(2) ஒரு கதை... படமான கதை!
விஜயகுமார் -ரஜினி -ஸ்ரீப்ரியா நடிப்பில் நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்கிய படம் "மாங்குடி மைனர்'.
முதல்நாள் படப்பிடிப்பு முடிந்தபோதே, கே.என்.சுப்பையா, ஹைதராபாத் வந்து என்னைச் சந்தித்தார். "இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் காப்பிய எனக்கு குடுத்துடுங்க'' என மிகக்குறைவான விலைக்குக் கேட்டார்.
ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட திட்டமிட்டிருந்த நான், எதிர்பார்த்திருந்த ஃபைனான்ஸ் தாமதத்தால் தடுமாறிக் கொண்டிருந்தபோது, கே.என்.சுப்பையா கேட்டது நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் இந்தப் படத்தை, திட்டமிட்டபடி முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று 5 லட்ச ரூபாய்க்கு ஃபர்ஸ்ட் காப்பியைக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். அந்தப் படம் 50 லட்ச ரூபாயை வசூலித்துத் தந்தது.
இந்த சமயத்தில் ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான "சங்கர் குரு' படத்திற்கு நான்தான் கதை -திரைக்கதை -வசனம் எழுதிக் கொடுத்தேன். அதைத்தாண்டி, "சங்கர் குரு' படத்தின் தெலுங்கு ரைட்ஸை விற்பனை செய்துதரும் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தது ஏவி.எம். நிறுவனம். அதன்படி தெலுங்கில் விற்றுக் கொடுத்தேன். "சங்கர் குரு' படம் வெள்ளிவிழா கண்டது.
அந்தச் சமயம் ஏவி.எம். சரவணன் என்னிடம், "ஒரு அருமையான கதைய ரெடிபண்ணிட்டு வாங்க. கதை நல்லா அமைஞ்சா அதைப் படமாக இயக்கும் வாய்ப்பையும் உங்களுக்குத் தர்றேன்'' என்றார். பல கஷ்டங்கள் பட்டு பல வெற்றிப் படங்களைக் கொடுத்த பின்னால், ஏவி.எம். சரவணன் கொடுத்த இந்த வாய்ப்பு எனக்கு மனதிலே ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியது. அந்த மகிழ்ச்சியோடு மிகக்குஷியான மனநிலையில் ஒரு புதுமையான கதையை எழுதுவதில் ஈடுபட்டேன்.
10 நாட்களில் கதையை எழுதி, திரைக்கதையையும் அமைத்துவிட்டேன். மனதிற்குள் திரைக்கதை காட்சிகளை ஒரு திரைப்படம் போல ஓடவிட்டுப் பார்த்தேன். பொழுதுபோக்கு அம்சம், உணர்ச்சிமிகுந்த காட்சிகள், உறவுப் போராட்டம்... என ஒரு வெற்றிப்படத்திற்குரிய அம்சங்கள் இருந்தது. அந்த மனநிறைவோடு ஏவி.எம். சரவணனை சந்தித்து, கதை -திரைக்கதையை விவரித்துச் சொன்னேன். முதல் வரியிலிருந்து இறுதிவரி வரை நான் சொல்லச் சொல்ல சரவணன் சார் மிக ஆர்வத்தோடு கேட்டார். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
"கதை மிக அருமையாக இருக்கிறது. "சங்கர் குரு' படத்தை எடுத்த டீமை வைத்து இந்தக் கதையை எடுத்தா பெரிய அளவில் பிசினஸ் ஆகும்'' என்றார் சரவணன்.
நான் உடைந்துபோய்விட்டேன்.
ஏனென்று வாசகர்களுக்குத் தெரியும்.
நான் டைரக்ட் பண்ண வேண்டும் என்பதற்காக; ஏவி.எம்.மிற்கு எத்தனையோ வெற்றிக் கதைகளை நான் கொடுத்திருந்தாலும், ஏவி.எம்.மில் நான் இயக்கும் முதல்படம் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக அந்தக் கதையை உருவாக்கிச் சொன்னேன். ஆனால் தங்கள் நிறுவனத்தின் முந்தைய வெற்றியையும், வியாபாரத்தையும் மனதில் வைத்து சங்கர் குரு யூனிட்டை வைத்து படத்தை எடுக்க விரும்பினார் சரவணன் சார்.
நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் "நாளைக்கு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு என் அலுவலகம் நோக்கிச் சென்றேன். என் கண்கள் குளமாகியிருந்தது. என் அலுவலகத்தில் அமர்ந்தேன். என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு நேரம் அழுதேன் என்றுகூட தெரியவில்லை.
என்னைத் தேற்றிக்கொண்டு, கடிகாரத் தைப் பார்த்தேன்... மணி இரவு 9:00.
ஒரு அழுத்தமான முடிவோடு அலுவல கத்தை மூடிவிட்டு காரை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
வித்யோதயா காலனிக்கு வண்டியை விட்டேன். அங்கு தமிழ் -தெலுங்கில் புகழ்பெற்ற ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் வீட்டு வாசலில் காரை நிறுத்தினேன். (ராமாநாயுடுதான் என்னை "மதுர கீதம்' படம்மூலம் முதல்முதலில் இயக்குநராக்கினார்) வாட்ச்மேனிடம் "சாரை பார்க்கணும்'' என்றேன்.
"ஐயா தூங்கப் போயிட்டாரே...'' என்றார் மூடப்பட்ட கேட்டின் முன்பு நின்றிருந்த வாட்ச்மேன்... தயங்கித் தயங்கி.
எனக்கு ராமாநாயுடு சாரை பார்க்காமல் திரும்பப் போகவும் மனசில்லை. தூங்கச் சென்ற அவரை தொந்தரவு செய்யவும் மனசில்லை. சில நொடிகள் யோசித்தபடி நின்றேன். என் அதிர்ஷ்டம்... மாடி ஜன்னல் வழியாக ராமாநாயுடு சார், என்னைப் பார்த்துவிட்டு மாடிப்படிகளில் தடதடவென இறங்கி வந்து, வாட்ச்மேனிடம் கேட்டை திறக்கச் சொல்லி என்னை உள்ளே வரச் சொன்னார்.
நான் அவரின் அருகே சென்றேன். என் முகத்தைப் பார்த்தவர், "ஏதாவது பிரச்சினையா? என்ன வேணும் குகநாதன்?'' என்று பரிவோடு தெலுங்கில் கேட்டார்.
இரவு 10 மணியை நெருங்குவது பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை.
"ஒரு கதை செல்றேன், நீங்க கேக்கணும்''
"காலைல கேக்குறேனே...''
"இல்ல... நீங்க இப்பவே கேக்கணும்... ப்ளீஸ்''
நான் அழுத்தமாகச் சொன்னதைப் புரிந்து கொண்டார். வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று பெட்ரூமுக்கு முன்பாக இருந்த சிறிய ஹாலில் அமரச் சொல்லி அவரும் அமர்ந்தார்.
"சொல்லுங்க...'' என்றார்.
கதையைச் சொன்னேன்.
முழுவதையும் ஆர்வம் குறையாமல் கேட்டவர், "ரொம்ப நல்லாருக்கு குகநாதன். வெங்கடேஷை வச்சு தெலுங்குல பண்ணலாம். நீயே டைரக்ட் பண்ணு'' என்றார்.
(டி.ராமாநாயுடுவின் மகன்தான் தெலுங்கின் பிரபல ஹீரோ வெங்கடேஷ்)
வெங்கடேஷை வைத்து தெலுங்கில் பண்ணச் சொன்னதும், என் முகம் மாறியது. நான் மௌனமானேன்.
ராமாநாயுடு சார் கேள்விக்குறியோடு என்னைப் பார்த்தார்.
"என்னப்பா?'' என்றார்.
உடனே நான், "மதுர கீதம்' படத்தை 5 லட்ச ரூபாய்ல முடிச்சுக் கொடுத்தேன். இப்ப நான் சொன்ன கதையை 12.5 லட்ச ரூபாய் செல வுல எடுத்துத் தர்றேன்... தமிழ்ல'' என்று அந்த "தமிழ்'ல என்பதற்கு அழுத்தம் கொடுத்தேன்.
முதலில் தயங்கிய அவர், என்னோட உணர்வுகளை உற்றுக் கவனித்து... "நீ நாளைக்கு காலைல ஆபீசுக்கு வா, பணத்தை வாங்கிக்க... தமிழ்லயே எடு'' என்றார்.
அதன்படியே மறுநாள் ஆபீசுக்குப் போனேன்.
ஒரு சூட்கேஸில் பணத்தை வைத்து என்னிடம் கொடுத்தார் ராமாநாயுடு சார்.
"இதுல 3 லட்ச ரூபாய் இருக்கு. ஷூட்டிங்க ஆரம்பி... பணம் தேவைப் படுறப்பல்லாம் வந்து வாங்கிக்க'' என்றார். அத்துடன் விஜயா லேபுக்கு போன் செய்து, 45 கலர் கோடாக் ஃபிலிம் ரோல்களை கொடுக்கச் சொன்னார்.
நான் மிகுந்த மகிழ்ச்சியோட பணத்தை வாங் கிக்கொண்டு புறப்பட் டேன்.
நான் வேண்டு மென்றே ஏவி.எம். ஸ்டுயோவில் அந்தப் படத்திற்கு பூஜை போட்டு, படப் பிடிப்பை நடத்தி னேன்.
அந்தப் பட மும்... கதையும்...!
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்