5 ஆண்டுகள் இடைவெளியில் வெளிநாட்டு பத்திரிகைக் காகிதத்தின் விலை தாறுமாறா ஏறிப்போச்சு. இந்தியாவில் தரமான பத்திரிகைக் காகிதத்தை தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த மூன்று முக்கிய அரசு காகித ஆலைகளை மூடிவிட்டார்கள். மூடிய ஒரு ஆலையையும் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி தீவிரமாக இருக்கிறது என்ற தகவல் நம்மை திடுக்கிட வைத்தது.

இதுபற்றிய விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய நமக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் கிடைத்தன. பத்திரிகை காகித வினியோக முகவர் ஒருவரிடம் பேசியபோது மனம் நொந்து நம்மிடம் கூறியது...…

paperbusiness

Advertisment

""முன்பெல்லாம் அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில்தான் வெளிநாட்டு பத்திரிகைக் காகிதத்தின் விலை மளமளவென்று அதிகரிக்கும். அந்த அளவுக்கு அங்கு பத்திரிகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும். தேர்தல் காலத்தில் ஒரு மூன்று மாதங்கள் பத்திரிகைக் காகிதத்தின் விலை கடுமையாக அதிகரிக்கும். பிறகு அடுத்தடுத்த மாதங்களில் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஆனால், சமீப ஆண்டுகளாக அமெரிக்காவில் பத்திரிகைகளின் விற்பனை சரிந்துவிட்டது. மின்னணு செய்தி வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பத்திரிகைக் காகிதத்தின் தேவை குறைந்துவிட்டது. இதையடுத்து உலகம் முழுவதும் இயங்கிய மிகப்பெரிய 15 காகித ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. இது செத்துக்கொண்டிருக்கும் தொழிலாகிவிட்டது.

இந்தியாவிலும் வழவழப்பான பத்திரிகைக் காகிதம் உற்பத்தி செய்யும் மூன்று அரசு தொழிற்சாலைகள் இருந்தன. இவை இந்திய பத்திரிகைகளுக்கு குறைந்தவிலையில் காகிதம் வினியோகித்தன. ஆனால் டி.என்.பி.எல்., எம்.பி.எம்., எச்.என்.எல். ஆகிய மூன்று காகித ஆலைகளும் வழவழப்பான பத்திரிகைக் காகித உற்பத்தியை நிறுத்திவிட்டன. கோட்டயத்தில் உள்ள எச்.என்.எல். தொழிற்சாலையை கேரள அரசாங்கமே எடுத்து நடத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. ஆனால், மத்திய அரசு மறுத்துவிட்டது. இப்போது அந்த தொழிற்சாலையை பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்க முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. டி.என்.பி.எல். நிறுவனம் இப்போது அலுவலகங்களுக்குப் வெள்ளைத் தாள் மட்டுமே உற்பத்தி செய்கிறது என்கிறார்கள். மூடப்பட்ட மூன்று அரசு தொழிற்சாலைகளும் சேர்ந்து மாதத்துக்கு 8 முதல் 9 ஆயிரம் டன் பத்திரிகைக் காகிதத்தை உற்பத்தி செய்தன. இவை உற்பத்தியை நிறுத்தியதால் மொத்தத்துக்கு காகிதத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

paperbusiness

Advertisment

சீனாவில் வேஸ்ட் பேப்பர்களை பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த வேஸ்ட் பேப்பர்கள் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டது. நாளடைவில் மோசமான வேஸ்ட் பேப்பர்களை கொண்டுவந்து தலையில் கட்டத் தொடங்கினார்கள். இதையடுத்து, உற்பத்திச் செலவு அதிகரித்தது. எனவே, சீனாவும் பத்திரிகைக் காகிதங்களை இறக்குமதி செய்வதே உத்தமம் என்று முடிவெடுத்துவிட்டது.

நியூஸ்பிரிண்ட் டன் ஒன்றுக்கு 450 முதல் 550 டாலர்வரை கொடுத்து இறக்குமதி செய்யப்படும் நிலை இருந்தது. பத்திரிகை காகித உற்பத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு காரணமாக கடந்த சில மாதங்களாக டன் ஒன்றுக்கு தற்போது 820 டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமல்ல மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் ரூபாய் 65-லிருந்து 71 ரூபாயாக பாதாளத்திற்கு சென்றிருக்கிறது. அத்துடன், இறக்குமதிக்கான ஜி.எஸ்.டி. வரியும் 5 மற்றும் 12 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன்விளைவாக பதிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்''’ என்றார்.

மதுரையைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் செல்லச்சாமியிடம் பேசியபோது, ""காகித உற்பத்தி மட்டுமல்ல, அச்சகத் தொழிலும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான டி.என்.பி.எல். காகித ஆலையில் கரும்புச் சக்கையைப் பயன்படுத்தியும், தனியாருக்கு சொந்தமான சேசாய் மில்லில் மரக்கூழைப் பயன்படுத்தியும் காகிதம் தயாரிக்கிறார்கள். மற்றபடி ஜி.வி.ஜி., அமராவதி, தனலெட்சுமி, அஸ்வின், கார்த்திகேயா போன்ற சிறிய காகித ஆலைகள் வேஸ்ட்பேப்பரை மறுசுழற்சி செய்து காகிதம் உற்பத்தி செய்கின்றன. இந்த "பி கிரேட்' காகிதத்தையே பெரும்பாலான அச்சு வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்கும் அறிவிப்பு வரும் சமயத்தில்தான் பெரும்பாலான அச்சகங்களுக்கு வாழ்க்கையே கிடைக்கிறது''’என்றார்.

அச்சகப் பணிகளுக்கு புகழ்பெற்ற சிவகாசியைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் கார்த்திகேயனிடம் பேசியபோது, ""…பி கிரேட் பேப்பர்கூட இப்போ கிடைக்கமாட்டேங்குது ஸார். வேஸ்ட்பேப்பரைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் பேப்பர்களுக்கும் செயற்கையாக டிமாண்ட் ஏற்படுத்தி விலையை ஏற்றுகிறார்கள். அன்பளிப்புக்காக டைரிகள், காலண்டர்கள் அச்சடிப்பார்கள். இப்போது பேப்பர் விலை ஏறியதால், அந்த வேலையும் பாதிக்குக்கீழ் குறைந்துவிட்டது. ஜாப் வொர்க்கிற்கு மோடி அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. போட்டதில் பாதி பேர் பொழப்பு போச்சு''’என்கிறார்.

காகித ஆலை உரிமையாளர் ஒருவரைக் கேட்டபோது, ""இந்த டிமாண்ட் செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல'' என்றார். கனடா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் பேப்பர் உயர்தரமானது. விலையும் அதிகம். சீனாவில் இருந்து குறைந்த விலையில் கிடைத்த காகிதம் சுத்தமாக நின்றுவிட்டதால்தான் இந்த டிமாண்ட். ஐ.என்.எஸ். எனப்படும் இந்தியன் நியூஸ்பேப்பர் சொஸைட்டி இந்த விவகாரத்தில் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. காட்சி ஊடகத்துறைக்கு அரசு எல்லா சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால் அச்சு ஊடகத்துறையை கண்டுகொள்வதில்லை'' என்றார்.

-ஆதனூர் சோழன்