cc

(21) எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?

Advertisment

"புதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார். ஆனால்... ஸ்பாட்டுக்குப் போன எனக்கு, அந்தக் காட்சிக்கான வசனத்தில் புதிதாய் ஒரு விஷயம் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்றும் தோன்றியது.

மெதுவாக "ஷாட் கேப்'பில் டைரக்டர் சாணக்யாவின் அருகே சென்று அவரின் காதோடு காதாக அந்த வசனத்தைச் சொன்னேன். உடனே அவர் ஷாட்டுக்கு பிரேக் கொடுத்துவிட்டு, என் கையைப் பிடித்து இழுத்துப் போய்... எம்.ஜி.ஆரின் அருகில் நிறுத்தி, "குகா சொல்றது நல்லா இருக்கு, கேட்டுப் பாருங்க'' என்றார்.

"காட்சிப்படி... ஜெயலலிதா மேடம் "இனிமே நான்தான் இங்கே நரசம்மா'ன்னு சொல்வாங்க. "அது நரசம்மா இல்ல... நர்ஸ்'னு டாக்டரான நீங்க திருத்துவீங்க. இந்த இடத்துல கூடுதலா ஒரு வசனம் சேர்க்கலாம்'' என்று எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.

"என்ன மாதிரி சேர்க்கலாம்?''னு கேட்டார்.

"இனிமே நான்தான் இங்க நரசம்மா''

"அது நரசம்மா இல்ல... நர்ஸ், அதுக்கெல்லாம் படிக்க வேணாமா?''

"நீங்கதான் இருக்கீங்களே... எனக்குச் சொல்லிக் குடுக்க...''

"நான் என்ன வைத்தியரா? வாத்தியாரா?''

"இந்த ஊருக்கு வைத்தி யர்; எனக்கு வாத்தியார்''

ஜெயலலிதா இப்படி பதில் சொன்னா நல்லா இருக்கும்'' என்றேன்.

Advertisment

எம்.ஜி.ஆர். தனது கருத்தைச் சொல்வதற்குள் 'ஏர்ர்க்' என்றார் அருகிலிருந்த ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரும் ஓ.கே. சொல்ல, நான் விரும்பியபடியே "வாத்தியார்' வசனத்துடன் காட்சி படமாக்கப்பட்டது. மதிய உணவுக்காக படப்பிடிப்பு இடைவேளை விட்டதும், ஒரு அவசர வேலையாக, சாப்பிடாமல் கூட வெளியே போய்விட்டு சாப்பிட வந்தேன்.

ஒரே களேபரம்!

எம்.ஜி.ஆர். சாப்பிடப் போகும்போது தன் உதவியாளரிடம் "குகநாதனை என்கூட சாப்பிட வரச்சொல்லுங்க'' எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் வெளியே போயிருந்ததால் என்னைக் காணாமல் தேடியிருக்கிறார்கள்.

Advertisment

"எங்க சார் போனீங்க? சின்னவர் கூப்பிடு றார்'' என்றதும், எம்.ஜி.ஆர். இருந்த அறைக்குள் சென்றேன்.

எனக்காக பசியோடு காத்திருந்த எம்.ஜி.ஆர்., "எங்க போனீங்க?'' என்றார் சிறிது கோபத்துடன். அத்துடன் பசியால் வந்த கோபம் வேறு...!

"சாப்பிடாமல் அப்படி என்ன அவசர வேலை?''

"அம்மாவுக்கு லெட்டர் போஸ்ட் பண்ண பக்கத்துல போயிருந்தேன்'' என்றேன்.

எம்.ஜி.ஆர். எவ்வளவு கோபமாக இருந் தாலும் "அம்மா'வைப் பற்றிய பேச்சு வந்தாலே சாந்தமாகிவிடுôர்.

தன் அருகே என்னை உட்காரச் செய்தார். அவரும், நானும் சாப்பிட்டோம்.

"ஆமா... அப்படி ஒரு வசனத்தை சேர்க்கணும்னு உனக்கு ஏன் தோணிச்சு?''

நான் சற்றும் யோசிக்கவில்லை பதில் சொல்ல. அவரும் நான் இப்படி ஒரு பதிலைச் சொல்வேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"எதிர்காலத்தில் இப்படி நடக்கும்னு என் மனசுக்குப் பட்டது சார்'' என்றேன்.

c

(நான் கணித்தபடியே பின்னாளில் ஜெயலலிதாவின் அரசியல் வாத்தியாராக எம்.ஜி.ஆர். ஆனார். அதில் பல சாதக -பாதக அம்சங்கள் இருக்கலாம், அதை அப்புறமாய் விவரிக்கிறேன்)

எம்.ஜி.ஆர். நல்ல எழுத்தாளர்களை, நல்ல கவிஞர்களை வைத்து தன் படங்களில் நல்ல கருத்துகளைச் சொன்னார். மக்களை நல்வழிப்படுத்தும் படங்களாக, தனது படங்கள் அமைய வேண்டும் என்ற உறுதியான கொள்கை யைக் கடைப்பிடித்தார். தனது திரைப்படங்களில் மக்களுக்குச் சொன்ன நல்ல உபதேசங்களை "ஊருக்கு உபதேசம்' செய்வ தாக மட்டும் எண்ணாமல், தன் சொந்த வாழ்விலும் தான் சொன்ன நல்ல விஷயங் களைக் கடைப்பிடித்தார்.

பல்கலைக்கழகங்கள் சொல்லித் தரவேண்டிய பாடங்கள் அவரது படங்களில் சொல்லித் தரப்பட்டது. அவரது படங்களின் பாடல்கள் பட்டிதொட்டியெங் கும் பரவி, அறிவுப் புரட்சிக்கு வித்திட்டது. மக்கள் விழிப்புணர்வு பெற்றனர்.

சுருங்கச் சொன்னால் அடித் தட்டு மக்களின் ஆசானாக பவனி வந்தார். தமிழகமே அவரை "வாத்தியார்' என அழைத்ததற்கு இதுவே அடித்தளம்.

மந்திரங்களை ஜெபித்தவரல்ல எம்.ஜி.ஆர். போலி நம்பிக்கைகளை வளர்த்தவரல்ல. எதையும் திணிக்கவும் முயன்றவரல்லர். ஒரு நடிகராக, ஒரு இயக்குநராக, ஒரு கதாசிரியராக, ஒரு தயாரிப்பாளராக, ஓர் உண்மையான கலைஞனாகத் தன் கடமையைச் செய்தார். மக்கள் அவர் பின்னால் திரண்டனர். "மக்கள் திலகம்' என்று கொண்டாடினார்.

இப்படி வெகுஜன மக்களின் வாத்தியாராக இருந்த எம்.ஜி.ஆரை "எனக்கு நீங்கதான் வாத்தியார்' என பின்னாளில் வரப்போவதற்கு முன்னாளிலே வசனமாக, ஜெயலலிதாவுக்கு எழுதினேன்.

நான் எம்.ஜி.ஆரை "சார்' என்றுதான் எப்போதும் அழைப்பேன். அதை பலநாளா கவனிச்சுக்கிட்டிருந்த எம்.ஜி.ஆர்., "எல்லாரும் என்னை எப்படி கூப்பிடுறாங்க?'' என்று கேட்டார்.

"தொண்டர்கள், ரசிகர் மன்றத்தினர் "அண்ணே' எனக் கூப்பிடுறாங்க. இண்டஸ்ட்ரி ஆட்கள் "சின்னவர்'னு குறிப்பிட்டுச் சொல்லுறாங்க, சின்னப்ப தேவர் சார் "ஆண்டவனே'னு கூப்பிடுறாரு''.

"உங்களுக்கு மட்டும் என்மேல பாச மில்லையா? ஏன்... "அண்ணே'னு கூப்பிடுறதில்ல?'' எனக் கேட்டார்.

வயிறார சோறு போட்ட அவர் கேட்ட கேள்வி என்னை உலுக்கிடுச்சு.

"அண்ணே! என்னை மன்னிச்சிடுங்க. இனிமே உங்களை மட்டும் "அண்ணே'னு கூப்பிடுவேன். நான் "அண்ணன்'னு சொன்னா... அது உங்களை மட்டும்தான் குறிக்கும்'' என்றேன்.

மயக்கும் மந்திரப் புன்னகையுடன் என்னைத் தட்டிக் கொடுத்தார்.

அதற்குப் பின்னால் ஆயிரம் நிகழ்வுகள்... ஆனாலும் அந்த மனித தெய்வம் எனக்கு உணவளித்து "அண்ணன்' என அழைக்க வைத்த நாள்... என் வாழ்நாளில் மறக்கவே முடியாத பொன்னாள்.

சிவாஜி சாரை தொட்டுப் பார்த்தபோது...

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

________

பெரிய இடத்து சமாச்சாரம்!

cc

னக்கு மிகவும் பிடித்த படங்களில் மதுரை வீரனும் ஒன்று. வெள்ளிவிழா கண்ட படம். எம்.ஜி. ஆருக்கு பெரும் புகழ் சேர்ந்த படங்களில் இதுவும் ஒன்று. இதனை இயக்கியவர் டி.யோகானந்த் அவர்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ராமாராவ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல வெள்ளிவிழா படங்களைத் தந்தவர். இவர் இலங்கையில் தமிழ் படங்களின் பெரிய விநியோகஸ்தரும், பல தியேட் டர்களின் உரிமையாளருமான சினிமாஸ் குணரத்தினம் அவர்களின் நெருங்கிய நண்பராவார். அந்த குணரத்தினம் கம்பெனியில் பணியாற்றிய தூத்துக் குடியைச் சேர்ந்த பெர்னாண்டோ என்பவர், சிவாஜி சாரை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பி சென்னைக்கு வந்தார். அவர், தான் தயாரிக்க விருந்த படத்துக்கு யோகானந்த் அவர்களை இயக்குநராக ஒப்பந்தம் செய்தார். அதற்கு காரணமாக இருந்தவர் சிவாஜி சார் என்பதை பின்னாளில் தெரிந்துகொண்டேன். அந்தப் படம் "தங்கைக்காக'. அது நூறு நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. அடுத்து "ராணி யார் குழந்தை?' என்ற படத்தை அவர்களுக்காக எழுதினேன். அதன்பின் மகாலிங்க புரத்திலுள்ள என் அலுவலகத்துக்கு எதிர்வீட்டை யோகானந்த் அவர்கள் வாடகைக்கு எடுத்து திரு.குணரத்தினம் அவர்கள் உதவியோடு சிவாஜி, கே.ஆர்.விஜயாவை வைத்து "கிரகப்பிரவேசம்' என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.

அதற்கடுத்து சேம்பர் நடிப்புப் பள்ளியில் மாணவனாக இருந்த சிரஞ்சீவி அவர்களையும், கே.ஆர்.விஜயா அவர்களையும் வைத்து படம் இயக்க விரும்பினார். அன்று புதுமுகமாக வந்த சிரஞ்சீவி அவர்கள் இன்று ஆந்திராவின் மெகா ஸ்டார். அன்று அவர் தமிழில் யோகானந்த் இயக்கத்தில் நான் எழுதிய மிகவும் புதுமையான கதையில் அறிமுகமானார். அந்தப் படத்துக்கு நான் வைத்த பெயர்தான் "பெரிய இடத்து சமாச்சாரம்'. ஏனோ அந்தப் படம் முடிவடையும் தருவாயில் நிறுத்தப்பட்டது. அந்தப் படம் மட்டும் முடிந்து வெளியாகிருந்தால் சிரஞ்சீவி அவர்கள் தமிழ்நாட்டிலும் மெகா ஸ்டார் ஆகியிருப்பார். மிகவும் திறமையான நடிகர் என்பதை அப்பவே நான் புரிந்துகொண்டேன். அதன்பின் அவரோடு ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக் ஷன்ஸ் தயாரிப்பான "சங்கர்ஷ்னா' என்ற தெலுங்குப் படத்தில் கதை -திரைக் கதை ஆசிரியனாக பணியாற்றி னேன். அந்தப் படத்தில் விஜயசாந்தி கதாநாயகியாக நடித்தார். படம் வெள்ளிவிழா கண்டது. தமிழில் "இடி முழக்கம்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றிபெற்றது.