தமிழ்ப் படங்களில் வெற்றிக்குப் பாடல்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை அனுபவரீதியாக உணர்ந்திருக்கிறேன். என் படங்களின் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அதிக அக்கறை எடுத்துக்கொள்வேன். எனக்கு சங்கீதம் தெரியாது. ஆனால் எத்தகைய பாடல்கள் வெற்றிபெறும் என்பதை கணிக்கத் தெரியும். படங்களைப் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே... கதை, வசனம், பாடல் இது மூன்றிலும் என் கவனத்தை அதிகமாக செலுத்துவேன். நல்ல வசனங்களை மனப்பாடம் செய்துகொள்வேன். பாடல் வரிகளை சதா முணுமுணுத்துக்கொண்டேயிருப்பேன். என் குரல் கர்ணகொடூரமாக இருப்பதால், சத்தமாகப் பாட முடியாது. அறுபது வருடங்களுக்கு முன்னால் பார்த்த படங்களின் பாடல் வரிகளை சரியாகச் சொல்லுவேன்.
"மானம் பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க்காக துயர்படுவான்
தானம் வாங்கிட கூசிடுவான்
தருவது மேலென பேசிடுவான்
தமிழன் என்றோர் இனமுண்டு'
-நாமக்கல் கவிஞரின் இன முழக்கம் இந்த வரிகள்.
"வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா' -என்று சொன்ன பட்டுக்கோட்டையார் "தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா' என்கிறார்.
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?' என்று கேட்ட வாலி
"கடல்நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ?' -இதையும் கேட்பார்.
பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி' -அண்ணன் புலமைப்பித்தன் வரிகள்
கவிஞர்களின் வரிகளும், இசையமைப்பாளர்களின் இசையும் போட்டிபோடும். தத்தகாரத்துக்கு வரிகள் எழுதப்பட்டனவா? அல்லது எழுதப்பட்ட வரிகளுக்கு இசையமைக்கப்பட்டதா? என கண்டுபிடிக்கவே முடியாது.
"அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும் -தக்க
சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்'
இந்த வரிகள் இசையோடு ஒலிக்கும்போது பாடலாக நம்மை ஈர்க்கிறது. வெறும் வரிகளாகப் படித்துப் பார்த்தால் கதை சொல்கிறது.
ஏ.நாகேஸ்வரராவ் என்ற புகழ்மிக்க தெலுங்கு நடிகர் நடித்த "தேவதாஸ்' படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் படம் தமிழில் சக்கைப்போடு போட்டது. பிரபல வங்காள எழுத்தாளரின் கதை அது. மிகச் சிறு வயதிலேயே என்னை உருகி உருகி பார்க்க வைத்த படம். அதில் வந்த எல்லா பாடல்களும் சூப்பர்ஹிட் பாடல்கள்.
"உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை
உள்ளதெல்லாம் நீயேயல்லால் வேறே கதியில்லை
இனியாரும் துணையில்லை
எனது வாழ்வில் புனித ஜோதி எங்கே சென்றாயோ?
இதயம் குளிர சேவை செய்ய நினைவும் வீணானதே
என் கனவும் பாழானதே'
கண்டசாலா அவர்களின் குரலில் கேட்டு அழாதவர்கள் கிடையாது. சி.ஆர்.சுப்பராயன் இசையமைத்தார். இப்படி இசையும், பாடல் வரிகளும் போட்டிபோட்ட காலம் அது.
அப்படிப்பட்ட காலத்தில் திரைலயுகை தன் வசனங்களால், கலையுலகைப் புரட்டிப் போட்டு, புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தவர் கலைஞர் கருணாநிதி. "பராசக்தி' படத்துக்குப் பின், படத்துக்கு 18, 20 பாடல்கள் என்கிற காலம் மாறி வசன கர்த்தாக்கள் கோலேச்ச ஆரம் பித்தார்கள். இதில் பல பரீட்சைகளைத் தாண்டி வந்தவர் கலைஞர். தூணோடு சங்கிலியால் பிணைக்கப் பட்ட நாயகன் தூணை உடைத்து... சங்கிலியை அறுத்து வந்து வில்லனோடு மோதவேண்டும். இது மனிதப் பிறவியால் முடியாதது. அதற்கு தெய்வீக சக்தி வேண்டும். கடவுளிடம் கெஞ்சி தாயார் பாட, மகன் தெய்வீக சக்தியின் துணையோடு தூணை உடைத்து, சங்கிலியை அறுத்து, வில்லனை ஓடவிட்டு வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என தயாரிப்பாளரும், இயக்குநரும் முடிவுக்கு வருகின்றனர். இந்த மாதிரி கட்டங்களில் மக்களும் ஒரு உரத்த பக்திப் பாடலையே பார்த்துப் பழக்கப் பட்டிருந்தனர். கலைஞர் இந்த பார்முலாவை தவிர்க்க எண்ணினார். பாடலுக்குப் பதிலாக நான் வசனங்கள் எழுதித் தருகிறேன், அதை தாயார் பேசட்டும். அதைக் கேட்கக் கேட்க மகன் உக்கிரமடைந்து சங்கிலியை அறுத்து தூணை உடைக்கட்டும் என்றார். முழு நம்பிக்கை ஏற்பட வில்லை இயக்குநருக்கு. முயற்சி செய்து பார்க்கலாம் என அனுமதிக்கிறார். கலைஞர் எழுதினார், கண்ணாம்பா பேசினார். சிவாஜி பொங்கி எழுந்து சங்கிலியை உடைத்து, தூணைப் பிளந்தார். "மனோகரா' படத்தின் அந்தக் காட்சிக்கு மக்கள் வெறித்தனமாக கைதட்டினார்கள். பக்திப் பாடலுக்குப் பதிலாக, பெற்றவளின் தீப்பொறி வசனங்கள், உணர்ச்சியின் உச்சத்தை தொட்டது. கலைஞர் வென்றார்.
இன்னொரு படம். நாயகி கன்னித் தீவுக்கு வில்லனால் கடத்தப்பட்டாள். வில்லன் அவளை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. செய்வதறியாது துடிக்கிறாள். நாயகன் யாருக்கும் தெரியாமல் கன்னித் தீவுக்குள் வந்துவிட்டான். அதை அவள் பார்த்துவிட்டாள். வில்லன் கவனத்தை திசைதிருப்ப பாடி ஆடுகிறான்.
"வீரமாமுகம் தெரியுதே... அது வெற்றிப் புன்னகை புரியுதே' -இந்தப் பாடல் அந்த உச்சகட்ட காட்சியைத் தூக்கிப் பிடித்தது. அதிலும் நாயகி யாரைப் பார்த்து வீரமாமுகம் எனப் பாடினார். எம்.ஜி.ஆர். முகத்தைப் பார்த்து, "நாடோடி மன்னன்' படத்தில். அந்தப் படத்தின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர். முழு காரணம் என்று சொன்னாலும், பாடல்களையும், வசனங்களை யும் ஒதுக்கிவிட முடியுமா?
"உழைப்பதிலா இன்பம் உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாகுமென்று சொல் என் தோழா'
"தூங்காதே தம்பி தூங்காதே...
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே'
"சம்மதமா... நான் உங்கள் கூடவர சம்மதமா?'
இப்படி எத்தனை அருமையான பாடல்கள். எம்.ஜி.ஆர். படப் பாடல்கள் அத்தனையுமே நம்மை மகிழ்வித்த பாடல்களே!
இதையெல்லாம் புரிந்துகொண்டு திரையுலகில் நுழைந்த நான், என் படங்களின் பாடல்கள் எப்படி இருக்கவேண்டும் என விரும்பியிருப்பேன். என்னுடைய இந்த எண்ணமே பல பாடலாசிரியர்களை உருவாக்கவும், பல புது இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தவும் ஆதாரமாக அமைந்தது. என்னை, இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய முதல் படமான "புதிய பூமி' படத்திலேயே பூவை.செங்குட்டுவனை ஒரு பாட்டு எழுத வைத்து, அதற்கு எம்.ஜி.ஆரின் சம்மதத்தைப் பெற்று, எம்.எஸ்.வி. இசையில் உள்ளே நுழைக்க முடிந்தது. அந்தப் பாடல் இன்றுவரை சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது...
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை... இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை... பேரறிஞர் காட்டும் பாதை'.
அதேபோல நான் எழுதிய "எங்க மாமா' படத்தில் "என்னங்க சொல்லுங்க, இப்பவா... அப்பவா' என்ற பாடல் வர நானே காரணம். என் முதல் சொந்தப் படம் "சுடரும் சூறாவளியும்'. அதில் சபரிமலையில் இரவு பாடப்படும் ராகம் தூக்கத்தை வரவழைக்கும். அதையொட்டி, என் விருப்பத்தை நிறைவேற்ற எம்.எஸ்.வி. அண்ணன் போட்டுத் தந்த பாடல்தான் "அன்பு வந்தது என்னை ஆளவந்தது... சொந்தம் வந்தது... தெய்வ சொர்க்கம் வந்தது'. படத்தில் பல இடங்களில் இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் நான் தயாரித்த இரண்டாவது படம் "கனிமுத்து பாப்பா'. அதில் டி.வி.எஸ்.ராஜுவை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தேன். அனேகமாக எல்லா பாடல்களும் என் விருப்பப்படி அமைந்தன. இந்தப் பட பாடல்களையும் பூவை.செங்குட்டுவனையே எழுதவைத்தேன். இதில் பெரிய ஹிட்டான பாடல்... "ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே! ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே'. இந்தப் பாடலை சிவாஜி ஸார் பாடுவார். இது நான் பிற மொழியிலிருந்து சுட்ட பாடல்.
(திரை விரியும்)