கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கிவைத்து, "மாவட்டத்தில் 10 சீட்டு ஜெயிப்போம். அதேபோல மேற்கு மண்டலத்தின் இடங்களையும் ரிசல்ட் வரும்போது பொறுத்திருந்து பாருங்கள். 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பயணம் என்பது, தமிழ்நாட்டில் தளபதி என்பதை உறுதிசெய்து, வாக்காளர் பெருமக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். "ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப் பில் மக்கள் எவ்வளவு தன்னெழுச்சியோடு இருக் கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு நிலை. முதல்வருக்குதான் முழு ஆதரவு'' என நம்பிக்கையோடு கூறினார் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், மண்டலப் பொறுப் பாளருமான செந்தில்பாலாஜி. 

அது சாத்தியமாகுமா? யாருக்கு சீட்? என்பதனைப் பார்ப்போம்.

கோவை மாவட்டத்தினைப் பொறுத்தவரை மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் (தெற்கு), சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதில் வால்பாறை தொகுதி மட்டும் தனித் தொகுதி ஆகும். மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளும் அ.தி.மு.க. கூட்டணி வசமிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வருகின்ற 2026, சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிடவேண்டும் என்று தி.மு.க. தீவிர பணியாற்றிவருகிறது. 

Advertisment

மாபெரும் வெற்றியை அறுவடை செய்ய செந்தில்பாலாஜிக்கு மேற்கு மண்டலப் பொறுப்பாளர் என்கிற பவர்ஃபுல்லான பதவியைக் கொடுத்து களத்தில் இறக்கியுள்ளது தி.மு.க. தலைமை. செந்தில்பாலாஜியும் தலைமையின் கணக்கினை உறுதிசெய்யும்விதமாக கோவையிலுள்ள 10 தொகுதிகளிலும் களப்பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு பகுதிக்கும் இரண்டு பொறுப்பாளர், பூத் கமிட்டி தேர்வு என பம்பரமாகச் சுழன்றுவருகின்றார். எதிரணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உருவாகியிருப்பது மற்ற மாவட்டங்களில், சாதாரணமாக இருந்தாலும் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் தி.மு.க.வைவிட சற்று வலுவாகத்தான் இருக்கிறது என்பதனை ஒப்புக்கொள்ளவேண்டும்.

kovai1

தொகுதிவாரியான ஆலோசனைக் கூட்டங் களில் பேசிவரும் மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜியோ, "சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் நிறைய வித்தியாசம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை கடந்த காலங் களில் கோவை நமக்கு சாதகமாக இருந்த தில்லை. இந்த முறை இங்கு எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும். கடந்தகால தோல்விகளுக்கு நம்மிட முள்ள உட்கட்சி பூசல் தான் முக்கிய காரணம். இந்த முறை உங்களின் தனிப்பட்ட ஈகோவுக்கு இங்கு இடமில்லை. மக்களை சந்தித்து பணியாற்றத் தொடங்குங்கள். உங்களுக்கு யாரைப் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அதையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு புகார் வராமல் பணியாற்றவேண்டும். 

Advertisment

புகார் வந்தால் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள். அது மாவட்டச் செயலாளராக இருந்தாலும்தான். நான் சரியாக வேலைசெய்யவில்லை என்றாலும் கட்சி வேடிக்கை பார்க்காது. உங்கள் பூத்துக்கு நீங்கள் தான் பொறுப்பு. அங்கு கட்சிக்கு அதிகமாக வாக்கு வாங்கிக் கொடுக்கமுடியவில்லை என்றால் இப்போதே எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். தொண்டா முத்தூரில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துவருகிறோம். அங்கு யார் யார் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்ட னர் என்ற பட்டியல் என்னிடம் உள்ளது. 

பத்து தொகுதி களில் பொள்ளாச்சி யில்தான் கோஷ்டிப் பூசல் அதிகம். சூலூர் தொகுதியில் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது" என்று 10 தொகுதிகளிலும் உள்ள பிரச்ச னைகளைச் சொல்லி நிர்வாகி களை கடுமையாக எச்சரித் துள்ளார். ஒருபக்கம் கட்சிக் காரர்களை எச்சரித்து வேலை வாங்கினாலும், மறுபக்கம், "கடந்த முறை வால்பாறையையும், கோவை தெற்கையும் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்தோம். இந்த முறை மாவட்டத்திலுள்ள தொகுதிகளை யாருக்கும், எந்த கூட்டணிக்கட்சிக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தி.மு.க.வே போட்டியிடும். ஆதலால் கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பு உண்டு'' எனவும் கூறி தி.மு.க. தொண்டர்களை குஷிப்படுத்தி யுள்ளார்.

kovai2

இது இப்படியிருக்க, கோவையிலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் தங்களுக்குத் தான் சீட் வேண்டுமென பலரும் போட்டி போட்டு வருகின்றனர். இதில், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியினைப் பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்டு தோல்வியுற்ற டி.ஆர்.எஸ். சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. அருண் குமார் மற்றும் ஆனைகட்டி சுரேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு இருக்கலாம் எனவும், சூலூர் தொகுதியைப் பொறுத்தவரை தளபதி முருகேசன், சன் ராஜேந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பணப்பட்டி தினகரன் ஆகியோ ருக்கும், கவுண்டம்பாளையம் தொகுதியைப் பொறுத்தவரை கட்சியின் மா.துணை செய லாளரான அசோக்பாபு ஆறுக்குட்டி, தி.மு.க. மாணவ ரணியின் செயலாளரான ராஜீவ்காந்தி ஆகியோருக்கும், கோவை வடக்கினைப் பொறுத்தவரை மாவட்ட செயலாளர் தொண்டா முத்தூர் ரவி, மீனா ஜெயகுமார் மற்றும் மீனா லோகு ஆகியோருக்கும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்து கோலோச்சி வரும் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியினை பொறுத்தவரை தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச்செயலாளரான திவ்யா சத்யராஜ், அரசு வழக்கறிஞரான கிருஷ்ண மூர்த்தி ஆகியோருக்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகின்றது. 

கோவை தெற்கினைப் பொறுத்தவரை டாக்டர் மகேந்திரன், மு.மா.ச. முருகன் மற்றும் பொங்க லூர் பழனிச்சாமி குடும்பத்தார்களில் ஒருவர் வேட்பாளராக வரலாம் என்கின்றனர். சிங்காநல்லூர் தொகுதியினைப் பொறுத்த வரை மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழகச் செயலாளர் எஸ்.எம்.சாமி அல்லது மீனா ஜெயக்குமாருக்கு வாய்ப்பிருக்கலாம். கிணத்துக்கடவு சட்ட மன்றத் தொகுதியினை தோல்வி யடைந்துவரும் குறிச்சி பிரபாகர னுக்கு கொடுக்க கட்சியினர் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு இல்லை என்கின்றனர். தொகுதியை கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், தொகுதியில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிகளவில் இருப்பதால் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞரணி துணை அமைப்பாளரான மதுக்கரை சல்மான் நாசர் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர். பிரகாஷ் ஆகியோருக்கு கொடுக்க வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றார்கள். 

பொள்ளாச்சி தொகுதியினைப் பொறுத்தவரை ந.செ.வாக இருக்கின்ற நவநீதகிருஷ்ணன், சபரி கார்த்திகேயன் மற்றும் தென்றல் செல்வராஜ் ஆகியோருக்கும் வால்பாறை தனித்தொகுதியில் ந.செ.குட்டி என்ற சுதாகர் மற்றும் திப்பம்பட்டி வே.ஆறுச் சாமிக்கும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகின்றது. சட்டமன்றத் தொகுதிகளில், வேட்பாளர்களில் சிலர் குறிப்பாக மீனா ஜெயக்குமார், ராஜீவ்காந்தி, டாக்டர் மகேந்திரன், சபரி கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்ட தொகுதிகள்தான் என்றில்லை, இரு தொகுதி களிலும் பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்க ஒன்று.

மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் கைப்பற்றுவது மேற்கு மண்டலப் பொறுப் பாளரின் கடமை என்றாலும், அவரைப் பொறுத்தவரை கோவை தெற்கையும், தொண்டாமுத்தூர் தொகுதியையும் ஸ்டார் தொகுதியாகவே கருதுகின்றார். பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் பலமாக கையூன்றியிருப்பது இந்த இரு தொகுதிகளிலும் என்பதால் பொள்ளாச்சியைச் சேர்ந்த தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி டாக்டர் மகேந்திரனை கோவை தெற்கிற்கும், நடிகர் சத்யராஜ் மகளும், தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜை தொண்டாமுத்தூர் தொகுதியிலும் களமிறக்க விருப்பப்படுகின்றார். இதனால் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

ஆளும் தி.மு.க. தங்களுடைய மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக நம்புவது தாங்கள் மக்களுக்கு செய்த சாதனைகளையே. சாதனை கைகொடுக்குமா?