(80) எம்.ஜி.ஆர். விதிவிலக்கு!
ஒரே காற்றுதான்... வெப்பமான வேளையில் வீசினால் மகிழ்ச்சி தரும். குடிசைகள் தீப்பற்றி எரியும்போது வீசினால் அழிவைத் தரும். அதே போல்தான் "பராசக்தி' திரைப்படத்தைப் பார்த்தால் அறிவுக்கு வேலை தரும்.
"அரங்கேற்றம்' திரைப்படத்தைப் பார்த்தால், கற்பை மூலதனமாக்கி, வியாபாரம் செய்ய கற்றுத்தரும். திரையிலே கருத்துக்களைக் கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள், காலப்போக்கில் கருத்தை திரையிலே சொல்லும் முகங்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
கேமரா எப்படி தன் கடமையைச் செய்கிறதோ, கலர் பிலிம் எப்படி தன் பணியைச் செய்கிறதோ, அதேபோல்தான் நடிகரும் தன் கடமையைச் செய் கிறார். அவர் அபூர்வ பிறவியுமல்ல, அசகாயசூரரு மல்ல! கேமராவுக்கும், கலர் பிலிமுக்கும் ரசிகர் மன்றம் வைப்பது எவ்வளவு அறிவீனமான செயலோ, அதேபோல்தான் நடிகருக்கு ரசிகர் மன்றம் வைப்பது.
தேசப்பிதா காந்தியடிகளுக்கு சிலை வைப்பதா? காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்கு சிலை வைப்பதா? எது சரி? இருட்டிலே உன்னை அமரவைத்து, நடிகனை வெளிச்சம் போட்டுக் காட்டி அவன் நாற்பது பேரை அடிப்பதுபோல் காட்டி, உன்னிடம் காசை கறப்பது எங்கள் தொழில். "இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் வாழ்க்கை -இவை வெறும் வார்த்தைகளல்ல.... பாடல் வரிக ளல்ல... பல உண்மைகளை சுமந்துவரும் கருத்துப் பெட்டகம்.
உடனே உங்களில் ஒருவ ராவது நிச்சயமாக என்னைப் பார்த்து... "நீங்கள் மட்டும் எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்தீர் களே? இப்ப என்ன புது ஞானோதயம்?' எனக் கேட்பீர் கள். இதோ அதற்கான என் பதில். சினிமா என்றால் என்ன வென்றே புரியாத வயதில் "மலைக்கள்ளன்' படத்தைப் பார்த்து மலைத்துப் போனவன். எம்.ஜி.ஆரை தேவதூதனாக நம்பி யவன். தொடர்ந்து "மதுரை வீரன்', "ராஜா தேசிங்கு', "நாடோடி மன்னன்' போன்ற படங்களைப் பார்த்துப் பித்தாகிப் போனவன். அதே நடிப்புத் தொழிலையே நானும் செய்ய முடிவேற்றவன். "புலித்தேவன்' நாடகத்தை எழுதி நடித்தபோது, ஏற்பட்ட பெருமை சொல்லி மாளாது.
ஒப்பனை முகமும் நான்தான், ஓய்விலா பேனாக்காரனும் நான்தான். கனவுகளோடு காஞ்சியில் படிக்கப் போனேன். அங்கே ஆன்மிக உச்சத்தையும் தரிசித்தேன். அறிவின் உச்சத்தையும் கண்டு மகிழ்ந்தேன். அங்குதான் சினிமாவை புரிந்துகொண்டேன். ஒப்பனை முகங்களை உருவாக்குவதே ஒப்பற்ற பேனாக்காரர்கள்தான் என்பதை தெரிந்துகொண்டேன்.
சென்னையில் நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பின், அவரோடு பழகப் பழக நான் அவரை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. அவர் மனித நேயம் மிக்க சினிமாவை முற்று முழுதாக தெரிந்தவ ராக, நல்ல அரசியல் தொண்டனாக, அண்ணாவின் இதயக்கனியாக, என் இதயதெய்வமாக மாறி காட்சி தந்தார். சினிமா அவர் செய்த தொழில். பொன் மனச் செம்மல் அவர் வாழ்ந்த வாழ்வு. அவர் மக்களின் மன்னனாக வாழ்ந்தவர். வெறும் நடிகனல்ல... அவர் பின்னால் நடந்தவர்கள் ரசிகர்களல்ல. அவரது தொண்டர்கள் தோழர்கள். இது அவராக அமைத்துக்கொண்ட வித்தியாசமான வாழ்க்கை முறை. இவரது தொழில் நடிப்பு. ஆனால் அந்த நடிப்பை... மக்களுக்கு நல்லதைச் சொல்ல, புது அரசியல் கருத்துக்களை விதைக்க, நல்ல பாடல்களைச் சொல்ல, நல்ல வசனங்களைப் பேசி தாயன்பை, அதன் மகத்துவத்தை புரிய வைக்க -இப்படி நல்லதை மட்டும் நாட்டு மக்களுக்குச் சொல்லும் மனித தெய்வமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அப்படி வித்தியாசமான நடிகர் அவர். அவர் காலங்களைக் கடந்து புகழுடம்போடு வாழ்வார். அவரைப்போல் இன்னொருவரைக் காணவேண்டுமானால் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
நான் எத்தனையோ பேர்களை நட்சத்திரங்க ளாகவும், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களாகவும் அறிமுகப்படுத்தியுள்ளேன். அதுபற்றி அவ்வப்போது சொல்லியுள்ளேன். எனது அறிமுகங்களில் இன்னும் சிலரைப் பற்றிச் சொல்கிறேன்.
சென்னிமலையில் ஈழத்தமிழர் ஆதரவுக் கூட்டம். நானும், சுப.வீ.யும் போயிருந்தோம். மேடையில் அமர்ந்திருந்தபோது... என்னிடம் சில நூல்கள் தரப்பட்டன. அவற்றை நான் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் "நிமிர்ந்த நாணல்கள்' என்ற புத்தகத்தில் சில கவிதைகள் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் இதை எழுதியது யார் என நண்பர்களைக் கேட்டேன். ஒரு இளைஞரை கூட்டிவந்து எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அவர் பெயர் செல்வபாரதி. "உங்கள் ஆசை என்ன?'' என்று கேட்டேன். "சினிமா' என்றார். "சென் னைக்கு வாருங்கள்'' என்று சொல்லிவிட்டு வந்தேன். மூன்று, நான்கு தினங்களுக்குள் செல்வபாரதியை சுப.வீ. அழைத்துக்கொண்டு என் அலுவலகம் வந்தார். அப்பவே அவரை என் அலுவலகத்திலேயே தங்கவைத்து என் உதவியாளராக சேர்த்துக்கொண்டேன்.
"முதலாளியம்மா', "மதுரைக்கார தம்பி', "முதல் குரல்' ஆகிய படங்களில் வேலை செய்தார். பின்னர் என் "அட்ரா சக்கை... அட்ரா சக்கை' என்ற நகைச்சுவை படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பினை வழங்கினேன். அந்தப் படம் நூறு நாட்கள் ஓடி பெருவெற்றி பெற்றது. எங்கள் ஈழ ஆதரவு இயக்கத்தின் பல போராட்டங்களில் செல்வபாரதி பங்கேற்று பணியாற்றினார். எனக்கு நல்ல நண்பராகவும் விளங்கினார். பின்னர் இயக்குநராகி மூன்று விஜய் படங்களை இயக்கி, மூன்றும் நூறு நாட்கள் ஓடவைத்தார். நகைச் சுவை வசனங்கள் மிகச் சிறப்பாக எழுதுவார்.
தர்மா... இவர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப் பதிவு கற்றவர். ரகுவரன் நடித்த முதல் படமான "ஏழாவது மனிதன்' ஒளிப் பதிவாளர். என்னோடு வேலை செய்த எடிட்டர் ஆர்.டி.அண்ணாதுரைதான், தர்மாவை எனக்கு அறி முகம் செய்துவைத்தார். எனது நூறாவது படமான "மைக்கேல்ராஜ்'ல் புது யூனிட்டை உருவாக்கி னேன். ரகுவரனின் ஃபர்ஸ்ட் கமர்சியல் மூவி... நாயக னாக. இதில் இன்ஸ்டி டியூட்டில் படித்த பல நடி கர்கள் நடித்தனர். குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி நடித்தார். எடிட் டர் ஆர்.டி.அண்ணா துரை, ஒளிப்பதிவு தர்மா. இந்த யூனிட் பத்து படங் களுக்கு மேல் என்னோடு வேலை செய்தார்கள்.
அதன்பின் "முதலாளியம்மா' என்ற படத்தில் கே.பி.அகமதை ஒளிப்பதிவாளராக அறிமுகம் செய்தேன். இந்தக் கதை சற்று வித்தியாசமான கதை. சிவப்புச் சிந்தனை கலந்த கதை. வசனங்களும் காட்சிகளும் விறுவிறுப்பாக அமைந்தது. ஒரே தடவைதான் வியாபாரத்துக்காக காட்டப்பட்டது. எல்லா ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்தன. இந்தப் படத்தில் எம்.ஆர்.ராதா பேரன் வாசுவிக்ரமை வில்லனாக அறிமுகம் செய்தேன். மனோரமா, கனகா, பிரமிளா மூவரும் போட்டி போட்டு சிறப்பாக நடித்தனர். விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை தந்த படம். இதன் தயாரிப்பு செலவு பதினான்கு லட்சமே... இதைச் சொன்னபோது யாருமே நம்பவில்ûலை!
(திரை விரியும்)