90 வெட்கமாயிருக்காதா?
நாம விரும்பின தொழிலை நமக்கு விருப்பமானவங் களோட செய்தோம். அவங்க இல்லாத காலத்திலே விருப்பமில்லாதவங்ககூட செய்யவேண்டிய கட்டாயம் வந்திச்சு... இருந்தாலும் செய்தோம். ஆனால் எந்தக் காலத் திலும் நம்மளை விரும்பாதவங்ககூட தொழில் செய்ய முடியாது. பத்துப்படி கறக்கிற பசுவை பாதுகாப்பா வெச்சுக்குவாங்க... அது பாதிப்படிதான் கறக்கும் என்ற நிலை வந்திட்டா, அதை அடிமாட்டுக்கு தள்ளிடுவாங்க. இத்தகைய மனிதர்கள் அரசியலிலும் சினிமாவிலும் அதிகம். இதை செய்யிற வங்க ஒரு விஷயத்தை மறந்திடுறாங்க...! ஒரு நாளைக்கு அவங்களுக்கும் இந்த நிலை வந்தே தீரும். நமது நினைவுகளில் எப்போதும் இருக்க வேண்டிய எண்ணம் இதுதான்... "ஒருவரை மன்னிக்கும் அளவுக்கு நல்லவராய் இருங்கள், ஆனால் மீண்டும் அவரை நம்பும் அளவுக்கு ஏமாளிகளாக இருக்காதீர்கள்'' காலையில் எழுந்தவுடன் மலச்சிக்கல் இருக்கப்படாது! அதே மாதிரி நெத்தி சுத்தமா இருக்கணுங்கிறதுக்காக... பக்தி வேணாம்னு சொல்லலாமா?
நான் சில சினிமா பிரபலங்களுக்கு நன்றி சொல்லி இந்த கட்டுரையை எழுதப் போறேன்னு சொன்ன உடனே... நண்பர் ஒருவர் "உங்க image க்கு இது வெட்கக்கேடான விஷயமா இருக்காதா?'' எனக் கேட்டார். "image ஆ... எனக்கா?...'' நான் சினிமாவில் சேரப் போறேன்னு சொன்னதும் என் தந்தையார் "கூத்தாடுவதும் குண்டி நெளிப்பதும் எதுக்குமே லாயக்கில்லாதவன் செய்யிற தொழில்... அதுக்கா போகப் போறேன்னு?' கேட்டாரு. அவர் கேட்டதில் தப்பில்லே... அந்தக் காலத்திலே கூத்தாடிங்க என்றுதான் சொல்வார்கள். பேரறிஞர் அண்ணா காலத்தில் தான்... அவர் கூத்தாடிகளை, கலைஞர்கள் என்ற கவுரவமான பெயர் சொல்லி அழைக்க வைத்தார்.
பல பேருக்கு நாம நல்லது செய்திருப்போம்... அதை தம்பட்டம் அடிச்சா... அது தப்பு! மத்தவங்க நமக்கு செய்ததை சொல்லாமலிருப்பது சினிமாத்தனத்துக்கு சரியா இருக்கலாம்... மனிதாபிமானம் இருப்பவர்களுக்கு அது குற்றமாகப்படும். சிற்றின்பங்கள் பால் கவனம் திரும்பினால்... அதுவே நமக்கு வலிகளை பிரசவிக்கும் கருவறையாக உருவாகும். இது கலை உலகில் பல மாமலைகளை கரைத்து காணாமல் போகச் செய்திருக்கிறது. அதேபோல் மேடையில்
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு''
என்ற குறளை உரக்கச் சொல்வார்கள்...! ஆனால் அவர்களின் நிஜ வாழ்க்கையில்... நன்றியை பல இடங்களில் கொன்று புதைத்து, புதைத்து... அந்தப் படிகளில் ஏறி தங்கள் லட்சியங்களை அடைந்தவர்கள் அரசியலிலும் உண்டு... சினிமாவிலும் உண்டு... சினிமா என்பது என் வரை எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொழில். "பொன்னியின் செல்வனை' படமாக எடுக்கலாம். எடுத்தவரால் அதை எழுத முடியுமா? வள்ளுவன் வாசுகி வாழ்க்கையை அல்லது பாரதியார் வாழ்க்கையை படமாக்க நம்மால் முடியும். ஆனால் குறளையோ, பாரதி கவிதைகளையோ நம்மால் எழுத முடியுமா? நமது படைப்புகளில் சமூகத்துக்கு வேண்டிய சில நல்ல கருத்துக்களை சொல்ல முடியும். We are film makers... Not film creators. நமது தொழில் நிழல்... அது நிஜமல்ல.
2019இல் "அல்சர்' பாதிப்பினால் மருத்துவ மனையில், வாழ்க்கையில் முதல் தடவையாக அனுமதிக்கப்பட்டேன். நான் காரோ, வீடோ, தோட்டமோ, பள்ளிக்கூடமோ... எதையும் நானாக வாங்குவதில்லை. அந்த ஆசைகளுக்கும் நான் அடிமைப்பட்டதில்லை. ஆனால் என் தம்பியும், என் மனைவியும் இதில் கெட்டிக்காரர்கள். உடல்நிலை பாதித்த நேரம் ஒரு படத்தையும் ஆரம்பித்திருந்தேன். அதில் ஒன்றரைக் கோடிக்கு மேல் செலவானது. கையும், வங்கிக் கணக்கும் வற்றிப் போயிருந்தது. அந்த சமயத்தில் நெடு நாளைய நண்பர் எனக்கே தெரியாமல் என் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியிருந்தார். தெரிந்தபோது நன்றி சொல்லப் போனேன். என் படத்தை விற்றுத் தர பெருமுயற்சி செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இப்படியும் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது கூடப் பெரிதல்ல, நான் புறப் படும் போது வாசல் வரை வந்து "நீங்கள் எதைக் கேட்டாலும் நான் செய்வேன்'' என்றார். அப்படிச் சொன்னவர் தயாரிப்பாளர் "கலைப்புலி' தாணு... நான் இவருக்கு நன்றி சொல்லாதிருக்கலாமா?
அதேபோல்... என் diet restrictions நிறைய இருந்திச்சு. அதெல்லாம் தேடி வாங்கணும். நல்லதா வாங்கணும். அதேபோல் நான் க்ஷங்க் ழ்ங்ள்ற்ல் சில மாதங்கள் இருந்தேன். அந்த நேரத்தில் சாமான்கள் வாங்க வருவது, வரிகள் கட்டுவது, வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது போன்ற வீட்டுக்கான வேலைகள் அனைத்தையும் என் அன்புக்குரிய சாமிநாதன் பார்த்துக் கொண்டார்.
என் உடல்நலம் பற்றி விசாரிக்க வந்த என் நீண்ட கால நண்பர் எஸ்.ஏ.சந்திரசேகர், என் படத் தை பார்க்க வேண்டும் என்று கேட்டார். படத்தை பார்த்துவிட்டு வந்து சில மாற்றங்கள் செய்தால் சரியாக இருக்கும் எனச் சொன்னதோடு... உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த நிலையில் நீங்க கவலைப்பட வேண்டாம்... நான் பார்த்துக் கிறேன்னு சொன்னார். மறுபடி வந்த போது, என்னென்ன மாற்றங்கள் செய்யப் போகிறேன் என் பதை எழுதிட்டு வந்திருக் கிறேன். படிக்கிறேன் கேளுங்க. உங்களுக்கு ஓ.கே.ன்னா, ஒரு மாசத்திலே எல்லாத்தையும் முடிச்சு புது முதல் பிரதி காட்றேன்னு சொல்லிட்டுப் போனாரு. சூட்டிங், எடிட்டிங், ரீ-ரிக் கார்டிங், கிராபிக்ஸ், புதிதாக ஒரு பாடல் D.B....5.1. எல்லாம் முடித்து முதல் பிரதியை காட்டினார். படத்தின் தரம் பன்மடங்கு அதிகரித்து சிறப்பாக இருந்தது. அதற்கான செலவு முப்பது லட்சங்கள் ஆகி யிருந்தன. "இது என் குருநாதருக்கு நான் தரும் குருதட்சணை'' எனச் சொல்லிவிட்டார் சேகர்.
நான் "பெப்சி'யிலுள்ள இயக்குநர் சங்கத்துக்கு தலைவராயிருந்தபோது... சேகர் படைப்பாளிகள் சங்கத் தலைவராயிருந்தார். அந்த சமயத்தில் இவரை அழைத்துப் பேசி படைப்பாளிகளை மீண்டும் "பெப்சி'யில் இணைக்க முயற்சிகள் எடுத்தேன். அதிலும் வெற்றி கிட்டியது. இப்படி பல இடங்களில் எனக்கு ஆதரவு காட்டிய சந்திரசேகரும் என் நன்றிக்கு உரியவர்.
மாண்புமிகு முதல்வர் ஏ.வி.எம். வந்தபோது ஏற்பட்ட சில பிரச்சினையால் மூன்றரை ஆண்டு களாக அங்கே போவதை நிறுத்திக் கொண்டேன். ஆனால் ஏ.வி.எம்.குகன் விடாப்பிடியாக நின்று... தன் தந்தைக்காக நடந்த ஒரு தேநீர் விருந்துக்கு அழைத்துப் போய், என் மனக்கஷ்டத்தை நீக்கி மீண்டும் என் தாய் வீடான ஏ.வி.எம்.முக்கு போக வர வைத்துள்ளார். அறுபது வருடங்களாக நான் பணியாற்றிய ஏ.வி.எம்.முக்கு மறுபடியும் போய் வருவதில் எனக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிலும் குகன் அமைத்திருக்கும் கோவில், மாலை நேரத்தில் போய் வருவதற்கு நல்ல பக்திக் கூடமாக வாய்த்திருப்பது என் ஆன்மிக நினைவுகளை வளர்க்க நல்ல உதவியாக இருக்கிறது. இந்த என் உணர்வை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அதற்காக குகனுக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இப்போதெல்லாம் அந்தக் கோவிலில் போய் அமர்வது புதிய தெம்பை யும், புதிய சிந்தனைகளையும் வளர்க்கிறது. அங்கே ஏ.வி.எம். சரவணனையும் சந்திக்க முடிகிறது.
கல்லூரியில் படிக்கும்போதே சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனியை ஆரம்பித்து, பல நாடகங் களை நடத்தி, நடித்தும் வந்தேன். அந்தக் காலத்தி லேயே எனக்கு நண்பராக வாய்த்தவர் பாலமுருகன். என் பெரிய வெற்றிப்படமான ராஜபார்ட் ரங்கதுரையை எழுதியவரும் அவரே. அவர் மகனை சின்ன ஸ்ரீகாந்தாக நடிக்க வைத்தோம். அதன்பின் அவர் பெரிய கதாசிரியராக ஆந்திராவில் கொடி கட்டிப் பறக்கிறார். ஆனால் என்னை மறக்கவில்லை. மைலாப்பூரில் இசைக்கவி ரமணன் நிகழ்ச்சியில் என்னை கலந்துகொள்ளச் செய்தார். பல நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொண்டிருக் கிறோம். இப்போதும் என்னை மீண்டும் தெலுங்குப் படங்கள் செய்ய இழுத்துப்போக முயற்சிகள் செய்த வண்ணம் இருக்கிறார். பூபதிராஜா பேசுவது, பழகுவது, அடிக்கடி போன் பண்ணி விசாரிப்பது எல்லாமே... எனக்கு வியப்பாகவே இருக்கும். ஒரு விழாவில் "தில்லானா மோகனாம்பாள்' கதை ஆசிரியர் சுப்புவின் மகள் என்னைப் பார்த்து "நீங்க எம்.கே.ராதா மாதிரி இருக்கீங்க'' என்று சொன் னாங்க. என் மனைவி கூட அப்படி சொல்வதுண்டு. அன்றிரவு பூரா சந்திரலேகாவும், அபூர்வ சகோதரர் படங்களே என் மனதில் ய்ர்ய்-ள்ற்ர்ல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந் தன. பூபதி எனக்கு பிள்ளை இல்லை என்ற குறையைப் போக்கும் பிள்ளையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
சினிமாத் தொழிலில் அறுபது வருடங்களை போக்கிவிட்டேன். ஆனால் எனக்கு உதவிய நல்ல உள்ளங்களைப் பற்றி சொல்வது அவமானம் என்ற கருதினால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் நான் செய்யத் தயாராக இருக்கிறேன்.
2019க்கு பின்னால் திரையுலகில் என் வேகம் குறைத்தது. அதனால் Face bookல் எதையாவது கைப்பட எழுதி தினமும் நண்பர்களுக்கு அனுப்பு வேன். அதற்கு நல்ல responseஇருந்தது. அதில் சில அரசியல் ஆய்வுகள், விமர்சனங்கள் எனவும் எழுதினேன். அதில் சில முரசொலியில் வெளிவந் தன. அதை யார் வெளியிட உதவியது எனத் தெரிந்து... அவரை சந்தித்து நன்றி சொல்லிப் போனபோது... அந்த நல்லவர் தொடர்ந்து எழுதச் சொன்னார். மாணிக்க குணமுள்ள அவர் விருப்பப்படி மூன்று, மூன்றரை வருடங்கள் முரசொலியில் எழுதினேன். அதன் பின் நக்கீரனில் எழுதும் வாய்ப்பு வந்தது.... தொடர்ந்து எழுதி வருகிறேன். வேறு சில பத்திரிகை, தொலைக்காட்சி பேச்சரங்கங்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன. You tubeல் எமது "சேனல்' நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுக்கெல்லாம் அடித்தளம் அமைத்துத் தந்த அந்த மாணிக்கமானவருக்கும் என்றும் நன்றி யுடையவனாக இருப்பேன். ஏனெனில் இந்த வயதில் "முரசொலி', "நக்கீரன்' மூலமாக தமிழகம் முழுவதும் எனக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் கிடைத் துள்ளார்கள். தினமும் தொலைபேசியில் தங்கள் அபிப்பிராயங்களை சொல்பவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்திருக்கிறது. சினிமா ரசிகர்கள் இருந்தார்கள்... இருக்கிறார்கள். ஆனால் எழுத்துக் காக பாராட்டிப் பேசுவோர்கள் என்னை சிந்திக்க வைக்கிறார்கள். தொடர்ந்து நிறைய வாசிக்கவும், எழுதவும் அவர்கள் தூண்டுகோலாக இருக்கி றார்கள். இது எனக்கு ஒரு புதிய தெம்பைத் தருகிறது. எங்கோ படித்தது தான் ஆனால் எனக்குப் பிடித்தது.
"Why there is pain because there is no pleasure"... those critics who talks to me daily, gives me lot of pleasure.
(தொடரும்)