புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ""அரசுக்கு வர வேண்டிய சி.எஸ்.ஆர் நிதியை மடைமாற்றியது தவறு. "கிரண்பேடி ஊழலுக்கு உடந்தையாக உள்ளார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக சி.எஸ்.ஆர். நிதியை தன்னிச்சை யாக வசூல் செய்து, செலவு செய்து வருகின்றனர். கிரண்பேடிக்கோ, ராஜ்நிவாஸில் பணியாற்றுபவர் களுக்கோ சி.எஸ்.ஆர். நிதியை வசூல் செய்ய அதிகாரமில்லை. சி.எஸ்.ஆர். நிதி கேட்டு தொழில் நிறுவனங்கள் மிரட்டப்படுகின்றன. இதுகுறித்து கிரண்பேடி மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என வரிசையாக குறை கூறினார்.

narayanasamy

அதற்கு உடனடியாக செய்தியாளர்கள் மூலமே பதிலளித்த கிரண்பேடி, ""புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரும் பணி செய்யப்படவில்லை. தற்போது பருவமழை நெருங்கும் நிலையில் அதன் பாதிப்புகளை எதிர் கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலமும், தொழில் நிறுவனங்கள் மூலமும் 25 வழித்தடங்களில் 86 கி.மீ. தொலைவிற்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள் ளன. தொண்டு செய்ய விரும்புவோர் அப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை அதற்காக ஆளுநர் மாளிகை மூலம் ஒரு காசோலைகூட பெறப்பட வில்லை. தூர்வாரப்படுவதற்கான நிதி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்பட்டு வருகின்றது. நான் துணைநிலை ஆளுநர் பதவியி லிருந்து சென்றாலும் கூட புதுச்சேரி தொடர்ந்து நீரின்றித் தவிக்கும் மாநிலமாக மாறாது. நிறுவனங்கள் அளித்த நிதி சி.எஸ்.ஆர். திட்டத்தில் வராது. எனது வேண்டுகோளின்படியே பலரும் நேரடியாக தூர்வாரு வோருக்கு பணம் தந்துள்ளனர். நாங்கள் பணம் பெற வில்லை. வரும் காலங்களிலும் பலரின் நிதி உதவியுடன் தூர்வாரும் பணி தொடரும்'' என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Advertisment

பா.ஜ.க. மாநில தலைவர் சுவாமிநாதன் நம்மிடம், ""சி.எஸ்.ஆர். நிதி என்று இருக்கிறது என்பதும், அவை சமூகப்பணிகளுக்காக செலவிடப்பட வேண்டும் என்பதும் இப்போதுதான் மக்களுக்கு தெரிய வந்திருக் கிறது. இத்தனை ஆண்டுகளாக இந்த சி.எஸ்.ஆர். நிதி எங்கே போனது. அதிகப்படியான ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்தது. அப்போதெல்லாம் வசூலிக்கப் பட்ட சி.எஸ்.ஆர். நிதி மூலம் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டன? காங்கிரஸ் கட்சிக்கும், எம்.எல்.ஏ., மந்திரிகளுக்கும் கமிஷனாக, நன்கொடையாக இந்த நிதி மடை மாற்றப்பட்டிருக்கிறது. அந்த நிதி தங்களுக்கு வராமல் மக்கள் பணிக்குப் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தில் நாராயணசாமி பேசுகிறார்''என்றார்.

இதனிடையே 16, 17 தேதிகளில் டெல்லி சென்ற முதலமைச்சர் நாராயணசாமி சி.எஸ்.ஆர். நிதியில் கிரண்பேடியின் தலையீடு குறித்து நிதி அமைச்சரிடமும், உள்துறை அமைச்சரிடமும் புகார் கூறியிருக்கிறார்.

18-ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களிடம் நாராயணசாமி, ""1-10-2018 அன்று மணவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளி நிர்வாகி ஜான்சனுக்கு கவர்னர் கிரண்பேடி போன் செய்துள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு, சமூக பொறுப்புணர்வு நிதியாக ரூ.6 லட்சம் கேட்டுள்ளார். அதன்படி அந்த நிர்வாகியும் காசோலை கொடுத்துள்ளார். இதேபோல் கவர்னர் அலுவலகத்தில் பணியாற்றும் ஆஷா, லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு போன் செய்து ரூ.5.85 லட்சம் கேட்டுள்ளார். அவரது செயல்பாடு குறித்து உள்துறை மந்திரி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்'' என்றார்.

Advertisment

kiranbediஅதற்கும் பதிலளித்த கிரண்பேடி, ""முதல்–அமைச் சர் நாராயணசாமி பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறார். புதுச்சேரியில் நீர் ஆதாரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.20 கோடி சேமிக்கப்பட் டுள்ளது. முதல்–அமைச்சர் இதுபோன்ற எதுவும் செய்து உள்ளாரா? அவரால் இதுபோல் செய்ய முடியுமா? நன்கொடை அளித்தவர்கள் அடுத்த மாதம்(நவம்பர்) 3-ந் தேதி மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்'' என கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீமிடம் இதுகுறித்து கேட்டோம், ""மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கும்போது நிறுவனங்கள் நேரிடையாக செய்யக்கூடாது, கவர்னரும் அவ்வாறு செய்யக்கூடாது. கிரண்பேடி புதுச்சேரியில் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார், அது கண்டிக்கத்தக்கது. பிரெஞ்சு அரசிடமிருந்து போராடி பெற்றது புதுச்சேரியின் விடுதலை. ஆனால் இப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், கிரண்பேடிக்கும் அடிமையாக புதுச்சேரி உள்ளதோ என்கிற ஐயப்பாடு ஏற்படுகிறது. கவர்னரின் இதுபோன்ற அதிகார வரம்பு மீறலை கண்டித்து 31-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்'' என்கிறார்.

கிராமப்புற மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் ஜெகன்னாதன் கூறும்போது, ""1884-ல் பிரெஞ்சு அரசாங்கம் "சேந்திக்கால்' எனப்படும் குடிமராமத்து பணி மூலம் ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீராதாரங்களை தூர்வாரி பராமரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 1954-க்கு பிறகு தேசிய ஊரக வேலை உறுதி திட்டமாக மாறியது. அதுபோன்ற ஒரு திட்டத்தைதான் கிரண்பேடி செய்திருக்கிறார். 84 லட்சம் ரூபாயில் 86 கிலோ மீட்டர்க்கு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதே அரசு திட்ட வரைவு மூலம் இந்த தூரத்தை தூர்வார 16 லிருந்து 20 கோடி வரை செலவு காண்பித்திருப்பார்கள். ஆட்சியிலிருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் இந்த பணிகளை உள்ளாட்சி நிர்வாகங்களே செய்திருக் கும். அதையும் நடத்தவில்லை. தானும் செய்யாமல், செய்பவரையும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் மக்களின் தேவைகள் எப்படி தீர்க்கப்படும்'' என கேட்கிறார்.

கிரண்பேடி மாறும் வரையில் அல்லது காங்கிரஸ் ஆட்சி மாறும் வரையில் இவர்களின் அதிகாரப் போட்டி முடியப் போவதில்லை.

- சுந்தரபாண்டியன்