அ.தி.மு.க. -பா.ஜ.க. உறவு மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ‘கூட்டணி ஆட்சி’ என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதற்கு அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பதில் அளித்திருக்கிறார்கள். “"தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வர வாய்ப்பில்லை. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள்தான் ஆட்சியைப் பிடிக்கும்'’என்றார் ராஜேந்திர பாலாஜி. "எடப்பாடி தலைமையில் உள்ள கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தர தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். இதில் யார் குழப்பங்கள் ஏற்படுத்தினாலும் எத்தனை திசை திருப்பினாலும் இந்த விசயத்தில் எடப்பாடியும் நாங்களும் தெளிவாக இருக்கிறோம்''”என உதயகுமார் பேசியிருக் கிறார். அதேபோல் செல்லூர் ராஜுவிடம் அமித்ஷா பேச்சு குறித்து கருத்துக் கேட்டபோது ‘"எடப்பாடிதான் முதலமைச்சர்'’ எனச் சொல்லி விட்டார். இவர்களின் பேச்சு எடப்பாடியின் குரலாகத்தான் ஒலித்தது. ஆக, கூட்டணி ஆட்சி விஷயத்தில் அமித்ஷாவுடன் மோத எடப்பாடி தயாராகிவிட்டார்.

ss

தே.மு.தி.க. சென்னையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அந்தக் கூட்டம் முடிந்ததும் பேட்டியளித்த பிரேமலதா, "கூட்டணி குறித்து முடிவுசெய்ய கால அவகாசம் உள்ளது. காங்கிரஸ் ‘இண்டியா’ கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க. அழைத்தால் கூட்டணிக்கு செல்வீர்களா என கேட்கிறீர்கள். அந்தக் காலம் வரும்போது பதிலை சொல்கிறோம். தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடவும் தயங்காது. கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது''’என்றார் பிரேமலதா. ‘2026ல் கூட்டணி ஆட்சிதான்’ என்கிறார் டி.டி.வி. “"தமிழ்நாட்டில் வரும் சட்டசபை தேர்தலில் ஈ.பி.எஸ். தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்''’என்கிறார் நயினார் நாகேந்திரன். இதற்கிடையே எடப்பாடி முன்னிலையில் அமித்ஷா பேசிய பேச்சின் முழு வடிவத்தை பா.ஜ.க.வின் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் ‘தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் அமைச்சரவையில் சீட்டு பங்கீடு என தெளிவாகவே அமித்ஷா குறிப்பிட்டிருக்கிறார்’ எனச் சொல்கிறது பா.ஜ.க.வின் இணையதளம்.

இவை எதற்கும் அ.தி.மு.க. பதில் சொல்லவில்லை. ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரை கூட்டணியில் எப்படி சேர்ப்பது, அவர்களுக்கு என்ன தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து அ.தி.மு.க. முடிவு செய்யவில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபிறகு இரண்டு முறை தமிழகத்திற்கு வந்த அமித்ஷா ஓ.பி.எஸ்.ஸை அழைத்துப் பேசவில்லை. பிரதமர் மோடியின் விழாவிலும் ஓ.பி.எஸ். கலந்து கொள்ளவில்லை. அதனால் அவரை தனிக்கட்சி ஆரம்பிக்குமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மதுரை தொடங்கி ராமநாதபுரம் வரை தனது ஆதரவாளர்களை வலுவாக வைத்திருக்கும் ஓ.பி.எஸ்., தென் மாவட்டங்களில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் வலுவான சேதத்தை ஏற்படுத்துவார். அவரை கூட்டணிக்குள் வைத்திருக்க பா.ஜ.க. விரும்புகிறது. ஆனால், எடப்பாடி விரும்பவில்லை. தஞ்சை மண்டலத்தில் சசிகலாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அவரையும் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்குள் வைத்திருக்க பா.ஜ.க. விரும்புகிறது. எடப்பாடி அதை ஏற்காததால் திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார் சசிகலா.

Advertisment

வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் வலுவான கட்சியாக விளங்கும் பா.ம.க.வில் நிலவும் அப்பா - மகன் சண்டையை முடிவுக்கு கொண்டுவர பா.ஜ.க. விரும்புகிறது. அதில் கூட்டணிக் கட்சித் தலைமை என்ற அடிப்படையில் தலையிட்டு ஒரு தீர்வைச் சொல்ல அ.தி.மு.க. தயாராகிறது. அ.தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த பணத்தை மையப்படுத்திதான் பா.ம.க.வில் தகராறு நடக்கிறது. அதில் அ.தி.மு.க. தலையிட ஏன் தயங்குகிறது என கேள்வியெழுப்பு கிறார்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர்.

தே.மு.தி.க.விற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதில் ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றிதான் பிரேமலதா அதிருப்தி தெரிவிக்கிறார். அதைப்பற்றி பேசுவதற்கு அ.தி.மு.க. தயாராக இல்லை என்பதால் பிரேமலதா கூட்டணியை விட்டுப் போகிறேன் என்கிறார். இந்தப் பிரச்னைகள் அனைத்திலும் முக்கிய மையப் புள்ளியாக இருப்பவர் எடப்பாடிதான். அவர் தானாக முன்வந்து ஒவ்வொருவரிடமும் பேசினால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். ஆனால், எடப்பாடி அதற்குத் தயங்கு கிறார். இதனால் ஒட்டுமொத்த அ.தி.மு.க. கூட்டணியே கலகலத்துப் போயிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. அதற்குள் பேசி கூட்டணி பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படும் என்கிறது அ.தி.மு.க. தலைமை.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள குழப்பங்களை மறைக்க தி.மு.க. கூட்டணி யிலிருந்து ஒரு கட்சி அ.தி.மு.க. கூட்டணிக்கு வருகிறது என பா.ஜ.க. கொளுத்திப் போட்டிருக்கிறது. மதுரைக்கு வந்த அமித்ஷாவுடன் அறுபது வழக்குகளில் தொடர்புள்ள ரவுடி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் சந்திப்பு நடத்தி அதை டிவிட்டரில் வெளியிட்டது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “இப்பொழுது அ.தி.மு.க. கூட்டணியில் நிலவும் குழப்பங் களைப் பார்த்தால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட் டணி நிலைக்குமா என்கிற சந்தேகம் உருவாகி இருக்கிறது” என தி.மு.க. வட்டாரங்கள் செய்தி பரப்ப ஆரம்பித்துள்ளன.

Advertisment