
(100) காட்சியின் வழியே ஆட்சி -அதிகாரம்!
புரட்சியினால் வென்றெடுக்க வேண்டிய உரிமையை பூஜை, புனஸ்காரத்தினால் அடைந்திட முடியாது என்பது உலக நியதி. அதை மாற்றிக் காட்டிய அதிசய நாடாக நமது இந்திய தேசம் விளங்குகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி நமது தேசப் பிதா சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார். "அகிம்சை' என்ற புதுவழி அவருக்கான போராட்டக் கருவி யானது. அதேபோல் தமிழகத்தில் நிலைத்திருந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்கு பேரறிஞர் அண்ணா கையாண்ட ஆயுதம் பகுத்தறிவு. எழுத்தாகவும், பேச்சாகவும், நாடகமாகவும், சினிமா ஆகவும்... பல ரூபங்களில் பகுத்தறிவானது, பட்டி தொட்டியெங்கும் பாமரனின் சிந்தனையை தூண்டிவிடும் தணலாக, நெருப்பாக பரப்பி விடப்பட்டது. இதில் திரைப்படங்களுக்கும், நாடகங்களுக்கும், பாடல்களுக்கும், வசனங் களுக்கும் முக்கிய பங்குண்டு.
"வேலைக்காரி', "பராசக்தி', "சொர்க்க வாசல்', "நாடோடி மன்னன்', "ரத்தக் கண்ணீர்' போன்ற படங்களில் பங்களிப்பு மறுக்க முடியாத ஒன்று. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் தமிழன் தன்னை மீண்டும் உணர ஆரம்பித்தது திரைப்படக் கொட்டகைகளில்தான். மொழிப் போராட்டத்துக்கான தூண்டுகோல், பகுத்தறிவுவாதிகளின் பேச்சிலும், எழுத்திலும்தான் தொடங்கியது. உலக அதிசயங்களை நடத்திக் காட்டியது நமது கலையுலகம். கூத்தாடிகளை கலைஞர்களாக்கியது. அந்த கலைஞர்களை வீதியில் இறங்கிப் போராடவும் வைத்தது. அந்தக் கலைஞர்களை தேர்தல்களில் வெற்றிபெற வைத்து நாடாளவும் வைத்தது.
"ஆர்ட்டிகிள்-15' என்கிற பிறமொழிப் படம் ஒன்று சில வருடங்களுக்கு முன் வெளியானது. சாதியக் கொடுமைகளையும், அதை எதிர்த்துப் போராடும் அரசு அதிகாரியையும் பற்றிய கதை இது. தெலுங்கில் பல வருடங்களுக்கு முன் நான் எழுதிய கதை படமாக வந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி ஊர்த்தலைவனாகி, ஊர் மக்களின் வாழ்க்கைக்கான நன்மைகளைச் செய்கிறான். இந்தக் கதை மூலம் நான் வலியுறுத்திய விஷயம்... அதிகாரத்தில் இருப்பவர் நல்லாட்சி தருகிறாரா? என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆள்பவரை சாதி கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது என்பதுதான். இந்தப் படம் தெலுங்கில் பெரும் வெற்றி. தமிழில் எடுக்க எவரும் முன்வரவில்லை.
"முதலாளியம்மா' என்ற இன்னொரு என் படத்தின் கதை.
"ஊரைச் சுருட்டி தன் வீட்டு உலையில் போடும் குடும்பம் அந்த முதலாளியம்மா குடும்பம். அவ வேலைக்காரி வேற ஜாதி. ஆனால் விசுவாசம் மிக்க வள். முதலாளியம்மாவுக்காக, தன் உயிரையும் தயங்காமல் கொடுப்பாள். அவளின் விசுவாசத்துக்கும், நன்னடத்தைக்காக வும் வேலைக்காரி மகளை கல்லூரி யில் படிக்க வைக்கிறாள். அவள் கல்லூரியில் சாதிக்கொடுமையை சகிக்க நேரிடுகிறது. ஊருக்கு வரும் அவள் ஊரை திருத்த முற்படுகிறாள். தேர்தலில் முதலாளியம்மாவை தோற்கடித்து ஊர்த்தலைவியாகிறாள். இதனால் தாய் கோப மடைந்து, மகளை வெறுப்பதோடு, முதலாளியம்மா வோடு சேர்ந்து மகளை பழிவாங்க முற்படுகிறாள். ஆனால் தந்தை தன் மகள் பக்கம் நின்று போராடுகிறான். இந்தக் கதையும் வெற்றிகரமாக ஓடியது. அதேபோல் கே.எஸ்.கோபாலகிருஷ்ண னின் "நத்தையில் முத்து', "குறத்தி மகன்' போன்ற சாதிக்கொடுமையை பிரதிபலிக்கும் படங்களை எடுத்தார், வெற்றியும் பெற்றார். தற்போது பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோர் படங்கள்... உந்துசக்தியாக மாறியுள்ளது.

ஈழப் போராட்டம் உச்சநிலையை அடைந்த போது வேல்முருகனோ, சீமானோ, திருமாவோ, சுப.வீரபாண்டியனோ, கவிஞர் மேத்தாவோ, கோவில்பட்டி கோபியோ, வக்கீல் ராவணனோ, கோவை ராமகிருஷ்ணனோ, திருப்பத்தூர் எழிலோ, வீரமணியோ... என்ன குலம், என்ன மதம் என்று கேட்டா ஒன்று சேர்ந்தார்கள். இனம் என்று வரும்போது தமிழர்கள் மதமோ, ஜாதியோ பார்க்கமாட்டார்கள். மொழியென்று வந்தாலும் அப்படித்தான்.
ஆனால் இன்று கலையுலகில் கறுப்புத் தமிழர்களின் படைப்புகள் சிந்திக்க வைக்கின்றன. ஆரிய சூழ்ச்சி வலைகள் ஆங்காங்கே அறுத்தெறி யப்படுகின்றன. தமிழ் மாநிலத்தின் தனிச்சிறப்பே இதுதான். இந்த வளர்ச்சி மற்ற மாநிலங்களில் மந்தமாக இருக்கிறது. அதனால்தான் ஜனநாயக விரோத சக்தி ஒன்றிய அரசை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. "திராவிட மாடல்' எல்லா மாநிலங்களிலும் முழு வளர்ச்சி பெற்றால்... மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி மலரும். அதுமட்டுமல்ல... மண்ணின் பூர்வக்குடி ஆட்சியில் அதிக பங்கை அடைவார்கள். ஜனநாயகம் தழைக்கும், பணநாயகமும் கார்ப்பரேட்டுகளும் கரைந்துபோவார்கள். ஆரியமும், அதன் ஆதரவாளர்களும் அரசு, ஆட்சிப் பக்கம் வர அஞ்சுவார்கள். இதனை அரசியல்வாதிகளினால் மட்டும் செய்ய முடியாது. கலையுலகமும், இலக்கியவாதிகளும், கவிஞர்களும் ஒன்றிணைந்து கைகொடுக்க வேண்டும்.
தாய்க்கொரு பிள்ளை. இது நாகேஸ்வரராவ், லட்சுமி, அஞ்சலிதேவி ஆகியோர் நடிக்க, என் எழுத்தில் டி.ராமராவ் இயக்கத்தில் மாதவி கம்பைன்ஸ் தயாரிப்பில் "சுபுத்ருடு' என்ற பெயரில் வெளியான தெலுங்குப் படத்தின் தமிழ் ரீ-மேக். தமிழில் ஜெய்சங்கர், ஏவி.எம்.ராஜன், சாவித்திரி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் நடித்து, பட்டு இயக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றியடைந்த படம். தெலுங்கில் நூறு நாட்கள் ஓடிய படம். இந்தியில் ராஜேஷ்கன்னா நடிக்க விரும்பிய படம். சில மாதங்களுக்கு முன் ஏவி.எம். சரவணன் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு போன்பண்ணி பாராட்டியதுடன், சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து தற்போதுள்ள நடிக, நடிகையருடன் எடுத்தால் நல்ல வெற்றியைத் தரும் எனச் சொன்னார்.

இது உருவான விதமே ஒரு சுவாரஸ்மான கதை. ஜேயார் மூவிசிலிருந்து என் சொந்த அலுவலகத்தை ஆரம்பித்த சமயம், ஏவி.எம். அவர்கள் என்னைக் கூப்பிட்டு, நீங்கள் ஒரு படம் தயாரியுங்கள் என உற்சாகப்படுத்தினார். அதற்கு என்ன காரணம் என முன்பே விலாவாரியாக எழுதியுள்ளேன். "தயாரிக்க என்னிடம் பணமேது'' என ஏவி.எம்.மிடம் நான் சொன்னபோது, "உங்கள் பணம் எண்பத்து ரெண்டாயிரம் எங்க அலுவலகத்திலே வாங்காமல் விட்டு வச்சிருக்கீங்க. அத்தோடு இன்னும் பதினெட்டயிரம் சேர்த்து ஒரு லட்சம் ஆக்கிடுங்க, மீதி தேவையான மொத்தப் பணத்தையும் நானே தருகிறேன்' என்றார். நானும் தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன். அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது? அந்த சமயத்தில் சொல்லி வைத்தது போல் மாதவி கம்பைன்ஸ் அதிபர் என்னைத் தேடிவந்து நாகேஸ்வரராவ் நடிக்க ஒரு கதை வேணும் என்று கேட்டார். உண்மையாக அப்போது அவருக்கேற்ற கதை என் கையில் இல்லை. ஆனால் கடவுள் எனக்கொரு வழி காட்டினார். இங்கிறுட் பெர்க்மன்னும், அந்தோனி குவின்னும் நடித்த "விசிட்' (யண்ள்ண்ற்) என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். ஒரு இந்திய கதைபோல் அது இருந்தது. எப்படி 'டண்ற்ற்ண்ப்ங்ள்ள் பட்ழ்ங்ங்' என்ற ஆங்கிலப் படத்தை தமிழில் மாற்றி எழுதினேனோ, அதே போல் 'யண்ள்ண்ற்' கதையை சற்று மாற்றி "சுபுத்ருடு' என எழுதினேன். இது ஒரு வில்லனால் உடலுறவுக் குப் பின்னால் கைவிடப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணின் கதை. அவளைக் கைவிடுவதற்கு அவன் செய்த சூழ்ச்சி... அந்தப் பெண் வேறு சில ஆண்களோடும் கள்ளத் தொடர்பில் இருந்ததாக சாட்சிகளோடு ஊர்ப்பஞ்சா யத்து முன்னால் நிரூபிக் கிறான். அவள் ஊரைவிட்டே விரட்டப்படுகிறாள். பதினேழு வருடங்கள் கழித்து அவள் பணத்துடன் வேறு பணக்கார பெண் போல் அதே ஊருக்கு திரும்பி வருகிறாள். தன் பண பலத்தை வைத்து ஊரையே தன் பக்கம் ஈர்க்கிறாள். தன்னை ஏமாற்றிய வில் லனை தனிமைப்படுத்து கிறாள். இறுதியில் அதே ஊரார் வில்லனை கொல்லுமளவு... பணத்தை தானதருமங்கள் செய்து தூண்டிவிடுகிறாள். பழிவாங்குவதே அவளது ஒரே நோக்கம். இதனை மிகச்சிறப்பாக நம்ம ஊர் ஸ்டைலுக்கு மாற்றினேன்... படம் பெரும்வெற்றி. இதற்கு கிடைத்த சம்பளம் ஏவி.எம்.மில் இருந்த பணத்துடன் சேர்க்கப்பட்டு, நான் தயாரிப்பாளராக மூலதனம் ஆகியது.
நக்கீரன் பத்திரிகை ஆதரவில் "சினிமா கொட்டகை' என்ற தலைப்பில் நூறு கட்டுரைகளை முடித்துவிட்டேன். நூற்றுக்கணக்கானோரின் பாராட்டைப் பெற்றேன். இதில் ஒரு இடைவேளை எடுத்துக்கொண்டு... மீண்டும் எழுதுவேன். வாசகர்களை வணங்கி ஒரு சிறு இடைவேளை!
என்றும் நன்றியுடன்...
வி.செ.குகநாதன்
(நிறைவடைந்தது)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-06/ck-t_5.jpg)