுகள் பலவீனமாக உள் ளன. சிவகங்கையில் நடந்த லாக்கப் மரணத்தில் தற்போது தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனையில் முதல்வர் எடுத்த நடவடிக்கை, குறிப்பாக அஜித் குடும்பத்தினரிடம் பேசியது, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இதே இந்த மும்மூர்த்திகள் சம்பந்தப் பட்டிருந்தால் இந்நேரம் வழக்கம்போல் முதல்வர் சொதப்பிக்கொண்டுதான் இருப்பார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள். எது எப்படியோ, அதி காரிகள் தங்களது ஈகோவை மறந்து செயல்பட்டால் இந்த அரசிற்கு இன்னும் நற்பெயர் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் வழிவிடு வார்களா?
-ஸ்ரீவர்மா