(3) கதை LOW Class வசூல் Class!
"ஒரு வித்தியாசமான கதையை ரெடி செய்துகொண்டு வாருங்கள்; நீங்களே டைரக்ட் செய்யுங்கள்'' என ஏ.வி.எம். சரவணன் சார் சொன்ன தால், அதன்படி தயார் செய்துகொண்டு போன கதையை, "சங்கர் குரு' டீமை வைத்து இந்தப் படத்தை இயக்கலாம்' என சரவணன் சொல்ல, நான் அப் செட் ஆகி, தயாரிப்பாளர் டி.ராமாநாயுடு விடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர் என்னையே இயக்குநராக்கி படத்தை தயாரிக்க முன்வந்தார்.
வேண்டுமென்றே ஏவி.எம். ஸ்டுடியோவி லேயே படத்திற்கான பூஜை போட்டேன். ரகுவரனை கதாநாயகனாக நடிக்க வைத்து நான் ராமாநாயுடு சாரிடம் சொன்னபடி, பன்னிரெண் டரை லட்ச ரூபாயில் படத்தை முடித்துக் கொடுத்ததும்... அவர் என்னைப் பாராட்டியதுடன், "பிற மொழிகளில் இந்தப் படத்தை நாம் சேர்ந்தே பண்ணலாம்'' என்றார்.
அந்தப் படம்... "மைக்கேல்ராஜ்'. ரகுவரன், விஜயகுமார், சரத்பாபு, ஜெய் கணேஷ், செந்தில், மாதுரி, "கோழி கூவுது' விஜி, "சங்கராபரணம்' ராஜலட்சுமி, சுமித்ரா, அப்போது சிறுமியாக இருந்த பேபி ஷாலினி உட்பட பல நட் சத்திரங்கள் அந்தப் படத்தில் நடித்தனர். "மைக்கேல்ராஜ்' படக் கதையை உங்க ளுடன் பகிர்ந்துகொள் கிறேன்.
சென்னையில் இரவு நேரத்தில் வீதியிலே மயங்கி விழுந்த ஒரு பெண்ணை (சாரதா-ராஜ லட்சுமியை) சிலர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, கிராமத்திலிருக்கும் அவரது தாத்தாவுக்கு சேதி சொல்லி அனுப்புகிறார்கள். தாத்தா வந்து சேர்ந்ததும் அவரை இரண்டு அதிர்ச்சியான சம்பவங்கள் பதைபதைக்க வைக்கிறது. அவள் பழைய ஞாபகம் ஏதுமின்றி சித்தம் கலங்கியவளாகவும், திருமண மாகாத அவள் கர்ப்பிணியாகவும் இருக்கிறாள். அவளை கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே அவளுக்கு பெண் குழந்தை (பேபி ஷாலினி) பிறக்கிறது. வளர்ந்து, பள்ளியில் சேர்க்கப்பட்ட அந்தச் சிறுமி தேவி "அப்பன் பேரு தெரியாதவள்' என அவமானப்படுத்தப்படுகிறாள். இதனால் வேதனையடைந்த சிறுமி, "தன் அம்மா சென்னை யில் சில வருடம் வேலை பார்த்ததால்... தன் அப்பா சென்னையில் இருக்கலாம்' என்கிற நம்பிக்கையில், தான் சேர்த்து வைத்த பணத்தை உண்டியலுடன் எடுத்துக்கொண்டு சென்னை வருகிறாள்.
"காசு கொடுத்தா போதும்... எந்த வேலையாயிருந்தாலும் மைக்கேல் (ரகுவரன்) செஞ்சுடுவான்' என சேரிப்பக்கம் பலரும் பேசுவதை சிறுமி கேட்கிறாள்.
மைக்கேலை குடிசைப் பகுதியில் பார்த்ததும் தன் உண்டியலை உடைத்து, அதிலிருந்த காசுகளை கைகளில் ஏந்தி, மைக்கேலிடம் நீட்டி... "காசு கொடுத்தா நீங்க என்ன வேணாலும் செய்வீங்கன்னு பேசிக்கிட்டாங்க. எனக்கு என் அப்பாவை கண்டுபிடிச்சுக் குடுங்க' என்கிறாள்.
"ஏன்? உங்க அப்பா காணாம போயிட்டாரா?' என மைக்கேல்ராஜ் கேட்க... "என் அப்பா யாருன்னே எனக்குத் தெரியாது' எனச் சொல்லி, தன் குடும்பக் கதையை விவரிக்கிறாள் சிறுமி.
இதைக் கேட்டதும் மனம் இளகிய மைக்கேல், சிறுமியை தன் குடிசையில் தங்கவைக்கிறான். சிறுமியின் கதை போன்றதுதான் மைக்கேலின் வாழ்க்கைக் கதையும்.
கிராமத்தில் வசிக்கும் ஒரு அழகான கிறிஸ்தவப் பெண் மேரியை (சுமித்ரா) பணக்காரரும், கடத்தல் மன்னனுமான லிங்கம் (ஜெய்கணேஷ்) மயக்கி, சென் னைக்கு அழைத்து வந்து, ஒரு தனி வீட்டில் குடிவைக்கிறான். மேரி கர்ப்பமடைகிறாள். அதன் பிறகுதான் தன் கணவன் ஏற்கனவே திருமணமானவன் என்பது மேரிக்கு தெரிய வருகிறது. தான் சட்டபூர்வ மனைவியல்ல... "வைப்பாட்டி' என்பதும் அவளுக்குப் புரிகிறது. ஆனால் தன் மகன் மைக்கேலின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறாள் மேரி.
ஒருநாள்... தங்கத்தை கடத்தி வரும் லிங்கத்தை போலீஸ் அதிகாரி துரத்தி வர... அதிகாரிக்கு தங்கத்தை லஞ்சமாக தர, அவர் ஏற்க மறுத்த நிலையில் மேரியைப் பார்த்ததும் சபலப்பட... போலீஸ் அதிகாரியை மேரியிடம் விட்டுவிட்டு, லிங்கம் தங்கத்துடன் தப்புகிறான்.
போலீஸ் அதிகாரி, மேரியை பாலியல் பலாத்காரம் செய்வதை, பள்ளிவிட்டு வந்த மைக்கேல் ஜன்னல் வழியே பார்க்கிறான். தற்கொலைக்கு முயன்ற தாயையும் தடுக்கிறான். தன் மகனுக்காக தற்கொலை முடிவை கைவிடும் மேரி, மகனை அழைத்துக்கொண்டு லிங்கத்தை சந்தித்து, அவனை செருப்பால் அடித்துவிட்டு தனக்கும், மகனுக்குமான உரிமையை அவனிடம் கேட்கிறாள்.
இதனால் அவளை தன் கெஸ்ட்ஹவுஸிற்கு அனுப்பி வைத்து, அந்த போலீஸ் அதிகாரி மூலம் விபச்சார வழக்கில் மேரியை ஜெயிலுக்கு அனுப்புகிறான். மைக்கேலையும் "நீ எவனுக்குப் பொறந்தியோ?' என கைவிட்டுவிட்டுப் போகிறான் லிங்கம்.
காலங்கள் கடந்து போகின்றன. மைக்கேல் அந்த ஏரியாவில் பெரிய ரௌடி யாகிறான். ஜெயிலிலிருந்து திரும்பிய மேரி உள்ளாடை தயாரிப்பு கம்பெனி தொடங்கி வெற்றிகரமாக நடந்துகிறாள்.
ஒருநாள் மேரியிட மிருந்து அழைப்பு! அங்கே போன மைக்கேலுக்கு தன் தாய் மேரியை அடையாளம் தெரிகிறது. ஆனால் மேரிக்கு தன் மகன் மைக்கேலை அடையாளம் தெரியவில்லை.
"மைக்கேல் ஒரு கொலை செய்யணும்! எவ்வளவு பணம் வேணும்?''
"என்ன விஷயம்...?''
"அது தேவையில்லாத விஷயம்'' எனச் சொல்லி தன்னை மோசம் செய்த கணவன் போட்டோவைக் கொடுக்கிறாள்?
அப்பாவின் படத்தைப் பார்த்த மைக்கேலுக்கு அதிர்ச்சி!
மைக்கேல், தன் தாயின் விருப்பப்படி தன் தந்தையைக் கொன்றானா? தன் அப்பாவைக் கண்டுபிடித்துத் தரச் சொன்ன சிறுமி தேவியின் அப்பாவை கண்டுபிடித்துக் கொடுத்தானா? என்பது மீதி கதை!
என்னைப் பொறுத்தவரை "மைக்கேல்ராஜ்' படத்தின் காட்சிகளும், கதாபாத்திரங்களும் அந்த காலகட்டத்தில் மிகப் புதுமையானவை. வலுவான சுவாரஸ்யமாக அமைக்கப்பட்ட திரைக்கதை, கருத்தாழத்துடன் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போக வைத்த வசனங்கள், அதைவிட முக்கியமாக நான் கதை எழுதிய நூறாவது படம்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட "மைக்கேல்ராஜ்' படம் வசூலை அள்ளியது. வெற்றிப் படமாகவும் அமைந்தது. சினிமா இண்டஸ்ட்ரியிலும் படத்தின் வெற்றி பேசப்பட்டது. சென்னை சத்யம் தியேட்டரில் சினிமா பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்தனர். அதில் முக்கியமானவர்கள் இருவர். பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் தெலுங்குப் படவுலகின் தயாரிப்பாளரும் -டைரக்டருமான தாசரி நாராயணராவ் ஆகிய இருவரும்தான் அவர்கள்.
படம் பார்த்து திருப்தியான போனிகபூர், நேராக ராமாநாயுடு சாரின் ஆபீசுக்கு வந்தார். "என் தம்பி, நடிகர் அனில்கபூருக்கு பொருத்தமானதாகவும், வித்தியாசமானதாவும் இந்தக் கதை இருக்கும். நீங்க இந்தியில் இந்தக் கதையை எடுக்கலேன்னா... எனக்கு ரைட்ஸ் கொடுங்க; நானே எடுக்குறேன்'' என்று கேட்டார்.
சுதாரித்துக்கொண்ட ராமாநாயுடு சார் "நானே எடுக்குறேன்'' எனச் சொல்லிவிட்டு, என்னை அழைத்துப் பேசினார்.
"இந்தப் பட யூனிட்டை வைத்து தமிழில் படம் எடுக்கப் போகிறாயா?, இல்லேன்னா "மைக்கேல்ராஜ்' கதையை வேற மொழிகள்ல நீயே டைரக்ட் பண்றியா?'' என கேட்டார்.
நான் என் முடிவை யோசித்துச் சொல்வதற்குள்... தொடர்ந்து இரண்டு படங்களில் சரிவைச் சந்தித்திருந்த தாசரி நாராயணராவ் என்னிடம் வந்து, "மைக்கேல்ராஜ் கதையை தெலுங்கில் வெங்கடேஷை வைத்து எடுக்க விரும்புகிறேன்'' என்றார்.
அதனால் நான் அவருக்காக விட்டுக்கொடுத்தேன்.
இந்தியில் அனில்கபூர் நடிக்க "ரக்வாலா' என்ற பெயரில் படமானது. என்னிடம் தெலுங்குப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய முரளிமோகன் ராவ் இயக்கினார். படம் வெள்ளிவிழா கண்டது. தெலுங்கில் "பிரேம புத்ருடு' என்ற பெயரில் வெங்கடேஷை வைத்து, தாசரி நாராயணராவ் இயக்கினார். இதுவும் வெள்ளிவிழா கண்டது.
தொடர்ந்து பல்வேறு இந்திய மொழிகளில் எனது "மைக்கேல்ராஜ்' கதை படமாகி வெற்றிபெற்றதை திரையுலகம் அறியும்.
"மைக்கேல்ராஜ்' பட வெற்றிவிழாவில் கலந்துகொண்டு கலைஞர் சொன்னது...
(திரை விரியும்...)
படம் உதவி: ஞானம்
_______________
கலைத்தொழில் செய்பவர்களும் மனிதர்கள்தான், அவர்களால் சமுதாயத்துக்குப் பெரும் பயன் உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய இயக்கம் திராவிட இயக்கம். பொதுவாழ்வில் உள்ளவர்களை கலையுலகிற்கும் கலைவாழ்வில் உள்ளவர்களை பொதுவாழ்வுக்கும் பெருமளவில் அழைத்து வந்து அவர்களை "கலைஞர்கள்' என அழைக்க வைத்து ஏற்றம் தந்தவர் அண்ணா!