ஒருவரிக் கதை உண்டாக்கிய சாதனை!
திரைவானிலே ஒப்பனை முகங்களும், ஓய்வறியா என் பேனாவும்!
விடியல் வந்தபோது எனக்கு வித்தைகள் தெரியாது!
அனைத்தையும் கற்று முடித்தபோது; ‘புதியவர்கள்தான் வேண்டும்’ என்கிற குரல் எங்குமே ஒலித்தது.
எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாதவனாய், ஒரு சர்க்கஸ் கோமாளியைப்போல; சினிமாவில் ஒரு நீண்ட நெடிய பயணத்திற்குச் சொந்தக்காரன் ஆகிவிட்டேன்.
ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ‘இந்தியாவை உருவாக்கியதுபோல; தற்போதைய திரையுலகிலும் ‘PAN INDIA’ (PRESENCE ACROSS NATION) திரைப்படங்கள் தயாராகின்றன.
முன்பெல்லாம் ‘கலை, கலாச்சாரம், மொழி, பண்பாடு ஆகியவை திரையிலே தெரியவேண்டும்’ என்று திரையுலகப் பெரியோர்கள் சொல்லுவார் கள். தற்போது எத்தனை நாட்களில் எத்தனை கோடி வசூல்?’என்பது மட்டும்தான் குறிக்கோளாக இருக்கிறது. சினிமாவும் ஒரு வியாபாரம்தான். அதனால்தான் கார்ப்பரேட்களும் சினிமாவை கபளீகரம்பண்ணிவிட்டார்கள். விந்தையான மனிதர்களின் சந்தையாகிவிட்டது சினிமா.
முன்னர் ’பம்பாயில் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் தயாரித்த இந்திப் படங்களை வெளியிடக் கூடாது’ என தடுத்து நிறுத்தினார்கள்… பால் தாக்கரேவும், அவரது சிவசேனா இயக்கத் தொண்டர்களும்.
உடனே ‘"தமிழ்நாட்டில் இந்திப்படங்களை வெளியிடக் கூடாது'’ என இந்தி எதிர்ப்புப் போராளிகள் போராட்டம் நடத்தினார்கள்.
இன்றைய நிலை போற்றுதலுக்குரியது. சினிமா -மாநில எல்லைகளைக் கடந்து வெற்றி கண்டிருக்கிறது. மொழி களை இணைத்து, பலமொழிக் கலைஞர்களும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஒரே படத்தில் பல மொழிகளும் பேசப்படுகின்றன.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் பல மொழிக் கதைகளை எழுதும் திரைக் கதாசிரியன் ஆகிவிட்டேன்.
1968-ஆண்டு வாக்கில் "பிக்ரேமோத்தி'’என்ற கதையை இந்தியில் எழுதினேன். ஜிதேந்திரா நாயகனாக நடித்தார்; இன்றைய பிரபல இந்தி நடிகை கரீனாகபூரின் தாயார் பபிதா நாயகியாக நடித்தார்.
பலநூறு கதைகளை நான் எழுதியிருந்தாலும், எனக்குப் பிடித்த மூன்று கதைகளைப் பற்றி முதலிலே எழுத முற்படுகிறேன். என் சொந்த வாழ்க்கைக் கதையை இடையிடையே சொல்லுகிறேன். முதலில் அந்த மூன்று கதைகள் படமாகும்போது நிகழ்ந்த சுவையான சம்பவங்களைச் சொல்லு கிறேன்.
அந்த மூன்று திரைப்படங்கள்:
1. மைக்கேல்ராஜ், 2. மதுர கீதம், 3. நீ தொடும்போது அண்மையில் தமிழ் சினிமா வின் முன்னோடிகளில் ஒருவரான தயாரிப்பாளர் -விநியோகஸ்தர் டி.ராமானுஜம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் பேசும்போது, “"ஏவி.எம்.மின் செல்லப்பிள்ளை வி.சி.குகநாதன்' என்று சில விஷ யங்களைச் சொன்னார் கமல்.
நான் ஏவி.எம்.மெய்யப்ப செட்டியார் அவர்களை ‘"அப்பச்சி'’ என்றுதான் அழைப்பேன். 1967-ஆம் ஆண்டு, அப்பச்சியை முதன் முதலாகச் சந்தித்தது முதல், 1979-ஆம் ஆண்டுவரை… அதாவது… அப்பச்சி இறக்கும்வரை… நான் ஏவி.எம்.மின் செல்லப்பிள்ளையாக இருந்தது உண்மைதான்.
"நீங்கதானா எம்.ஜி.ஆர். படத்துக்கு கதை எழுதினது?''”
"ஆமாங்க''”
ஆனாலும் வியப்பு மாறாமல் என்னைக் கூர்ந்து கவனித்தார் அப்பச்சி.
காரணம்... …
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே எம்.ஜி.ஆருக்கு கதை எழுதியிருந்தேன்.
ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பதற்கு ஏற்ற கதை கேட்கத்தான் என்னை அழைத்திருந்தார்கள்.
நான் சொன்ன இரண்டு கதைகளையுமே அப்பச்சி அக்ரிமெண்ட் போட்டு வாங்கிக் கொண் டார். அது தவிர, ஏவி.எம்.மின் கதை இலாகாவிலும் கதாசிரியனாக மாதச் சம்பளத்தில் என்னை; நான் கேட்காதபோதே, என் திறமையில் நம்பிக்கை வைத்து இணைத்துக்கொண்டார். என்னை தயாரிப்பாளர் என்கிற உயர்ந்த நிலைக்கு உயர்த்திவிட்டவரும் அப்பச்சி அவர்கள்தான்.
ஏவி.எம்.மில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் என்னை ‘ஏவி.எம்.மின் செல்லப் பிள்ளை’ என்று சொல்லுவார்கள். "பராசக்தி'’ பட இயக்குநர்களான கிருஷ்ணன்-பஞ்சு இருவரும் கூட என்னை அப்படித்தான் அழைப்பார்கள்.
ஏவி.எம். ஸ்டுடியோவிற்குள் எனக்கென்று தனியாக ஒரு அலுவலக அறையையும் தந்திருந்தார் அப்பச்சி.
காலங்கள் மாறியது; காட்சிகளும் மாறியது!
ஏவி.எம். நிறுவன தயாரிப்புப் படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.முத்துராமன் இயக்கி வந்தார். நான் தெலுங்கு திரையுலகில் பிஸியாகிவிட்டேன்.
இடையிடையே வேறு இயக்குநர்கள் இயக்கிய "பாட்டி சொல்லை தட்டாதே', "அம்மா' போன்ற படங்களில் பணியாற்றும் வாய்ப்பை ஏவி.எம். சரவணன் அவர்கள் எனக்குத் தந்தார்கள்.
அப்படியொரு சமயம் ஏவி.எம்.மிற்கு ரஜினி சார் கால்சீட் கொடுத்திருந்தார். அந்த தேதிகள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் கதை கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நான் போயிருந்தேன். அப்போது… "ரஜினி சாருக்கு ஏற்ற மாதிரி கதை வேணும், உங்ககிட்ட ஏதாவது ஐடியா இருந்தா சொல்ல முடியுமா?'' என சரவணன் கேட்டார்.
நான் ஒருவரியில் கதை ஒன்றைச் சொன்னேன். அவருக்குப் பிடித்துப்போனது.
"இந்த ஸ்டோரி லைனை திரைக்கதையாக எழுதிக்கொண்டு வரமுடியுமா'' என்றார்.
அதன்படி எழுதிக்கொண்டு போனேன். அந்தக் கதை படமாகி வெள்ளிவிழா கண்டது. அது வரை வெளியான ரஜினி படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக அந்தப் படம் திகழ்ந்தது.
அந்த வசூல் சாதனை விபரம் என்பது ஏவி.எம். நிறுவனம் சிலாகித்துச் சொன்ன புள்ளிவிபரம்.
ரஜினியின் அந்த வசூல் சாதனைப் படம்… "மனிதன்'.
இதற்கிடையில் தெலுங்கு சினிமாவின் மிகப் பெரும் தயாரிப்பாளரான ராமாநாயுடு அவர்கள் என்னை "மதுரகீதம்' படம் மூலம் இயக்குநராக்கி னார். வெற்றிகரமான கதாசிரியராகத் திகழ்ந்த நான் வெற்றிகரமான இயக்குநராகவும் ஆனேன்.
விஜயகுமாரையும், ரஜினிகாந்த்தையும் வைத்து, எனக்குப் பிடித்த ஒரு நோக்கத்திற்காக நான் எழுதி இயக்கி ஒரு படத்தை தயாரித்தேன். தயாரிப்பு செலவுக்கு நான் ஃபைனான்ஸ் கேட்டிருந்த இடத்தில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பை ஒரே செட்யூலில் முடிக்க விரும்பினேன். அத்துடன் எனது நோக்கமும் நிறைவேற வேண்டும் என்பதால் மிகக்குறைந்த விலையான 5 லட்ச ரூபாய்க்கு அந்தப் படத்தின் முதல் பிரதி எனப்படும்... அதாவது… சென்ஸார் செய்யப்படுவதற்கு முந்தைய நிலையான ஃபர்ஸ்ட் காப்பியை விற்றேன். அந்தப் பணத்தில் படத்தை எடுத்து முடித்தேன். 5 லட்சத்திற்கு நான் விற்ற என் படம் 50 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலித்தது.
அந்தப் படம்...
(திரை விரியும்...)