மக்களின் எதிர்ப்பைத் தாக்குப்பிடிக்க முடியாது என்றதும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது எடப்பாடி அரசு.
""இனி 144 தடை உத்தரவு கிடையாது. தூத்துக்குடி இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது''’என்று ஆறுதல் கூறவந்த அமைச்சர்கள் ஆடிப்போகும் அளவுக்கு கேள்வி இருந்தது. ""எங்களை சுடச்சொன்னது யார்? உங்களுக்குத் தெரியும்... சொல்லுங்க''’என்று சந்தோஷ்ராஜ் கேட்ட கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பதில் இல்லை.
தணியாத ஆத்திரம்!
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களில் 8 பேர் மீனவர்கள். அதனால், தாளாத வேதனையும், துக்கமும், பழிக்குப்பழி தீர்க்கவேண்டும் என்ற வெறியும், திரேஸ்புரம் மீனவர்களைத் தூங்கவிடவில்லை. கூடுதாழை, கூட்டப்பனை, பெருமணல், பெரியதாழை, உவரி போன்ற மீனவப் பகுதிகளில், தங்களின் உறவுகளைத் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில், போலீஸ் வாகனங்களை உடைத்தவர்கள், தீ வைத்தவர்களைத் தேடி வெளிமாவட்ட ஏ.எஸ்.பி. ஒருவரின் தலைமையில் போலீஸ் படை ஒன்று திரேஸ்புரத்துக்குள் புகுந்தது. கிளாஸ்டனையும், தலை சிதறி மாண்ட ஜான்ஸியையும் பறிகொடுத்த ஏரியா இது. ஆத்திரத்துடன் மக்கள் காக்கிகளைச் சுற்றிவளைத்தனர். ‘போலீஸைப் பார்த்தாலே எரியுது’ என்று கூக்குரலிட்டிருக்கின்றனர். மக்களைப் பார்த்து அந்த ஏ.எஸ்.பி. கையெடுத்துக் கும்பிட, அவரையும் போலீஸ் படையையும் ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார்கள் மக்கள். இனி போலீஸ்காரர்கள் யாரும் திரேஸ்புரத்துக்குள் வரக்கூடாது என்று, ஊர் முகப்பில் உள்ள பாலத்தின் நடுவில் படகைக் கிடத்தி, அரணாக்கிவிட்டனர்.
திரேஸ்புரத்தைச் சேர்ந்த நரேஷ், ""எப்படிங்க போலீஸை ஊருக்குள்ள விடமுடியும்? விமல், எடிசன், டிக்சன், பிரபுன்னு நாங்க அஞ்சு பேரும் கலெக்டர் ஆபீசு பக்கமே போகல. சின்னக்கோயில் பக்கமா வந்துகிட்டிருந்தப்ப, போலீஸ் வண்டி ஒண்ணு பிரேக் அடிச்சு நின்னுச்சு. கண்ணுமண்ணு தெரியாம அந்த அடி அடிச்சாங்க. டிக்சனுக்கும் பிரபுவுக்கும் மண்டை உடைஞ்சிருச்சு. எங்க அஞ்சு பேரையும் சவுத் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போயி ஜட்டியோட நிற்க வச்சாங்க. அங்கேயும் உருட்டுக்கட்டை, இரும்பு ராடு, சைக்கிள் டியூபுன்னு கையில கிடைச்சத வச்சு இஷ்டத்துக்கு அடிச்சாங்க. பூட்ஸ் காலால நெஞ்சுலயே மிதிச்சாங்க. தோலெல்லாம் கிழிஞ்சு, ரத்தம் வந்திருச்சு. அங்கே வச்சிருந்த 92 பேர்ல சின்னப்பசங்க, மண்டை உடைஞ்சவங்கள விட்டுட்டு, 67 பேரை புதுக்கோட்டை காவல்நிலையத்துக்கு கொண்டு போனாங்க. எங்களோட அங்க அடையாளங்களைக் குறிச்சிட்டு, அங்கிருந்து வல்லநாடு துப்பாக்கிச்சூடு தளத்துக்கு கொண்டுபோய், ரெண்டு நாள் சட்டவிரோதமா அடைச்சு வச்சாங்க. அப்புறம் மூணாவது நாள் பேரூரணி ஜெயில்ல வச்சிருந்து, அதுக்கடுத்த நாள் ரிலீஸ் பண்ணுனாங்க''’என்றவர், “""எங்ககிட்ட மட்டுமில்ல, அண்ணா நகர், பிரையண்ட் நகர் ஏரியாவுல இருந்து பிடிச்சிட்டு வந்த மக்கள்கிட்டயும் அவங்க வச்சிருந்த மொபைல், செயின், மோதிரம், வாட்ச்சுன்னு எல்லாத்தயும் பிடுங்கிருச்சு போலீஸ். இதையெல்லாம் யாருக்கும் இப்ப வரைக்கும் திருப்பிக் கொடுக்கல. எங்க மக்களைச் சுட்டுக் கொன்னுட்டு, எங்ககிட்டயே கொள்ளையும் அடிச்சிருக்காங்க''’என்றார் வேதனையுடன்.
கொதித்துப்போயிருந்த அண்ணாநகர் ஜேசுராஜ், ""எங்களை அடைச்சு வச்ச துப்பாக்கி சுடும் தளத்தில் குடிக்கிறதுக்கு தண்ணீர் கூட தரல. எங்க எல்லாருக்கும் ஒரே டாய்லெட்தான். நாத்தத்துல எங்களால படுக்க முடியல. மத்தவங்களுக்கு அவஸ்தை தரக்கூடாதுன்னு ரெண்டு நாளா யாரும் ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போகல. ஒரு தவறும் பண்ணாத எங்களுக்கு எதுக்கு இப்படி ஒரு கஷ்டத்தைக் கொடுத்துச்சு போலீஸ்?'' என்று கேட்டார்.
இன்னும் 10 பேர்?
வீடுகளில் பூட்டை உடைத்து போலீஸ் இழுத்துச்சென்ற இளைஞர்கள் பலர் என்ன ஆனார்கள் என்கிற விவரம் தெரியவில்லை. என்கவுன்ட்டர் செய்திருப்பார்களோ? என்கிற சந்தேகம் வேறு வலுக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இந்த மன உளைச்சலை அறிந்து, சட்ட உதவிகளை அளித்திட முன்வந்தார்கள் சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள். அந்தக் குழுவில் இடம்பெற்ற, நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம், ""எங்களைப் பாதி வழியிலேயே தடுத்தது போலீஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தூத்துக்குடி மக்களுக்குத் தேவைப்படும் சட்ட உதவிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை 23-ஆம் தேதி பெற்றுவிட்டு வந்தார்கள் வழக்கறிஞர்கள். வழக்கறிஞர்கள் குழு தந்த அழுத்தத்தால், காவல்நிலையத்தில் அடைத்து வைத்திருந்த அப்பாவி மக்கள் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். 65 பேரையும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம். இல்லையென்றால் மேலும் 10 பேரைச் சுட்டுக்கொன்று, கணக்கில் சேர்த்திருப்பார்கள்''’என்றார்.
நீதியரசர்களின் மனிதநேயம்!
தூத்துக்குடி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை நீதிபதி பகவதி அம்மாளிடம், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். உடனே, தலைமை நீதிபதி பகவதி அம்மாள், ‘வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில் சட்ட விரோத காவலில் யாராவது வைக்கப்பட்டிருக்கிறார்களா?’ என்று நேரில் சென்று விசாரிக்க வேண்டும் என்று விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேலிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அவர் நேரில் பார்த்து உறுதி செய்தவுடன், அந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வையுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்.’ என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். பிறகுதான், 65 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மீதி 30 பேர் விடுவிக்கப்பட்டனர். அந்த 65 பேர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரவு நேரத்திலும் அத்தனை ஜாமீன் மனுக்களையும் விசாரித்து, 65 பேரையும் விடுதலை செய்தார் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சாருஹாசினி. "வேறு யாரும் ஜாமீன் கேட்டு வந்தால் நேராக என் வீட்டுக்கு அழைத்து வாருங்கள்'’என்று வழக்கறிஞரிடம் கூறிவிட்டே கிளம்பினார்.
சுட்டுக்கொன்றால் 2 லட்சம் பரிசு!
13 பேர் உயிரைப் பறித்துவிட்டு, தற்போது தப்பிப்பதற்கான வழிகளில் இறங்கியிருக்கும் ஐ.ஜி. சைலேஷ்குமார் குழுவினரின் காய் நகர்த்தலை நம்மிடம் விவரித்தார் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம்.
"மஞ்சள் டி-ஷர்ட் போட்ட போலீஸ்காரங்கதான் துப்பாக்கிச் சூடு நடத்தினாங்கங்கிற பேச்சு திட்டமிட்டு பரப்பியது. அந்த போலீஸ் மட்டுமா சுட்டது? மக்களோடு மக்களாகக் கலந்து, 10 அடி பாயும் பிஸ்டலை வைத்து 9 பேரைச் சுட்டிருக்கிறார்கள். மற்றவர்களை 1800 அடி பாயும் எஸ்.எல்.ஆர். (நங்ப்ச் கர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ப்ங்) எனப்படும் நீளத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர். குண்டடிபட்டு காயமடைந்திருக்கும் பெரும்பாலோர் நவீன ரக துப்பாக்கியால் சுடப்பட்டவர்கள்தான். இது முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்தோடு காவல்துறை சேர்ந்துகொண்டு நடத்திய திட்டமிட்ட படுகொலை.
போராட்டத்தின் 100-வது நாளுக்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவே, ‘ஊதியம் தேடி வரும்’என்று சொல்லி, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது ஸ்டெர்லைட். இந்த நேரத்தில்தான், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யை புறக்கணித்துவிட்டு, பாதுகாப்பு பணியைத் தன் வசமாக்கிக் கொண்டது ஐ.ஜி. சைலேஷ்குமார் டீம்.
துப்பாக்கி சுடுவதில் திறமையான எஸ்.ஐ. முதல் கான்ஸ்டபிள் வரை 40 பேரைத் தேர்வு செய்து, அவர்கள் கையில் துப்பாக்கியைத் தந்து, "நீங்கள் சுடும் ஒவ்வொரு தலைக்கும் ரூ.2 லட்சம்' என்று விலை பேசப்பட்டு, மக்களைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். ராஜா திலீபன் இருந்த டீமுக்கு தூத்துக்குடி மாவட்ட ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ. ரென்னிஸ் தலைமை ஏற்றார். இதற்காக ரூ.25 கோடியை அள்ளிக்கொட்டியிருக்கிறது ஸ்டெர்லைட்'' என்றார்.
அடையாளம் காட்டிய சப்-மார்க்கர்கள்!
கலவரம் உருவான நாளில், பேரணியை முன்னின்று நடத்தியவர்களின் உயிருக்கு குறிவைத்த போலீசார், அவர்களின் முகத்தை, புகைப்படம் வாயிலாக நன்றாகவே மனதில் நிறுத்திவிட்டனர். கூடுதல் அடையாளத்துக்காக, ‘சப்-மார்க்கர்’ என்கிற குறியீடோடு, வெள்ளை முழுக்கைச் சட்டை அணிந்த தங்களின் ஆட்களை, குறி வைக்கப்பட்டவர்களின் பக்கத்திலேயே இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இந்த வெள்ளைச் சட்டைக்காரர்கள்தான், யார் யார் உயிரைப் பறித்திட வேண்டும் என்று ஆள் காட்டும் வேலையில் இருந்திருக்கிறார்கள். சிப்காட், வடக்கு, தெற்கு மற்றும் சென்ட்ரல் காவல் நிலைய காக்கிகள், இந்த சப்-மார்க்கர்கள் அடையாளம் காட்டியவர்களை மட்டுமே சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
கலவரத்தை உருவாக்கிய ஸ்டெர்லைட் ஆட்கள்!
அன்று களத்தில் நேரில் பார்த்ததைச் சொன்ன பாக்கியராஜ் “""ஆல்வின் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆட்கள்தான், கறுப்பு உடையணிந்து, விவிடி சிக்னலுக்கு எதிரில் உள்ள சிறிய முடுக்குகள் வழியே வந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டு, திட்டமிட்டே கலவரத்தை ஏற்படுத்தினார்கள். இதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. மக்கள் அதிகாரம் மற்றும் புரட்சிகர மாணவரணி பொறுப்பாளர்களைக் குறிவைத்தே துப்பாக்கிச்சூடு நடந்தது. கவனித்துப் பார்த்தால் தெரியும். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களை உடைத்தது மக்களே! ஆனால், கொளுத்தவில்லை. தந்திரமாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவைத்து, தான் நினைத்ததைச் சாதித்துவிட்டார் ஸ்டெர்லைட் அகர்வால்'' என்றார் குமுறலுடன்.
“இறந்தவர்கள் அதிகம் பேர்!’’
“குண்டடிபட்டு செத்தவங்க ரொம்ப பேரு. அரசாங்கம் குறைச்சு சொல்லுது.’’ தன் கண் முன்னே சுடப்பட்ட நண்பன் சுகுமாரைக் காப்பாற்றிய விஜய் பீதியோடு இப்படிச் சொல்ல, அரசு மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தோம்.
""தூத்துக்குடி அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருக்கும் 13 உடல்களைத் தாண்டி சில உடல்களை நெல்லை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார்கள். பாளை அரசு மார்ச்சுவரியில் உள்ள 13 ப்ரீசர்களில் 4 வேலை செய்யவில்லை. மீதமுள்ள 9 ப்ரீசர்களில்தான் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளில் ஒன்றில் மட்டும் ஏற்கெனவே உடல் வைக்கப்பட்ட நிலையில் இருந்தது. மற்ற உடல்கள் நான்கு நாட்களுக்கு முன் கொண்டு வரப்பட்டவை. இந்த உடல்களில் காயங்கள் இருக்கின்றன. இந்தக் கணக்கெல்லாம் ஆட்சியின் மேல் மட்டத்துக்கு நன்கு தெரியும்'' என்கிறார்கள்.
மூக்கை நுழைத்த முன்னாள் டி.ஜி.பி!
தூத்துக்குடியில் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஹோட்டல்கள் பல உண்டு. ஆனால், ஹோட்டல் சுகத்தில் 6 மற்றும் 7 எண் கொண்ட அறைகளை உயர் அதிகாரி ஒருவருக்கு ஒதுக்க வேண்டும் என்று துப்பாக்கிச் சூட்டுக்கு மறுநாள் தெற்கு காவல் நிலையத்தின் பெயரில் பதிவு செய்தார்கள். டி.வாகைக்குளம் ஏர்போர்ட்டில் இறங்கினார் முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர். சுகம் ஹோட்டல் அறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டேவிதார், ககன்தீப்சிங், ஐ.பி.எஸ். அதிகாரிகள் வரதராஜன், சண்முகராஜேஸ்வரன் மற்றும் சைலேஷ்குமார் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகே, மாவட்ட எஸ்.பி.யையும், மாவட்ட ஆட்சியரையும் இடமாற்றம் செய்தது அரசு. அதிகாரிகள் இடம் மாற்றத்துக்கு முன்பாகவே, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான ஆணையை முன் தேதியிட்டு கலெக்டர் வெங்கடேஷிடம் வாங்குவதென்று முடிவானது. ஆட்சியர் வெங்கடேஷோ, மறுத்துவிட்டார்.
எடப்பாடி இருக்காரா? இல்லியா?
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம், ""சுடவிட்டு வேடிக்கைதானே பார்த்தீங்க? உங்க மகனுக்கு இப்படி அடிபட்டிருந்தா நீங்க என்ன செய்வீங்க? இன்னொருவாட்டி ஸ்டெர்லைட் ஆலையை இயக்குனாங்கன்னா.. நீங்க பொறுப்பேத்துக்குவீங்களா?''’என்று சிகிச்சை பெற்றுவரும் இன்பராஜ் கேட்ட கேள்விக்கு, அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
மருத்துவமனையில் கடம்பூர் ராஜு இருக்கும்போதே, லயன் ஸ்டோனைச் சேர்ந்த வினோ என்பவர்... ""எடப்பாடி இருக்காரா? இல்லியா? மக்களோடு மக்களா செத்துப் போயிட்டாரா? இந்த எம்.பி., எம்.எல்.ஏ.வெல்லாம் எங்கே போனாங்க? ஸ்டெர்லைட்காரன் வீட்ல போயி படுத்துக்கிட்டாங்களா?'' என்று குரலை உயர்த்திக் குமுறினார்.
இறுதி எச்சரிக்கை!
பலியான 13 பேர் உடல்களைப் பெற்றுக்கொள்ளும் 30-ஆம் தேதி காவல்துறையினருக்கு கிலி ஏற்படுத்தக்கூடிய நாள் என்கிறது உளவுத்துறை. ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் 50 பேரைக் கொண்ட குழு, மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் தலைமையில் களமிறங்கி உள்ளது. துப்பாக்கிச்சூட்டில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்கிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினரோ, ""எங்களுக்கு என்.ஜி.ஓ. சார்ந்த எந்த அமைப்பும் வேண்டாம். மனித உரிமை ஆர்வலராக மட்டும் வாருங்கள்'' என்று கறாராகக் கூறிவிட்டனர்.
30-ஆம் தேதி, திருச்செந்தூர் வீரபாண்டி பட்டணத்திலிருந்து, தூத்துக்குடி வெள்ளப்பட்டி வரையிலும் உள்ள கடற்கரையில் அமைதிப் பேரணி நடக்கும்.
இத்தனை உயிர்ப்பலிகளுக்குப் பின் ஸ்டெர்லைட்டை மூட அரசாணை வெளியிடப்பட்டிருப்பதை பாதிக்கப்பட்டோர் ஏற்பார்களா? 13 உடல்களும் ஊர்வலமாக செல்லும்போது என்ன நடக்கும்? என்ற கலக்கத்தில் இருக்கிறது நரவேட்டை ஆடிய அரசு.
-சி.என்.இராமகிருஷ்ணன், நாகேந்திரன், பரமசிவன்
படங்கள்: ராம்குமார், ராஜா