(83) அது ஒரு பொற்காலம்!
"என் முதல் தயாரிப்பில் ஜெமினி'
"மிஸ்ஸியம்மா', "கல்யாணப் பரிசு', "தேன் நிலவு', "கைராசி' போன்ற பல படங்களில் காதல் நாயகனாக நடித்து "காதல் மன்னன்' என ரசிகர்களால் பாராட்டப்பட்டவர் ஜெமினிகணேசன். இவர் படங்களை கல்லூரி மாணவிகள், பெண்கள் அதிகமாக விரும்பிப் பார்ப்பார்கள். தமிழ்த் திரையுலகில் பல வருடங்கள் மூவர், மக்களுக்கு அதிகம் பிடித்தவர்களாக பவனிவந்தனர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன்!
ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகிய இரு இயக்குநர்களின் அதிகமான வெற்றிப் படங்களில் ஜெமினிகணேசன் நடித்திருக்கிறார். "கற்பகம்', "பணமா பாசமா?', "குறத்தி மகள்' போன்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் வெள்ளிவிழா படங்களில் இவரே நாயகன்.
"புதிய பூமி'யில் என்னை திரையில் கதாசிரியராக அறிமுகப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். நான் முதலில் வசனம் எழுதிய படமான "எங்க மாமா'வில் நடித்தவர் சிவாஜிகணேசன். என் முதல் தயாரிப்பான "சுடரும் சூறாவளியும்' படத்தில் நடித்தவர் ஜெமினிகணேசன். ஆக... திரையுலகில் முடிசூடா மன்னர்களாக பவனிவந்த மூவரோடும் என் முதல் மூன்று படங்களும் அமைந்தது என் அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். என் இளம்வயதில் இந்த மூவரின் பல படங்களை வியந்து பார்த்தவன் நான்.
எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன்', சிவாஜியின் "உத்தமபுத்திரன்', ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்' ஆகிய படங்களை எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்ற கணக்குக்கூட எனக்குத் தெரியாது.
இதே மூவரும் என் முதல் மூன்று படங்களிலும் நடிப்பார்கள் என நான் கனவுகூட கண்டதில்லை. ஜெமினியோடு ஒரே ஒரு படம்தான், ஆனால் அவர் மறையும் நாள்வரை என் மீது மிகுந்த பாசத்துடன் பழகிவந்தார். அவர் மகள் டாக்டர் கமலா செல்வராஜ், என் மனைவிக்கு டாக்டர். அதனால் நானும் என் மனைவி ஜெயாவும் டாக்டரைப் பார்க்கப்போவோம். என் மனைவி, ஜெமினி ஸாரின் மகளாக நடித்தவர், அதனால் அவர் மிகுந்த அன்போடும், பாசத்தோடும் பழகுவார். தன் மகளான டாக்டரிடம்... "இவளை நல்லபடியா ட்ரீட்பண்ணி அனுப்பு' என அடிக்கடி சிபாரிசு பண்ணுவார். என்னிடம் பலமணி நேரம் பேசுவார். His behaviour was totally different from others.என் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமானது. இன்னொருவரின் கையெழுத்தை ஜெமினி அதே மாதிரி போடுவார். இதைப் பயன்படுத்தி பல பணக்காரங்க "செக்'குகளை (ஈட்ங்வ்ன்ங்) திருடிவந்து, இவரிடம் கையெழுத்து வாங்கி வங்கியில் மாற்றி, பணத்தில் ஒரு பங்கை இவரிடம் தருவான் வில்லன். இந்த சட்டவிரோத செயலில் மாட்டி ஜெயிலுக்குப் போவார் ஜெமினி. அந்த சமயம் இவரது குழந்தைகள், மகனும் மகளும் வேறு ஊரில் போய் வாழ்கிறார்கள். வருடங்கள் கழித்து ஜெமினி வெளியே வர, குழந்தைகள் எங்கே எனத் தெரியாது. ஆனால் வில்லன் வாசு இவரை அழைத்துப் போய், மறுபடி அதே தொழிலை செய்ய வைக்கிறார். இந்தச் சிக்கலிலிருந்து நாயகன் எப்படி மீண்டார்? மறுபடி தன் குடும்பத்துடன் இணைந்தாரா என்பதே "சுடரும் சூறாவளியும்' கதை.
அந்த காலகட்டத்தில் என் வயதோ இருபது. நல்ல படங்களை விருதுக்கு அனுப்பலாம் என்பது எனக்குத் தெரியாது. அப்படி அந்தப் படம் விருதுக்கு அனுப்பப் பட்டிருந்தால் நிச்சயமாக ஜெமினி ஸாருக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கும். அதன் பின்னால் ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றவர்கள் வரவால்... நான் மீண்டும் ஜெமினி ஸார் பக்கம் போகும் வாய்ப்பு வரவில்லை. ஆனால் அப்படி ஒரு தொழில் அக்கறை, நேரம் தவறாமை, நட்புணர்வு கொண்டவரைப் பார்ப்பது அரிது. அந்த மூவர் காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலமே!
"முத்துராமனுக்கு உதவும் வாய்ப்பு'
நான் அடிக்கடி வெங்கட்நாராயணா ரோட்டிலுள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலுக்குப் போய் சிறிது நேரம் அமர்ந்து தியானம் பண்ணுவேன். சில வருடங்களுக்கு முன்பாக இதேபோல் தினமும் போய் வந்தபோது... ஒருவர் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார். ஒருநாள் அவர், என்னை அருகே அழைத்து "நீங்கள் குகநாதன்தானே?'' என்று கேட்டார். "ஆமா'' என்றேன். "நான் எழுபதுகளிலே நடிகர் முத்துராமனிடம் மேனேஜராக இருந்தேன். அப்போதெல்லாம் அவர் ரொம்ப பிஸி. ஆனாலும் என்னைக் கூப்பிட்டு, "குகநாதன் ஸார் எப்ப வந்து என் கால்ஷீட் கேட்டாலும் மறுக்காமல் அவர் கேட்கிற தேதிகளைக் குடுத்திடுங்க' என்று சொல்லியிருந்தார்.
நான் ஆச்சரியப்பட்டேன். "ராணி யார் குழந்தை?', "தங்கைக்காக', "மஞ்சள் முகமே வருக', "கனிமுத்து பாப்பா', "அனாதை ஆனந்தன்', "பெத்த மனம் பித்து', "அன்புத் தங்கை', "தெய்வக் குழந்தைகள்' எனப் பல படங்கள் அவரோடு பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் சம்பளங்கள் குறைவு. அந்த நிலையில் முத்துராமன் என்னிடம், "அடுத்த மாதம் என் மகளோட திருமணத்தை வைத்திருக்கிறேன். பணம் வரவேண்டிய கம்பெனிகளில் பணம் வரவில்லை'' எனக் கவலையோடு சொன்னார். அதற்குள் "ஷாட் ரெடி' என உதவி இயக்குநர் வந்து சொல்ல... எழுந்து போய்விட்டார்.
நான் மறுநாள் காலை அவர் ஷூட்டிங் கிளம்பும் நேரத்துக்கு முன்னால் அவர் வீட்டுக்குப் போனேன். உள்ளேயிருந்து ஹாலுக்கு வந்து என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், "என்ன ஸார்... இவ்வளவு காலையிலே'' எனக் கேட்க, "சும்மா இந்தப் பக்கம் வந்தேன். உங்களையும் பார்த்துட்டுப் போகலாம்னு நினைச்சேன். ஆமா... கல்யாணத்துக்கான பணம் கிடைச்சிடுச்சா?'' எனக் கேட்டேன். "இல்லை'' என்றார். அவர் கையில் ஒரு பெரிய கவரை திணித்து, "தேவையான பணம் இதிலே இருக்கு'' என்றேன். "நீங்க எந்த பாக்கியும் வைக்கலையே'' என்றார். "இனி எனக்கு நடிக்கப்போற படங்களிலே கழிச்சுக்கிறேன்'' என்றேன். இந்த நிகழ்வு அவர் மனதை மாத்தியிருக்கு...'' என அந்த வயதான மேனேஜர் கோவிலில் சொன்னார். எனக்கு ஒரு மனநிறைவு!
"சிவாஜி வீட்டுக்கு லஸ்தர் விளக்கு!'
ஏ.வி.எம்.மில் நம்பியார் வீட்டுக்காக ஒரு பெரிய அரங்கம். அதில் பல அடுக்கு லஸ்தர் விளக்குகள், ஈட்டியோடு கிளாடியேட்டர்ஸ் சிலைகள், மிக விலையுயர்ந்த கார்ப்பெட்டுகள், சோபாக்கள். ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் இருந்த ஒரு பங்களா, "மதன மாளிகையில்' பாடல் காட்சி தவிர வேறு எங்கேயும் பிரமாண்டம் காட்ட முடியாது. ஆகவே இது இரண்டையும் நானேகூட ஆர்ட் டைரக்டரோடு அமர்ந்து பார்த்துக்கொண்டேன்.
"ஷூட்டிங் குக்கு உள்ளே வந்த சிவாஜி, லஸ்தரைப் பார்த்து "இதை எங்கே பிடிச்சே குகா'' எனக் கேட்டார்.
"ஹைதரா பாத்திலேயிருந்து வரவழைச்சேன்''னு சொன்னேன்.
"என் பங்களா முன்வராந்தாவில் இப்படி ஒண்ணு இருந்தா அழகாயிருக்கும்'' எனச் சொன்னார்.
"ஆமா ஸார்...'' எனச் சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட்டேன்.
அந்த ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த மறுநாள்... விமானத்தில் ஹைதராபாத் போனேன். பல லஸ்தர் கடைகளில் தேடி பெரிய நாலு அடுக்கு இளஞ்சிவப்பு லஸ்தரை பதினைஞ்சாயிரத்துக்கு வாங்கி, இன்னொரு கிளாடியேட்டரோடு வெண்கலச் சிலையும் வாங்கிக் கொண்டு வந்து சிவாஜி ஸார் பங்களாவில் மாட்டிவிட்டேன். பணம் தர முயற்சித்தார். வாங்க மறுத்துவிட்டேன். சிவாஜி ஸாரும், அவர் தம்பி சண்முகம் ஸாரும் எனக்குச் செய்த நல்லதுகள் முன்னால் இது மிக சாதாரணம்.
(திரை விரியும்)
படம் உதவி: ஞானம்