தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் காட்டிலும் தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகுமா என்கிற கேள்விதான் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மாநில சுயாட்சி மாநாட்டை ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். இதற்காக, பா.ஜ.க. அல்லாத தேசிய கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாநாட்டில் கலந்துகொள்ள சோனியாவும் உறுதியளித்திருந்தார். ஒரு கட்டத்தில், ராகுல் காந்தி கலந்துகொள்ள வேண்டும் என தி.மு.க. தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து, ராகுல் வருவார் என நம்பிக்கையை கொடுத்தார் சோனியா. அதற்கேற்ப ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், கலைஞரின் மறைவை அடுத்து தி.மு.க.வில் சில மாற்றங்கள் உருவானது.
பா.ஜ.க.வுக்கு எதிரான மாநில சுயாட்சி மாநாட்டை, "தெற்கே உதித்தெழுந்த சூரியன்' என கலைஞருக்கு புகழ் வணக்கம் பரப்பும் மாநாடாக மாற்றிய ஸ்டாலின், மாநாட்டுக்கு பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷாவையும் அழைத்திருப்பதுதான் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
அமித் ஷா அழைக்கப்பட்டதை ரசிக்காத சோனியாவும் ராகுல் காந்தியும், இருவரில் ஒருவர் மாநாட்டில் கலந்துகொள்வதாக இருந்த நிலையை மாற்றி, குலாம்நபி ஆசாத் கலந்துகொள்வார் என தெரிவித்துவிட்டனர். அமித் ஷாவின் அழைப்பு தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரமாக இருக்குமோ என சந்தேகப்படும் ராகுல் காந்தி, பல்வேறு அரசியல் தொடர்பாளர்களிடம் விசாரித்து வருகிறார். தனது சந்தேகம் உறுதியானால் கடைசி நேரத்தில் குலாம்நபி ஆசாத்தையும் மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என உத்தரவிட ராகுல் திட்டமிட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா? என தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, ""உடல்நலம் நலிவுற்று கோபாலபுரத்தில் இருந்த கலைஞரை சந்திக்க பிரதமர் மோடி வந்ததிலிருந்தே, கூட்டணி வதந்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியலின் மூத்த தலைவர் கலைஞருக்கான புகழ் வணக்கம் நிகழ்வில் தேசிய தலைவர்கள் பலரையும் அழைத்ததுபோல பா.ஜ.க.வையும் அழைத்தோம். இது ஒரு நினைவேந்தல் நிகழ்வுதானே தவிர, கூட்டணி உறவு கிடையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமும் தேவையும் தி.மு.க.வுக்கு இல்லை''’ என்கிறார் மிக அழுத்தமாக.
கடந்த வாரம் டெல்லி சென்று பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து நிகழ்வுக்கான அழைப்பிதழை கொடுத்தார் தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. சோனியாவை சந்தித்தபோது, அமித் ஷாவை சந்திக்கவிருப்பதையும், அமித் ஷாவை அழைத்திருப்பதிலும் அரசியல் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதற்கு எவ்வித கமெண்ட்ஸையும் பாஸ் பண்ணவில்லை சோனியாகாந்தி.
இதுகுறித்து காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்ஃபோன்ஸிடம் நாம் பேசியபோது, ""அமித் ஷாவின் அழைப்பை கூட்டணிக்கான நகர்வாகப் பார்க்கவில்லை. அரசியல் நாகரிக மரபாக கருதி அழைத்திருக்கிறார்கள். கலைஞருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நேரில் வந்திருந்தார். கலைஞரின் மறைவை தேசிய துக்கமாக அறிவித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவித்ததுடன் அவையையும் ஒத்தி வைத்தனர். அந்த மரபை தி.மு.க.வும் கடைப்பிடிக்க நினைத்திருக்கலாம். இதற்கும் மேலாக, மாநில சுயாட்சியிலும் மதச்சார்பற்ற அரசியலிலும் சமூக நீதியிலும் நம்பிக்கை கொண்ட தி.மு.க., கொள்கையில் சமரசம் செய்துகொள்கிற முயற்சியை எடுக்காது'' என்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, ""பா.ஜ.க.வுக்கு செல்வாக்கில்லாத மாநிலங்களில் வலிமையான மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது பா.ஜ.க. தலைமை. தமிழகத்தில் கூட்டணிக்கான பல விசயங்களை பல கோணங்களில் ஆராய்ந்தாலும் தற்போது பிரதமர் மோடியின் சாய்ஸ் தி.மு.க.தான். தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதையே அவர் விரும்புகிறார். கலைஞர் உடல்நிலையை விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வந்தபோதே கூட்டணி குறித்த விருப்பத்தை ஸ்டாலினிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. அதன்பிறகே, மு.க.அழகிரியை பா.ஜ.க. மறைமுகமாக கையிலெடுத்தது. பா.ஜ.க. ஆதரவில் அழகிரி வலிமையாகி விடக்கூடாது என நினைக்கிறார் ஸ்டாலின். அழகிரியால் குடைச்சல் கொடுக்கப்படும்ங்கிறதை ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் சீனியர் ஒருவர் மூலம் பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், அழகிரி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என ஸ்டாலின் விரும்புவதை பா.ஜ.க. தலைமையின் கவனத்துக்கு உளவுத்துறையினர் கொண்டுவந்துள்ளனர். அதனை வைத்து சில காய்களை நகர்த்தியிருக்கிறோம். இதன் பிறகு ஏற்பட்டிருக்கும் நட்பின் அடிப்படையில் தான் அமித் ஷாவை அழைத்தது தி.மு.க.!
குறிப்பாக, தி.மு.க.வின் சீனியர்களோடு தொடர்பில் இருக்கும் பா.ஜ.க. தலைமை, தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்படாமல் போனால் தி.மு.க.வை பலகீனப்படுத்தும் அரசியலை கையிலெடுப்போம் என்றும், அதற்கு ரஜினி மற்றும் அழகிரியைப் பயன்படுத்துவோம் என்றும் சொல்லி வருகிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இப்போது தி.மு.க. மறுத்து வந்தாலும், விரைவில் கூட்டணியை உறுதிப்படுத்தும். அதற்கேற்பத்தான் சில அழுத்தங்களை தி.மு.க.வுக்கு கொடுத்து வருகிறது பா.ஜ.க.!''’ என்கிறார்கள்.
வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லிக்கு சென்றதை பரஸ்பரம் மரியாதை சார்ந்தது என நினைக்கும் தோழமைக்கட்சிகள், வாஜ்பாயின் அஸ்தி சென்னை வந்தபோது அதனை வழிபட பா.ஜ.க. அலுவலகத்துக்கு சென்றதையும், கலைஞருக்கான புகழ் வணக்க நிகழ்வுக்கு அமித் ஷாவை அழைத்ததையும் ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம் என்றே கருதுகின்றன. அதே நேரத்தில் வாஜ்பாய்க்கான புகழஞ்சலி கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லிம் லீக் என மதவாத எதிர்ப்பு கட்சிகள் அனைத்தும் பங்கேற்க சம்மதித்திருப்பதை தி.மு.க. சுட்டிக்காட்டுகிறது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க.வும் சம்மதித்தது. இதனால் அ.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணியா என சந்தேகம் கிளப்ப முடியுமா என்கிறார்கள் தி.மு.க.வினர். தி.மு.க.-பா.ஜ.க. இரு தரப்பிலுமான பரஸ்பர நினைவேந்தல் கூட்டணியாக மாறுமோ என்ற சந்தேகம் தோழமைக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அமித் ஷா வருகை தவிர்க்கப்பட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பங்கேற்பார் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சித் தலைவருக்கு பதில் மத்திய அமைச்சர் பங்கேற்பார் என்பது அரசியல் உஷ்ணத்தை தவிர்க்கும் முயற்சி என்றாலும், தி.மு.க.-பா.ஜ.க. தரப்பில் அடுத்த கட்ட நகர்வுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அமித் ஷாவுக்கு பதில் கட்காரி என்ற தகவல் சோனியா கவனத்துக்கும் காங்கிரஸ் தரப்பில் உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வை பொறுத்தவரை தங்களுடன் தி.மு.க. கூட்டணி அமைக்காவிட்டாலும் காங்கிரசை சேர்க்காமல் கழற்றி விட வேண்டும் என்ற அஜெண்டா உள்ளது. அதற்காக, கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தவும் ரெடியாக உள்ளது.
-இரா.இளையசெல்வன்