cc

(55) அடிமட்டம் தொடங்கி மேல்மட்டம் வரை.....

Advertisment

தாசரி நாராயணராவ், சிரஞ்சீவி, கோடிராமகிருஷ்ணா போன்ற பல பிரபலங்களை தெலுங்குப் பட உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் பிரதாப் ஆர்ட் பிக்சர்ஸ் திரு.கே.ராகவா. இவரது. கம்பெனி மகாலிங்கபுரம் சரஸ்வதி தெருவில் இருந்தது. என்அலுவலகமும் மகாலிங்கபுரத்தில் தான் இருந்தது. ராகவா மிகக்கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். South Indian Film Chamber#-ல் சத்தமாகப் பேசும் தயாரிப்பாளர்; உரிமைகளைக் கேட்பதில் முதல் ஆளாக நிற்பார். மத்திய அமைச்சர்களோ, மாநில அமைச்சர்களோ சேம்பருக்கு வந்தால் நமக்கு, அதாவது சினிமா துறைக்கு தேவையானதை சத்தமாக, தைரியமாக கேட்பார். இவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். அடிக்கடி என் அலுவலகம் வந்து பேசிக்கொண்டிருப்பார். "அபூர்வராகங்கள்' படத்தை தெலுங்கில் தயாரித்தார். என்னுடைய முதல் டைரக்ஷனில் வந்த "மதுரகீதம்' படத்தைப் பார்த்துவிட்டு வந்து என்னை மனம் திறந்து பாராட்டினார். சினிமாவில் இவருக்கு அனைத்தும் அத்துப்படி. எந்த ஒரு சினிமா சம்பந்தப் பட்ட விஷயத்திலும் இவரை ஏமாற்றிவிட முடியாது, கண்டிப்பானவர். சிக்கனமாக சினிமா தயாரிப்பதில் யாரும் இவரை மிஞ்சிவிட முடியாது, கெடுபிடி யானவர்.

ஆதரவற்றவராக வளர்ந்து, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக, நடனக்குழுவில் ஆடுபவராக, சண்டைக் காட்சிகளில் கூட் டத்தில் ஒருவராக, பின்னர் டான்ஸ் மாஸ்டராக, அதன்பின்... ஸ்டண்ட் மாஸ்டராக, அதன் பின் தயாரிப்பு நிர்வாகியாக வளர்ந்து, அதன்பிறகே பிரபல தயாரிப்பாளராகி, அதில் திட்டமிட்டு வெற்றிபெற்று, ஸ்டுடியோ அதிபராகவும் ஆனவர் ராகவா. ஆனாலும் எப்போதும் தன்நிலை மறக்காமல் ஒரேமாதிரி பழகும் நல்ல நண்பர்.

படத்தயாரிப்பு ஒரு தொழில், லாப நஷ் டங்களைப் பார்க்கவேண்டிய அபாயகரமான தொழில். "சினிமா ஒரு சூதாட்டம்' எனச் சொல்பவர்கள் உண்டு, அது தவறு. எல்லா வற்றையும் கற்றுக்கொண்டு, முறைப்படி செய்தால் இது நல்ல தொழில் என நிரூபித்துக் காட்டியவர் தயாரிப்பாளர் ராகவா. என்னை தெலுங்கில் இயக்குநராக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். மிகவும் நட்போடும், மரியாதை யோடும் என்னிடம் பழகுபவராச்சே என அவருக்கு ஒரு நல்ல கதையையும் கொடுத்து, இயக்க ஒப்புக்கொண்டேன். ஹைதரபாத்தில் தன் வீட்டில் ஒரு அறையைக் கொடுத்து அங்கே தங்க வைத்துவிட்டார்.

Advertisment

ஷூட்டிங்குக்கு ஆறுமணிக்கே கிளம்பிவிடவேண்டும். அவரது மினி பஸ் சாவியை என்னிடம் தருவார். நான் பஸ்ஸை ஓட்டவேண்டும். கேமராமேன், அவருடைய உதவி யாளர்கள், என்னுடைய உதவி இயக்குநர்கள் -என டெக்னீஷி யன்கள் என்னோடு ஒரே வண்டியில் வருவார்கள். அன்றைய படப்பிடிப்பிற்கு ஆகும் செலவுக்கான பணத்தையும் தத்துவிடுவார். அன்று திட்டமிட்ட அத்தனை காட்சிகளையும் முடித்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும். ஷூட்டிங்கில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சைவ சாப்பாடுதான். ஒரு நாள் ஒரு பங்களாவில் ஷூட்டிங். திட்டமிட்ட முக்கிய காட்சிகளை படமாக்க லேட்டானது. இரவு இரண்டு மணி... நின்று கொண்டே சுவரில் சாய்ந்தபடி கண்ணயர்ந்தேன். என் அருகே வந்து, மெதுவாக என் தோளைத்தட்டி "நீங்களே கண்ணயர்ந்தால் மொத்த யூனிட்டும் தூங்கிடும்' என இரக்கமற்ற முறையில் சொன்னார்.

cc

இந்தப் படத்தில் சந்திரமோகன், சத்யநாரா யணா, எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த லதா, பிரவீணா, விஜயநிர்மலா ஆகியோர் நடித்தனர். படத்திற்குப் பெயர் "சூர்ய சந்துருலு'. கிட்டத் தட்ட பெரும்பான்மை காட்சிகள் எடுக்கப் பட்டு, ஷெட்யூல் முடிந்ததும் எடிட்டிங் வேலை யை ஆரம்பித்தேன். பாடல்கள் ரிக்கார்டிங் வேறு. நாளுக்குநாள் அதிகரித்த தயாரிப்பாளர் ராகவாவின் கெடுபிடி எனக்கு கோபத்தை வர வழைத்தது. ஒரு முடிவெடுத்து அவரை என் அலுவலகம் வரும்படி போனில் கூப்பிட்டேன், அவரும் வந்தார். என் கையெழுத்துப் போட்டு வைத்திருந்த "பிளாங்க்' செக்கை அவரிடம் கொடுத்து, "ராகவா ஸார், முதலில் நாம நல்ல நண்பர்கள்... அதனால்தான் உங்களுக்கு படம் செய்ய ஒப்புக்கொண்டேன். தற்போது இந்தப் படத்தால் நமக்குள் தகராறு வந்துவிடுமோ என பயமாக இருக்கிறது. இதுவரை என்ன செலவோ அதையும் அதற்கான வட்டியையும் செக்கில் நிரப்பி எடுத்துக்கொள்ளுங்கள். படத்தை நான் என் பேனரில் முடித்துக் கொள்கிறேன்'' என் றேன். அவர் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு "இது சரியில்லை. நான் அமைதியாக இருந்துகொள் கிறேன். படப்பிடிப்பு விஷயங்களில் இனி கெடுபிடியாகத் தலையிடமாட்டேன். நீங்கள் படத்தை முடித்துத் தாருங்கள்'' என்றார். அதன்படி படத்தை முடித்துக்கொடுத்தேன். எங்களின் நட்பு தொடர்ந்தது. அடுத்தும் தனக்கு ஒரு படம் செய்யச் சொல்லிக்கேட்டார். நான் மறுத்துவிட்டேன். எப்போது ஹைதரபாத் போனாலும் அவரைப் போய் பார்க்காமல் வர மாட்டேன். ஒருவிதத்தில் சித்தித்துப் பார்த்தால் பணம் போடும் முதலாளி, தன் பணம் நஷ்ட மாகிவிடக்கூடாது என நினைப்பது சரிதானே?

பல வருடங்களுக்குப் பிறகு நானாக விரும்பி, ராகவாவுடன் இணைந்து அஜித், ரஞ்சித், வடிவேலு, விவேக் உள்ளிட்டோர் நடித்த "மைனர் மாப்பிள்ளை' என்ற படத்தை எடுத்தோம். இந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவுக்கு ஹைதரபாத்திலிருந்து கிளம்பி வந்து, வாழ்த்திப் பேசினார்.

பொதுவாகவே நான் உருவாக்கும் கதைகள் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரிடம் ஒரு கதையை ஓ.கே. செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சம் முழு ஸ்கிரிப்டையும் ஐம்பது தடவையாவது திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் கர்ஞ்ண்ஸ்ரீஹப்ப்ஹ் சரியா இருக்கணும். அதேபோல் வசனங்களும் "ஷார்ப்பா' இருக்கணும். அந்த நாட்களில் பல தயாரிப் பாளர்கள் சினிமாவை முழுமையாகக் கற்றுக்கொண்டு வந்தார்கள். சினிமாவில் வியாபாரம்தான் முக்கியம். ஆனால் அதில் கலையம்சம்தான் முதன்மையாகவும், மேன்மை யாகவும் இருக்க வேண்டும். அன்று கோடிகள் புரளவில்லை. கொள்கைகளும், நல்ல சிந்தனைகளும், சிறப்பான பாடல்களும், அற்புதமான நடிப்பும் கலந்து சினிமாவை உயர்த்திப் பிடித்தன.

தற்போது ராகவா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இன்றைய சில ஹீரோக்களும், பல டைரக்டர்களும் தயாரிப்பாளர்களை வதைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருக்கமாட்டார்.

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

_______________

தீதும் நன்றும் பிறர்தர வாரா...!

Advertisment

ரையான் புற்றெடுக்க, கருநாகம் குடி புகுந்தது போல.... என ஒரு பழமொழி. தமிழ்த் திரையுலகில் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு.

திரையுலகில் இருந்த பல பேனா வல்லுநர்கள், கிருஷ் ணன்-பஞ்சு, ஏ.பீம்சிங், எல்.வி. பிரசாத், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலாகிருஷ்ணன், ஏ.பி. நாகராஜன், ப.நீலகண்டன், ஆ.ஈ.திருலோக்சந்தர் போன்ற அதி திறமையான இயக்குனர் களும், தமிழ்த் திரைப்படத் துறையை கோபுரத்தில் தூக்கி வைக்க, கூத்தாடிகள் என்ற பெயர் மறைந்து, கலைத்துறை வித்தகர்கள், கலைஞர்கள்... என மக்கள் போற்ற ஆரம்பித்தனர். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜானகி ஆகியோர் முதல்வர்களாகவும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும் ஆனார்கள். இந்த வளர்ச்சி பிற மாநில கலையார்வம் உள்ள இளை ஞர்களை, தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தது. மோகன், ரஜினிகாந்த், அஜித், விஷால், ஆர்யா, வைபவ், ஆதி, விஷ்ணு விஷால்... என ஹீரோக்களும், அதைவிட நாயகிகள் அதிகமாக வும், எண்ணற்றோர் படை எடுத்து... தமிழ்த் திரையுலகை கலப்படமாக்கி, பான் இந்தியா படங்கள் என்ற பொருளாதார வளர்ச்சியைக் காட்டி.... கார்ப்ப ரேட் கம்பெனிகளின் பெருக்கத் துக்கு வழிவகுத்து, நல்ல கற்பனை யாளர்களை ஓரங்கட்டி தமிழ்த் திரை உலகை மடைமாற்றம் செய்து விட்டனர். அரசியலிலும் குழப்பங் கள் வர, இதற்கு சிலபேர்களின் மக்கள் செல்வாக்கு காரண மானது. மொழி, கலை, கலாச்சாரம் என்பதுதான் தமிழ்நாட்டின் அலங் காரமே! ஜி.யு.போப் போன்றவர்கள் போற்றிப் புகழ்ந்த மொழியும், நாகரிகமும், ஆக்கமும், தேட வேண்டிய அளவுக்கு சிதைக்கப் பட்டுள்ளது.

"இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே... இங்கிலீஷு படிச்சாலும் இன்பத் தமிழ்நாட்டிலே; இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பளே' என "விவசாயி' படத்தில் ஒரு பாடல் வரும். புடவை கட்டின கே.ஆர்.விஜயாவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., இப்படிப் பாடு வார். இப்போது தமிழ் சினிமாவில் நாயகிகள் புடவைகட்டி வரும் காட்சிகள் பெரும்பாலும் இல்லை. பெரும்பாலான நாயகிகளை புடவைகட்டிப் பார்க்க முடியாது. த்ரிஷா போன்ற ஒருசில நாயகி களைத் தவிர, மற்றவர்களுக்கு புடவை பொருந்தாது.

எந்தத் திரையுலகம் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பகுத்தறிவும், மொழி- இன உணர்வும் பரப்பப்பட்டதோ... அதே திரையுலகம் வல்காரிட்டி, செக்ஸ், டபுள் மீனிங் டயலாக், ஆன்ட்டி சென்டிமெண்ட், முறையற்ற உறவு என பல தீமைகளை இன்றைக்கு சினிமா பரப்பி வருவதை எவரும் மறுக்க முடியாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் வரவேற்கப்பட வேண்டியதே. அதற்காக... தேனையும் பாலையும் பருகும் பழக்கமுள்ளவர்களுக்கு கோமியத்தையும். மாட்டுச் சாணத்தையும் படைப்பது சரியா? ரசிகப்பெருமக்கள் உணரட்டும்.

-வி.செ.குகநாதன்