பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை நிலைகுலையச் செய்திருக்கிறது. தி.மு.க.வை மிரட்டிப் பணிய வைக்கலாம் என நினைத்திருந்த ராகுல்காந்தியின் கனவு இதன்மூலம் கலைந்துள்ளது என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.
பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் துடன் கூட்டணி வைத்து 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, வெறும் 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. இந்த படுதோல்வி, ராகுல்காந்தியை மட்டுமல்ல ஒட்டுமொத்த காங்கிரசையும் அப்செட் டாக்கியுள்ளது. மேலும், அடுத்தாண்டு நடைபெறவிருக்கிற தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநில கட்சிகளிடம் பேரம் பேசும் பவரையும் இழக்கச் செய்திருக்கிறது இந்த படுதோல்வி.
இதுகுறித்து பீகார் தேர்தல் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலரிடம் பேசியபோது, ’"பா.ஜ.க.வின் வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தியின் தேர்தல் பரப்புரை தேசிய அளவில் பேசு பொருளானது. இதனால், வாக்குத் திருட்டு விவகாரம் பரபரப்பாக வெடித்தது. அந்தவகையில், பீகார் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என ஏக எதிர்பார்ப்பில் இருந்தார் ராகுல்காந்தி.
குறிப்பாக, காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் 50 இடங்களில் வெற்றி கிடைக்கும் என நினைத்தார். அந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் தனது அரசியல் காய்நகர்த்தல்களை வேகமாக நகர்த்தவேண்டுமெனத் திட்டமிட்டி ருந்தார் ராகுல். அதாவது, தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு, அதிக சீட்டுகள்; ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதே ராகுலின் திட்டமாக இருந்தது.
பீகார் தேர்தல் களத்தில் பிரச்சாரம் முடிந்ததும் அவரை நாங்கள் சந்திக்கும்போது, தமிழகத்தின் அரசியல் குறித்து விவாதித்தார். எங்களின் கருத்துக்களை கேட்டறிந்ததுடன், இந்த முறை தி.மு.க. கூட்டணியில் பேச வேண்டிய ஒரு திட்டம் இருக்கிறது. அதனை சாதிக்க வேண்டும். நீங்கள் கட்சியை தமிழகத்தில் உயிரோட்டமாக வைத்திருக்கும் வேலைகளை கவனியுங்கள். தேர்தல் பணிகளில் சீரியஸாக இருக்கவேண்டும். தமிழகத்தில் உங்களின் அரசியல் எப்படி யிருக்கிறதோ, அதற்கேற்பத்தான் நாங்கள் தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்' என வெளிப்படுத்தினார் ராகுல்காந்தி.
அதாவது, "அதிக இடங்கள்; ஆட்சியில் பங்கு' என்பதே ராகுலின் திட்டமாக இருந்தது. அதற்கு வலுசேர்க்கும் வகையில், சத்தியமூர்த்திபவனில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் செல்வப்பெருந்தகை. அப்போதெல்லாம், கூட்டத்தில் பேசிய பலரும், அதிக சீட்டுகள்; ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்திப் பேசியதோடு, இதற்கு தி.மு.க. சம்மதிக்க மறுத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறி, விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்கிற கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஆனால், இதனை தி.மு.க. தலைமை ரசிக்கவில்லை. சோனியா மற்றும் ராகுலிடம் நல்ல நட்பை வைத்திருக்கும் தி.மு.க. எம்.பி. ஒருவர் மூலம், "கூட்டணிக்குள் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன. இதனை தி.மு.க. விரும்பவில்லை' என்பதை தெரிவிக்கப்பட்டது.
உடனே, கிரிஸ்ஜோடங்கரிடம் அறிவுறுத்தி னார் ராகுல்காந்தி. இதனையடுத்து சத்திய மூர்த்திபவனில் நடந்த ஆலோசனையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிவாளம் போட்டார் கிரிஸ் ஜோடங்கர். அதன்பிறகு அமைதி யானார்கள்.
ஆனால், பொதுவெளியில்தான் கூட்டணி ஆட்சி குறித்துப் பேசவில்லையே தவிர, உள்கட்சி விவாதங்களின்போது அழுத்தமாகவே இதனை வலியுறுத்தினர். அதோடு, டெல்லிக்குப் படையெடுத்து, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி.வேணுகோபாலை சந்தித்து, "கூட்டணி ஆட்சியை வலியுறுத்துங்கள்; இல்லையேல் கட்சியை வளர்க்க முடியாது. கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க. மறுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டு வந்தனர்.
இதன்பிறகு இதுகுறித்து 2 முறை ராகுல்காந்தியிடம் கார்கேவும் வேணுகோபாலும் ஆலோசனை நடத்தினர். அப்போது, "இந்த முறை தி.மு.க.விடம் கூடுதல் சீட் கேட்டு அழுத்தம் தருவதை விட பவர் ஷேரிங் (ஆட்சி அதிகாரத்தில் பங்கு) கேட்பதில் அழுத்தம் கொடுக்கலாம்' எனச் சொல்லியிருக்கிறார் ராகுல். "கடந்த தேர்தலில் (2021) ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளையே இப்போதும் ஏற்போம். ஆனால், ஆட்சியில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும் என தி.மு.க.விடம் பேச வேண்டும். இல்லையேல், மாற்று வழிகளை பரிசீலிப்போம். எங்களை தவறாக நினைக்க வேண்டாம் என தி.மு.க.விடம் சொல்லிவிடலாம். இதுதான் எனது திட்டம்' என அவர்களிடம் ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.
அதனை கார்கேவும் வேணுகோபாலும் வழிமொழிந்துள்ளனர். இவர்கள் இருவரில், தி.மு.க.விடமிருந்து காங்கிரஸ் வெளியேறி விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என அதிகம் திட்டமிடுவது கே.சி.வேணு கோபால்தான். இவருக்கு கேரளாவில் முதல்வராக வேண்டும். அதற்கு விஜய் கட்சியுடன் கூட்டணி வைத்தால், கேரளாவில் விஜய் கட்சிக்கு இருக்கும் 2.5 சதவீத ஓட்டுகளை எளிதாக வாங்கிவிடலாம் என்பது வேணுகோபாலின் கணக்கு.
ஆக, பீகாரில் கிடைக்கும் வெற்றியை வைத்து தி.மு.க.விடம் ஆட்சி அதிகார பேரத்தை நடத்தவேண்டும் என ராகுல்காந்தியும், வேணுகோபாலும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இவர்களின் ஒட்டுமொத்த கனவையும் கலைத்துவிட்டது பீஹார் தேர்தல் முடிவுகள்'' ’என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
ராகுல்காந்தியின் இந்த திட்டத்தை தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் அறிந்து வைத்திருந்ததால்தான், பீகார் தேர்தல் முடிவுகளையடுத்து, நிதிஷ்குமாருக்கும் தேஜஸ்விக்கும் வாழ்த்துக்கள் சொன்னதோடு, "இந்த முடிவுகள் அனை வருக்குமான பாடம்' என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
அதாவது, பீகார் தேர்தலை வைத்து தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கலாம் என திட்டமிட்டிருந்த ராகுல்காந்திக்கு ஒரு மெசேஜ் சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான், அனைவருக்குமான பாடம் என்ற வார்த்தை களைப் பயன்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின். முதல்வரின் இந்த வார்த்தைகள் ராகுல்காந்திக்கு மட்டுமல்ல; கூட்டணியில் இருந்துகொண்டே தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கலாம் என திட்டமிட்ட அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் சேர்த்துத்தான். கூடுதல் சீட்; கூட்டணி ஆட்சி என்கிற பேரமெல்லாம் இனி ஸ்டாலினிடம் நடக்காது''’என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர்கள்.
பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சம்மட்டி அடி கொடுத்திருப்பது விஜய்யையும் அவரைச் சுற்றியிருப்பவர்களையும் அதிர்ச்சி யடைய வைத்திருக்கிறது’என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/17/tvk-2025-11-17-15-46-16.jpg)