பல்வேறு ஊழல்களால் சீரழிந்துவரும் சென்னை -அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக மற்றொரு ஊழலுக்குப் பிள்ளையார்சுழி போடப்பட்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு இணையான பதிவாளர் பதவியில் இருந்த கணேசன்மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டால் அவரை மாற்றி விட்டு, பொறுப்பு பதிவாளராக குமாரை துணைவேந்தர் சூரப்பா நியமித்திருந்த நிலையில், முழுநேர பதிவாளரை நியமிக்க தற்போது உத்தரவிட்டிருக்கிறது ராஜ்பவன். இதில் பேரங்களுக்குப் பஞ்சமில்லை என்பதுதான் லேட் டஸ்ட் நிலவரம்.
இது பற்றி நம்மிடம் பேசும் துறைஅதிகாரிகள், ""அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 9 பல்கலைக்கழகங்களில் பதிவாளர் பதவிகள் காலியாக இருக்கின்றன. இப்பதவிகளை நிரப்புவதில்தான் ஏகத்துக்கும் ஊழல்கள். அதிக அதிகாரம் கொண்ட பதிவாளர் தேர்வில் அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற் கான பத்திரிகை விளம்பரம் கூட வெளியிடப்படுவ தில்லை. ட்ரான்ஸ்ஃபர் ஆஃப் சர்வீஸ் என்கிற இட மாறுதல் அடிப்படையில் பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவரையே காலம்காலமாக நியமித்து வருகின்றனர். அதே பாணியை இப்போதும் நடைமுறைப்படுத்த துடிக்கிறார் சூரப்பா.
அதிகாரம் மிக்க அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் கவனிக்கும் பதிவாளர் நியமனத்திற்கு பொது விளம்பரம் தரப்பட்டால்தான் தமிழகத்திலுள்ள தகுதியான பேராசிரியர்கள் பலரும் போட்டி போட வாய்ப்பு உருவாகும். அந்த போட்டியில், வெளியிலிருந்து ஒரு பேராசிரியர் பதிவாளராக தேர்வாகும்போது பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடு களை தடுக்கலாம் அல்லது துணை போகாமல் இருக்க முடியும்.
ஊழல்வாதிகள் தண்டிக்கப் படாமல் இருக்கவும், தடையின்றி ஊழல்கள் நடப்பதற்காகவும்தான் பதிவாளர் பதவியை பொது விளம்பரம் செய்யாமல் தங்களது பேராசிரியர்களில் ஒருவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது பல்கலைக்கழகம். தற்போது பதிவாளரை தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியிருப்பதால் அதற்காக முட்டி மோதும் பேராசிரியர்கள், காக்டெய்ல் பார்ட்டிகளை நடத்துகின்றனர். பா.ஜ.க. லாபியும் ரகசியமாக நடக்கிறது''‘என ஆவேசப்படு கிறார்கள்.
பதிவாளர் பதவியை கைப்பற்றும் போட்டியில் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பேராசிரியர் அனந்தக்குமார், கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலு, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையின் தலைவர் முத்தன் ஆகியோர் வேகம் காட்டிவருகின்றனர்.
இதுகுறித்து கருத்தறிய மேற்கண்ட மூவரையும் நாம் தொடர்புகொண்டபோது... அனந்தக்குமாரை தவிர மற்ற இருவரும் நமது லைனை அட்டெண்ட் பண்ணவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் தங்களது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டனர்.
நம்மிடம் பேசிய அனந்தக் குமார், "பதிவாளர் பதவிக்கான தகுதி எனக்கு இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் 21 வருட சர்வீசை முடித்திருக்கிறேன். ஆனால், பதிவாளர் பதவி எனக்குக் கிடைக்குமா? என தெரியாது' என்கிறார்.
இதற்கிடையே, ‘’விடைத்தாள் மறு கூட்டல் ஊழல் குற்றச்சாட்டில் பதிவாளர் பதவியை இழந்த கணேசனை, மருத்துவ மைய இயக்குநராக அண்மையில் நியமித் திருக்கிறார் சூரப்பா. இந்த நியமனமும் சர்ச்சையாகி வருவதால் சூரப்பாவின் நேர்மையை சந்தேகிக்கிறார்கள் பேராசிரியர்கள். ""பொறுப்பு பதிவாளர் குமார், துணை பதிவாளர் பார்த்தசாரதி, முன்னாள் பதிவாளரும் மருத்துவ மைய இயக்குநருமான கணேசன், தேர்வுக் கட்டுப்பாட்டு கூடுதல் அதிகாரி சீனிவாசலு, எஸ்டேட் ஆபீசர் ஸ்டாலின் ஆகிய ஐவர் அணிதான் பல்கலைக்கழக நிர்வாகத்தை ஆட்டிப்படைக்கிறது. இவர்களது வார்த்தையை மீறி எதையும் செய்வதில்லை சூரப்பா'' ‘என்கிறார்கள் பல்கலைக்கழகப் பணியாளர்கள்.
நம்மிடம் பேசிய பேராசிரியர்கள் சங்கத்தினர், துறையின் தலைவராக நியமிக்கப்படும் பேராசிரியர்கள் ரெகுலர் நியமனத்தில் 3 ஆண்டுகளும், எக்ஸ்டென்ஷனில் 3 ஆண்டுகளும் பதவியில் இருக்கலாம்.
அதன்பிறகு சுழற்சி அடிப்படையில் மாற்றப்பட வேண்டும். ஆனால், எலெக்ட்ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல துறைகளில் 6 வருடத்தைக் கடந்தும் துறை தலைவராக பலரையும் வைத்திருக்கிறார்கள். இதனால் முறைப்படி பொறுப்புக்கு வரவேண்டிய தலித் சமூக பேராசிரியர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, விதிகளுக்குப் புறம்பாக, இணைப் பேராசிரியர்கள் பலரும் பல ஆண்டுகளாக துறைத்தலைவராகவும், இன்சார்ஜாகவும் இருக்கின்றனர். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய துறைகளின் பதவிகள் குறிப்பிட்ட பேராசிரியர்களிடமே கொடுத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.
இது தவிர, வெளிமாநிலத்தவரான சூரப்பா, துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பிறகு, ஆந்திராவை சேர்ந்த சீனிவாசலு, கேரளாவைச் சேர்ந்த கே.பி.ஜெயா, சிபு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுவாஸ்வதி முகர்ஜி, கர்நாடகத்தைச் சேர்ந்த முத்தன் உள்பட வெளி மாநிலத்துக்காரர்களுக்கே அதிகாரமிக்க பதவிகள் வாரி வழங்கப்படுகின்றன. தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் உயரதிகாரிகளுக்கும் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை''‘ என குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் அன்பழகன், துணைவேந்தர் சூரப்பா ஆகியோரின் கருத்தறிய அவர்களது அலுவலகத்தை தொடர்புகொண்ட போதெல்லாம் லைன் எங்கேஜ்டாகவே இருந்தது. பல்கலைக்கழக நியமனங்களில் ஆட்சியாளர்கள் மீது ஊழல் புகார் சொன்னார் ஆளுநர். அவரால் நியமிக்கப்பட்ட வர்கள் மீதும் அதே ஊழல் புகார்கள் தொடர்கின்றன.
-இரா.இளையசெல்வன்