முதல்வர் வழங்கிய பொங்கல் பரிசுப் பொருட்களைக் கொண்டு மகிழ்ச்சியுடன் பொங்கல் வைத்த இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்வாசிகள், அதனைக் குடியுரிமை பொங்கல் எனக் கொண்டாடியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 106 முகாம்களின் நீண்டகால கோரிக்கை... இந்தியக் குடியுரிமை. இந்த கோரிக்கை வைப்பதற்கான பிரதான காரணம், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கையில் இருந்து திரும்பிய தமிழர்களை அகதி எனச் சொல்லி, உயர்கல்வி கிடைப்பதில் சிக்கல், அரசு வேலை வாய்ப்பு கிடையாது, தனியார் துறையிலும் வேலைகள் பெறுவதில் பெரும் சிரமம், அடிப்படை வசதிகளைக் கூட தர மறுக்கிறார்கள் என்கிறார்கள். இதற்காக ஜனநாயக முறைப்படி பல ஆண்டுகளாக கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.

oo

Advertisment

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பின், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றினார். 2021 ஆகஸ்ட் 27ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களின் நலன் காக்க, 317 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மறுவாழ்வுத் துறையினருக்கு ஆலோசனை வழங்கி, பணிகளை விரைந்து நிறைவேற்ற, தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்களின் கூடுதல் தேவைகளை அறிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி வேலூர் மாவட்டம் மேலமொண வூர் முகாமில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், நாடாளு மன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட் டில் உள்ள 106 முகாம்களிலும் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். அந்த திட்டங்களை முறையாக நிறை வேற்று வதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்காக டிசம்பர் 29-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோ சனைக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் அமைச்சர் மஸ்தான், துணைத்தலைவர் எம்.பி. கலாநிதி வீராசாமி, முதன்மைக் குழு உறுப்பின ரான சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, உறுப்பினர் செயலரான மறுவாழ்வுத் துறை ஆணையர், பல்வேறு துறை அதிகாரிகள், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் அறிவித்தபடி முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள், அடிப்படைக் கட்டமைப்புகள், மாத உதவித்தொகை, கல்வி உதவி, உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான நிதி, துணிமணி, சமையல் பாத்திரங்கள், கேஸ் இணைப்பு உள்ளிட்ட 12 திட்டங்களின் செயல்பாடுகளும் தொடங்கிவிட்ட நிலையில், அவை ஒவ்வொரு முகாமிலும் எந்த அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மறுவாழ்வுத் துறை விரிவான அறிக்கையை தந்தது. மேலும் முகாமுக்கு வெளியே வசிக்கும் இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடு கள் -நெருக்கடிகள் ஆகியவையும், சிறப்பு முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவைப்படும் சட்ட வாய்ப்புகள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. குடியுரிமை குறித்து ஒன்றிய அரசிடம் எடுத்துரைத்து, முறையான ஆவணங்களுடன் குடியுரிமைப் பெறுவதற்கான சட்டவழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், அதற்குரிய தொடர் முன்னெடுப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி விளக்கி, தான் அதனைச் செய்வதாக கூறினார்.

pp

Advertisment

நமது பொறுப்பாசிரியரும், ஆலோசனைக்குழு உறுப்பினருமான கோவி.லெனின், தான் நேரில் சென்று பார்வையிட்ட முகாம்கள் குறித்தும் அங்குள்ள மக்களின் கோரிக்கைகள் குறித்தும் விளக்கி, விரிவான அறிக் கையை அமைச்சரிடம் அளித்தார். இலங்கைத் தமிழர் நலனில் அக்கறை காட்டும் அமைச்சர் மஸ்தான், "நான் 1983-லிருந்து ஈழத்தமிழர் உரிமை களுக்கான போராட்டங்களில் பங்கேற்றி ருக்கிறேன். பலமுறை சிறை சென்றிருக் கிறேன். நமது முதல்வர் தளபதியும் சிறை சென்றவர்தான். 4 கைதிகளை ஒரு அறையில் 15 நாட்கள் அடைத்து வைத்தால் இடநெருக்கடி எப்படி யிருக்கும் என்பதை நாங்கள் அறி வோம். முகாம்களில் நம் தொப்புள் கொடி உறவான அம்மக்கள் பல ஆண்டுகளாக அப்படித்தான் சின்னஞ் சிறிய வீடுகளில் இருக் கிறார்கள். அவர்களுக்குத் தனி வீடு கட்டித் தரவேண்டும் என்று முதல்வரிடம் சொன்னேன். இட வசதியுடன் கழிவறை வசதியுடன் கூடிய வீடுகளைக் கட்டித் தர முதல்வர் ஆணையிட்டிருக்கிறார், இலங்கைத் தமிழர் நலனைக் காப்பது நமது கடமை அதற்கான பணிகளை இணைந்து செய்வோம்'' என்றார்.

இந்நிலையில்தான் திருச்சி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், சிவகங்கை, மதுரை என தமிழ்நாட் டின் பல மாவட்டங்களிலும் உள்ள முகாம்களில் குடியுரிமை பொங்கல் கொண்டாடப்பட்டது. இதுபற்றி திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் முகாமை சேர்ந்தவர்கள் கூறுகையில், "எங்கள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்திய குடியுரிமை வேண்டும் என்பதே. இதற்கு ஆதரவு திரட்ட கடந்த காலங்களில் அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள், மத்திய மாநில அரசு அதிகாரிகள் முதற்கொண்டு அனைத்து தரப்பினருக்கும் தெரியப் படுத்தியுள்ளோம். ஆகஸ்டு 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தில் அனை வரும் இந்திய குடியுரிமைக்கான உறுதிமொழி ஏற்றோம். இப்போது குடியுரிமை பொங்கல் கொண்டாடி யுள்ளோம். இந்திய இறையாண் மைக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள். எங்களுக்கான அடிப்படை மனித உரிமையை பெற முயல்கிறோம். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது, இந்திய அரசிடம் பேசி குடியுரிமை பெற்றுதருவார் என முழுமையாக நம்புகிறோம்'' என்றார்கள்.