(82) அரசியல் வலையில் ஜெய்சங்கர்!
மக்கள் மனிதர், மகத்தான மனிதர். இவரது முதல் படத்திற்கு முன்பிருந்தே நாங்கள் நண்பர்கள். அதைப் பற்றியெல்லாம் முன்பே எழுதியுள்ளேன். இவரை "வெள்ளிக்கிழமை நாயகன்' என திரை யுலகில் அழைப்பார்கள். அதற்கு இரண்டு அர்த்தமுண்டு. ஒரு அர்த்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவரது ஏதாவது ஒரு படம் வெளியாகும். அத்தனை படங்களில் நடிப்பவர் என்று ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தம், முதல் வெள்ளி ரீலீஸ் ஆகும் படம், அடுத்த வெள்ளி தியேட் டரில் இருக்காது. இந்த மனிதரின் காலத்தில் பல தயாரிப்பாளர்கள் புதிது புதிதாக உரு வானார்கள். சாதாரண டென்னீஷியன்ஸ் கூட இவரால் தயாரிப்பாளர்கள் ஆனார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள், குறைந்த பட்ஜெட்டில் இவர் படங்களை எடுக்க முடியும். இவரால் எந்தப் படமும் தாமதமாகாது. ரொம்ப சாமர்த்தியமா, தன்னோடு நடிக்கும் மற்ற நடிக-நடிகையரிடம் இவரே பேசி... தேதி, நேரத்தை யாருக்கும் பிரச்சினை வராமல் மாற்றி ஷூட்டிங்கை நடித்துக் கொடுத்துவிடுவார்.
"ஜெய்சங்கரை வச்சு படம் எடுத்தேன்... நஷ்டமாப் போச்சு' என எந்தத் தயாரிப்பாளரும் சொல்லி நான் கேட்டதேயில்லை. எந்த நாளும் பணம் குடுக்கலேங்கிறதுக்காக ஜெய்சங்கர் ஷூட்டிங் வரவில்லை என்று எந்த த
(82) அரசியல் வலையில் ஜெய்சங்கர்!
மக்கள் மனிதர், மகத்தான மனிதர். இவரது முதல் படத்திற்கு முன்பிருந்தே நாங்கள் நண்பர்கள். அதைப் பற்றியெல்லாம் முன்பே எழுதியுள்ளேன். இவரை "வெள்ளிக்கிழமை நாயகன்' என திரை யுலகில் அழைப்பார்கள். அதற்கு இரண்டு அர்த்தமுண்டு. ஒரு அர்த்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவரது ஏதாவது ஒரு படம் வெளியாகும். அத்தனை படங்களில் நடிப்பவர் என்று ஒரு அர்த்தம். இன்னொரு அர்த்தம், முதல் வெள்ளி ரீலீஸ் ஆகும் படம், அடுத்த வெள்ளி தியேட் டரில் இருக்காது. இந்த மனிதரின் காலத்தில் பல தயாரிப்பாளர்கள் புதிது புதிதாக உரு வானார்கள். சாதாரண டென்னீஷியன்ஸ் கூட இவரால் தயாரிப்பாளர்கள் ஆனார்கள். குறிப்பிட்ட காலத்துக்குள், குறைந்த பட்ஜெட்டில் இவர் படங்களை எடுக்க முடியும். இவரால் எந்தப் படமும் தாமதமாகாது. ரொம்ப சாமர்த்தியமா, தன்னோடு நடிக்கும் மற்ற நடிக-நடிகையரிடம் இவரே பேசி... தேதி, நேரத்தை யாருக்கும் பிரச்சினை வராமல் மாற்றி ஷூட்டிங்கை நடித்துக் கொடுத்துவிடுவார்.
"ஜெய்சங்கரை வச்சு படம் எடுத்தேன்... நஷ்டமாப் போச்சு' என எந்தத் தயாரிப்பாளரும் சொல்லி நான் கேட்டதேயில்லை. எந்த நாளும் பணம் குடுக்கலேங்கிறதுக்காக ஜெய்சங்கர் ஷூட்டிங் வரவில்லை என்று எந்த தயாரிப்பாளரும் சொல்லிக் கேட்டதில்லை. ஒத்துழைப்பு தருவதில் இவருக்கு நிகர் யாருமே இல்லை. எப்போதும் ஜாலியாகவே இருப்பார். எல்லோரிடமும் ஏற்றத் தாழ்வில்லாமல் பழகுவார். தொழிலாளர்களின் தோள்களில் சாதாரணமாக கை போட்டுப் பேசுவார். இவர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தால் அங்கே கலகலப்புக்குப் பஞ்சமே இருக்காது. "எனக்கு அது வேணும், இது வேணும்'னு அடம்பிடிக்கவே மாட்டார். தயாரிப்பாளருக்கு பயங்கர ஒத்துழைப்பு கொடுப்பார். யாருக்கும் தெரியாமல் பலருக்கு பண உதவி செய்வார்.
எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி அரம்பித்த பின்னால்... பல தயாரிப்பாளர்கள் இவரை நோக்கி வர ஆரம்பித்தனர். இவரை வைத்து கலைஞர் படங்கள் எழுத, எடுக்க ஆரம்பித்தார். இது இவருக்கு வேறு ஒரு கலரை கொடுத்தது. "வண்டிக்காரன் மகன்', "ஆடு பாம்பே' போன்ற கலைஞர் படங்கள் இவரை வேறு உயரத்துக்கு தயார்படுத்தியது. அசோகன், இவரோடு பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், ஜெய்சங்கர் பட பூஜைகளுக்கு, விழாக்களுக்கு "வருங்கால முதல்வரே வருக!' என்றெல்லாம் பெரிய பேனர்கள் வைக்க ஆரம்பித்தனர். அவரைச் சுற்றி கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்தது. கலைஞர் கட்சிக்காரர்கள் எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்புக் காட்ட ஜெய்சங்கரை தூக்கிப்பிடிக்க ஆரம்பித்தனர். அசோகனும் ஜெய்சங்கரை புகழ்ந்து பேச ஆரம்பித்தார். இங்குதான்... ஜெய்சங்கருக்கே தெரியாமல் கலைஞர் படங்கள் மூலம் இவர் இமேஜ் மாறுபட ஆரம்பித்தது. மக்கள் மத்தியிலும் அது பிரதிபலித்தது.
ஆனால் ஜெய்சங்கர் இது எதிலும் தலையிடவும் இல்லை. அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவும் இல்லை. நான் பார்த்த இன்னும் ஓர் முக்கியமான விஷயம்... எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, திரை யுலகிலிருந்து அவரைப் போய் சந்தித்து மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்த முதல் நடிகர் ஜெய்சங்கர்தான். அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆரும் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். மக்கள் மத்தியிலும் இந்த செயலால் ஜெய்சங்கருக்கு ஆதரவு பெருகியது. படங்களின் எண்ணிக்கையும் அதிகமானது. அதனால்தான் கலைஞரின் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஜெய்சங்கருக்கு வந்தது.
இவரது படங்கள் வெளியாகும்போது தியேட்டர்களில் தி.மு.கவின் கறுப்பு சிவப்புக் கொடிகளைக் கட்ட ஆரம்பித்தனர். அவருக்கு ஒரு கட்சி சாயம் மறைமுகமாகப் பூசப்பட்டது. இது முதலில் வரவேற்கத்தக்க மாதிரி பேசப்பட்டது. ஆனால் நீண்ட நாட்கள் அது நீடிக்கவில்லை.
அசோகன் போன்றவர்கள் ஜெய்சங்கரை அடுத்த மக்கள் கலைஞர், வருங்கால முதல்வர் என்றெல்லாம் பேச ஆரம்பித் தனர். மாடக்குளம் தர்மலிங்கம் போன்ற எம்.ஜி.ஆர். விசுவாச ஸ்டண்ட் மாஸ்டர்கள், ஜெய்சங்கர் படங்களில் வேலை செய்ய ஆரம்பித்தனர். எம்.ஜி.ஆர். படங்களில் நடித்த சில நாயகிகள், நடிக -நடிகையர், ஜெய்சங்கர் படங்களில் நடித்தனர். ஒருசிலர் இவரே கலையுலகின் அடுத்த எம்.ஜி.ஆர். எனவும் பேச ஆரம்பித்தனர்.
ஆனால் ஜெய்சங்கர் அதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை. அப்படி ஒரு எண்ணத்தை பிரதிபலிக்கவுமில்லை. கூடாநட்பு கேடா முடியும் என்பதுபோல்... ஒருசில நண்பர்கள் வட்டம், அவரை சில பழக்க வழக்கங்களுக்கு ஆளாக்கிவிட்டது. அவரின் இளமையும், சுறுசுறுப்பும், சிரித்துப் பழகும் அற்புதமான பண்பும்... படங்களின் எண்ணிக் கையும் பல நாயகிகளை கவர்ந்திழுத்தது.
இதையெல்லாம் விட இவர் குடும்பம் அருமையான குடும்பம். இரண்டு மகன்கள், இவரை நேசித்த இரண்டு தம்பிகள், இவரது தோட்டம். பல தடவை இவர் வீட்டுக்குப் போயிருக்கிறேன். படப்பிடிப்புகளுக்கும் அழைத்துப்போவார். ஒருதடவை ஏற்காடு ஷூட்டிங் போனபோது, என்னையும் அழைத்துப்போய்... தன் அறையிலேயே தங்கவைத்துக் கொண்டார். ஆரம்ப காலங்களில் எனக்கு இதெல்லாம் புது அனுபவங்கள். அவரின் நட்பு மனநிறைவைத் தந்தது.
நான் பலமொழிப் படங்களில் வேலை செய்ய ஆரம்பித்ததும், அடிக்கடி ஹைதரா பாத்தில் போய் தங்கும் நிலை வந்ததால் ஜெய்சங்கரோடு பழகும் நேரம், பார்க்கும் நேரம் குறைந்தது. "தனிக்காட்டு ராஜா' என்ற என் படத்தில் நடிக்க வந்தபோது, அவர் உருவம் மாறியிருந்தது. அவர் குணம் மட்டும் மாறவே யில்லை. மங்களூர், ஊட்டி, சிக்மங்களூர், கேரளா என பல இடங் களில் படப்பிடிப்பு. அப் போதுதான் அவர் தேவை யற்ற இரு பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால் அவரது அற் புதமான குணம் மாறவே யில்லை. அவரால் எப் போதும் படப்பிடிப்புக்கு இடையூறு வந்ததே இல்லை. அவர் ஒரு பிராமணர் என்பதை, சத்தியமாகச் சொல்கிறேன்... என்றுமே நான் உணர்ந்ததே இல்லை.
உயர்குணத்தோன், நட்பின் இலக்கணம், ஈகை செய்யும் வள்ளல், குடும்ப பாசம் நிறைந்தவர், "என்பும் உரியர் பிறர்க்கு' என வாழ்ந்தவர், இன்னும் எவ்வளவோ சொல்லலாம்... சந்தன மரம்போல் பிறர்க்கு நறுமணம் ஈந்து வாழ்ந்த ஜெய்சங்கர், கூடா நட்பினால் குறைந்த வயதில் போய்விட்டவர். அவர் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்... பேசியிருக்கிறேன். அவரின் நற்பண்புகள் இவர்களிடமும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். மறக்க முடியாத மனிதர்கள் வரிசையில்... கலையுலக மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் ஒருவரே!
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்