முன்பே சொன்னது உங்கள் நக்கீரன். சென்னையின் மிகமுக்கியமான கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் கூடுவதால், கொரோனா தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காற்றுப் போகும் அளவுக்குக்கூட இடைவெளி இல்லை என்று ஏற்கனவே ஏப்ரல் 18 - 21 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். மேலும், இதைக் கவனிக்க வேண்டிய அதிகாரிகளோ, காவல்துறையினரோ மார்க்கெட் வாசலைத் தாண்டுவதில்லை. இதனால், கூடிய சீக்கிரமே கொரோனா பரவலுக்கான ஹாட்ஸ் பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் மாறப்போகிறது என்று, அங்கு கடை நடத்தி வருபவர்களின் குமுறலை அதில் பதிவு செய்திருந்தோம். அரசு காட்டிய அலட்சியத்தால், அந்தச் செய்தி உண்மையாகி இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு, சென்னை வந்திருந்த மத்தியக் குழுவினர், தமிழகத்திலேயே அதிகமாகத் தொற்று ஏற்பட்டிருக்கும் சென்னையில், அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அவர்கள் மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு மார்க்கெட்டிலும் ஆய்வு முடித்துவிட்டு, முதல்வர் எடப்பாடியைச் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவிட்டுச் சென்றார்கள்.
அன்றைய தினமே, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதற்கு மறுநாள், பூ மார்க்கெட்டில் பூவாங்கி சில்லரையாக விற்கும் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டது. அவரும், பாடி குப்பம் பகுதியில் பூ விற்றபோது, அவரால் தொற்று ஏற்பட்ட 30 பேரும் இப்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்பிறகு, பூ மார்க்கெட்டும், அதற்கு அருகிலிருக்கும் பழ மார்க்கெட்டும் மாதவரம் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.
இதையடுத்து, கார்ப்பரேஷன் கமிஷனர், சி.எம்.டி.ஏ. கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள் ளிட்ட அதிகாரிகள் குழு, 27ந் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொரோனா தொற்று இந்தப் பகுதியில் வேகமாக இருப்பதால், மார்க்கெட்டை தற்காலிகமாக கேளம்பாக்கம் பகுதிக்கு ஷிஃப்ட் செய்யவேண்டும்’’என்று அதிகாரிகள் தரப்பு வலியுறுத்தியது. இதை ஏற்காத மார்க்கெட் தரப்பினரோ, ’""கேளம்பாக்க மெல்லாம் ரொம்ப தூரம். வேண்டு மென்றால், ஆம்னி பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்றிக் கொள்கிறோம். அனுமதி தாருங்கள்''’என்று கேட்டுள் ளனர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ""நிலைமை மோசமாகிட்டு இருக்குன்னு சொல்றோம். புரியாம பேசிட்டு இருக்கீங்க''’என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், கூட்டம் மறுநாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் 28ந் தேதி மீண்டும் நடந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் சி.எம்.டி.ஏ. கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், ""29ந் தேதியொடு அரசு அறிவித்த நான்கு நாள் முழு ஊரடங்கு முடியப்போகிறது. இப்போது வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அடுத்த மூன்று நாட்களுக்கு, சில்லரை வியாபாரிகள் இங்கு விற்றுக்கொள்ளலாம். மே 1ந்தேதிக்குப் பிறகு, மொத்த வியாபாரம் மட்டுமே நடக்கவேண்டும். சில்லரை வியாபாரிகள் வெளியே கடை அமைத்துக் கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டு, பேச்சுவார்த்தையை முடித்து வைத்தனர்.
அதிகாரிகளின் இந்த முடிவால் அதிருப்தி அடைந் திருக்கும் சில்லரை வியாபாரிகள், ""வெளியே பஸ்- ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடைபோட்டுக் கொள்ளுங்கள் என்று லேசாக சொல்லிவிட்டார்கள். ஆனால், எங்களது குடோன் மார்க்கெட்டிற்கு உள்ளே தான் இருக்கிறது. அங்கிருந்து வண்டி, கூலியாட்கள் வைத்து காய்கறிகளைக் கொண்டுவந்தால், கண்டிப்பாக விலையை ஏற்றிவைத்து விற்கவேண்டி இருக்கும். இதனால் பொதுமக்களுக்கும் சிரமம். மேலும், மார்க் கெட்டில் எங்களது கடையில் வியாபாரம் செய்தால், கடையில் பொருட்களை வைத்து பூட்டிவிட்டு கிளம்பி விடலாம். இப்படி தெருவில் விற்றால், அந்தப் பொருட் களை எப்படி பாதுகாப்பது என்ற அச்சமும், கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.
இதுபோக, மொத்த வியாபாரிகளிடம் சில்லரை வியாபாரிகளாகிய நாங்கள் பொருட்கள் வாங்கினால் தான், அவர்களுக்கும் வியாபாரம் நடக்கும். எங்களை வெளியேறச் சொல்லி, பொருள் வாங்குவதில் சிரமம் ஏற்படுத்தினால், மொத்த வியாபாரிகளுக்கும் நஷ்டம் தானே. காய்கறிகள் ஒன்றும் ஆண்டுக்கணக்கில் ஸ்டாக் வைத்து விற்கக்கூடிய பொருள் இல்லையே'' என்று வெறுப்புடன் பேசியவர்கள், ""அதிகாரிகள் சொல்வது போல மே 1ந் தேதியில் இருந்து நாங்கள் மார்க்கெட் டுக்குள் கடை போடமாட்டோம்'' என்றார்கள்.. முழு ஊரடங்கு சமயத்தில் மக்கள் காய்கறி வாங்க ஆர்வம் காட்டததால், புதிய காய் கறிகளையே மொத்த வியாபாரிகள் கீழே சிந்தினார்கள். அதைக் கால்நடைகள் மேய்வதைப் பார்க்கும்போது, மே 1ந்தேதிக்குப் பிறகான நிலை கண்கூடாகத் தெரிந்தது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடமாடும் சோதனை வாகனம் மற்றும் மருத்துவக் குழுவினரை நியமித்து, அங்கிருப்பவர்களுக்கு கொரோனாத் தொற்று சோதனை எடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட் டுள்ளன. வியாழன் வரை அங்கு 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எல்லாவற்றிலும் அரசு தாமத மாகவே செயல்பட்டால் எப்படி?
- அசோக்குமார்