தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் வடமாநிலத்தில் பெய்யும் கனமழையில் சிக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சிவில் இன்ஜினியராக கடந்த 16 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்.
திருமணத்துக்கு பின் இவர் தனது மனைவி பவித்ரா, 8 வயதான சௌந்தியா, 6 வயதான சௌமிகாவோடு ஜகல்பூரில் செட்டிலாகிவிட்டார். குடும்ப நிகழ்வுகள், திருவிழா காலங்களில் மட்டும் ஊருக்கு வந்து தன் பெற்றோரைப் பார்த்துவிட்டு செல்வார். கடந்த சில மாதங்களாக "திருப்பதி செல்லலாம் வந்துட்டு போப்பா' என பாரண்டப்பள்ளியிலுள்ள அவரது அப்பா கோவிந்தன் அழைத்துள்ளார். பிள்ளைகளுக்கு விடுமுறை இல்லை என தள்ளி வைத்துள்ளார்.
தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் கடுமையாக மழை பெய்துவருவதால் ஊருக்குப் போய் விட்டு வந்துவிடலாம் என மனைவி, தனது இரண்டு குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு 26-ஆம் தேதி காரில் புறப்பட்டுள்ளார். பஸ்தார் மாவட் டத்தில் பிரபலமான தேசியப் பூங்கா வின் அருகில் சுக்மா டர்பந்தனா என்கிற இடத்திலுள்ள சபரி ஆற்றின் கால்வாயை அவரது கார் கடக்கும்போது அதீதமாக வந்த மழைநீர் காரை ஆற்றில் அடித்துத் தள்ளிவிட்டது. கார் ஓட்டுநர் மட்டும் காரிலிருந்து குதித்து தப்பியுள்ளார். ராஜேஷ்குமார், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் நீரில் அடித்துச்செல்லப் பட்டுவிட்டனர். 18 மணி நேரத்துக்கு பின்பு அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு தமிழ் நாட்டுக்கு கொண்டுவந்து அடக்கம்செய் தனர். இது அக்கிராம மக்களை கண்ணீரில் தத்தளிக்க வைத்துள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதீதமாகப் பெய்துவருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஜம்முவிலுள்ள பிரபலமான ரியாசி மாவட்டத்திலுள்ள வைஷ்ணவிதேவி கோவிலுக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் பெருமழையால் நிலச்சரிவில் சிக்கி புதைந்தனர். இதுவரை 34 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சுமார் 100 கிராமங்களுக்குள் மீட்புப் படையினர் செல்லமுடியாமல் ஐந்து நாட்களாகத் தவிக்கின்றனர். மழையின் மேகவெடிப்பே நூற்றுக்கணக்கானவர்கள் இறப்புக்கு காரணம் என்கிறார்கள் வானியல் வல்லுநர்கள்.
"மேகவெடிப்பு அபாயம் தமிழகத் துக்கு உண்டா?'' என தனியார் பல்கலைக் கழகத்தின் பேரழிவு தணிப்பு, மேலாண்மை மைய பேராசிரியர். ஜி.பி.கணபதியிடம் பேசியபோது... “"குறிப்பிட்ட பகுதியில் மட்டும் திடீரென நடப்பது மேக வெடிப்பு. இத்தகைய வானிலை நிகழ்வுகளை முன்கூட்டி துல்லியமாகக் கணிக்கவோ, செயற்கையாகத் தடுக்கவோ தற்போதுள்ள தொழில்நுட்பங்கள் போதாது. தமிழ் நாட்டிலும் மேக வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 2015 சென்னை வெள்ளம், 2021 சேலம் நிகழ்வு போன்றவை இதற்கு உதாரணங்கள்'' என்றார்.